உள்ளூர் செய்திகள்

மலையினும் பெரியது எது?

பண்டைத் தமிழகத்தில் தொண்டை நாடானது, இருபத்து நான்கு கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அவற்றில் ஒன்று புலியூர்க்கோட்டம். அக் கோட்டத்தில், குன்றத்தூரில் பதினொன்றாம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியில் பிறந்தவர் சேக்கிழார். பிறந்தவுடன் அவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் அருண்மொழித்தேவன் என்பதாகும். அப்போது தொண்டை நாடு பிற்காலச் சோழர்களின் அரசாட்சிக்கு உட்பட்டிருந்தது. சேக்கிழார் காலத்தில் சோழநாட்டின் அரசராக விளங்கியவர் அநபாயச்சோழன் எனப்பட்ட இரண்டாம் குலோத்துங்கன்.வலிமைமிக்க சோழப் பேரரசிற்கு எதிராகப் பகைவர்களே இல்லாத ஆட்சிக்காலம் அது. அதனால், சோழப்பேரரசன் தன் அவையில் கற்றறிந்தோர் சூழ, கலை இலக்கியங்களில் மூழ்கி இருந்தார். சோழப் பேரவையின் தலைமைப் புலவராக ஒட்டக்கூத்தர் இருந்தார்.ஒருமுறை சோழனுக்கு ஓர் ஐயம் தோன்றியது. அதைத் தம் அவைகளப் புலவர்களிடம் கேட்டார். “மலையினும் பெரியது எது? கடலினும் பெரியது எது? உலகினும் பெரியது எது?” என்பதுதான் அரசருக்குத் தோன்றிய வினா. அரசரின் வினாவினைக் கேட்ட புலவர்கள் விடை தெரியாது திகைத்தனர்.'மலையினும் பெரிதாக என்ன இருக்க முடியும்? அப்படியே இருப்பினும், கடலினும் பெரிதாக எதைக் கூற முடியும்? அவ்விரண்டும் இருப்பினும் உலகத்தைவிடப் பெரிதாக ஒன்றைக் கூறுதல் எங்ஙனம்?' என்று தயங்கினர்.அரசரின் ஐயம், சேக்கிழாருக்குத் தெரியவந்தது. அரசரின் வினாவுக்குரிய விடை திருக்குறளில் இருப்பதைச் சேக்கிழார் அறிவார். அதைத் தம் விடையாக ஓர் ஓலைச்சுவடியில் எழுதி, மன்னரிடம் சேர்ப்பிக்குமாறு கொடுத்தனுப்பினார். 1. மலையினும் பெரியது எது?நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம்மலையினும் மாணப் பெரிது.(தன்னுடைய நிலைகண்டு இயல்பு குறையாமல் அடக்கத்தோடு விளங்குபவனின் தோற்றம், மலையைவிட மிகப் பெரியதாகும்.)2. கடலினும் பெரியது எது?பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்நன்மை கடலிற் பெரிது.(பயன் கருதாமல் செய்த உதவியின் மேன்மையையும் நன்மையையும் கருதி நோக்கினால் அது கடலினும் மிகப் பெரியதாகும்)3. உலகினும் பெரியது எது?காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும்ஞாலத்தின் மாணப் பெரிது.(உரிய காலத்தில் செய்த உதவியெனும் நற்செயல் சிறிய அளவே ஆனாலும், அது உலகத்தைவிட மிகப் பெரியதாகும்).சேக்கிழாரின் விடையால் அகமகிழ்ந்த சோழ அரசர், அவரை அரசவைக்கு வரவழைத்துப் பாராட்டினார்.அவரை சோழநாட்டின் அமைச்சராகவும் ஆக்கிக்கொண்டார். பிறகு, சேக்கிழார் பெரியபுராணத்தைப் பாடினார். - தமிழ் மலை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !