தற்கொலைக்கு மருந்து என்ன?
“இந்த வாரம் பள்ளியில் நான் ஆசிரியர் தினத்துக்கு டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் வேடம் போடப் போறேன்.” என்றான் பாலு.“ஏன் அவர் பிறந்த நாளை ஆசிரியர் தினமா கொண்டாடறாங்க?” என்று ஞாநி மாமாவிடம் கேட்டேன். “அவரேதான் அப்படிக் கொண்டாடச் சொன்னார். அவர் பிறந்த நாளைக் கொண்டாடணும்னு அவர்கிட்ட போய் கேட்டாங்க. என்னைக் கொண்டாட வேண்டாம். அதுக்குப் பதில் அன்னிக்கு ஆசிரியர்களைக் கொண்டாடுங்கன்னு அவர் சொன்னார்.” என்றார் மாமா.“அவர் எங்கே ஆசிரியரா இருந்தார்?” என்றான் பாலு.“நிறைய பேர் தப்பா அவர் பள்ளி ஆசிரியரா இருந்தார்னு நினைச்சுகிட்டிருக்காங்க. அதுக்கு அவரோட உடையும் ஒரு காரணம். அந்தக் காலத்துல நிறைய பள்ளி ஆசிரியர்கள் அந்த மாதிரி உடையிலதான் இருந்தாங்க. ராதாகிருஷ்ணன் பள்ளிக்கூட ஆசிரியரா இருந்ததில்லை. சென்னை பிரசிடென்சி கல்லூரி, மைசூர் பல்கலைக்கழகம், கொல்கத்தா பல்கலைக்கழகம், ஹார்வர்ட், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகங்கள் இங்கெல்லாம் ஆசிரியரா இருந்திருக்காரு. ஆந்திரப் பல்கலைக்கழகம், காசி பல்கலைக்கழகம் இரண்டிலயும் துணைவேந்தரா இருந்திருக்காரு.”என்றார் மாமா.“இந்த ஆண்டு ஆசிரியர்கள் தினம் மகிழ்ச்சியாவே இருக்காது. துக்கமா இருக்கும். 1200க்கு 1176 மதிப்பெண் வாங்கின அனிதா தற்கொலை பண்ணிக்கிட்டதை நெனைச்சா, அவளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்களுக்கு எல்லாம் எவ்வளவு வேதனையா இருக்கும்.” என்றேன்.“அவங்களுக்கு மட்டும் இல்லை. எல்லாருக்குமே வேதனைதான். எனக்கு உள்ள பெரிய வருத்தம் அந்தப் பெண்ணுக்கு முன்னால பல வாய்ப்புகள் இருந்தும், ஏன் தற்கொலை செய்யணும்னுதான். அப்துல் கலாம் படிச்ச குரோம்பேட்டை எம்.ஐ.டி.ல ஏரோனாட்டிகல் இஞ்சினீயரிங் சீட் குடுத்தாங்க. ஆனா அவள் விலங்கு மருத்துவர் படிப்பில இடம் கிடைச்சு சேர்ந்துட்டா. விலங்குகளுக்கு மருத்துவம் செய்யறது மனிதர்களுக்குச் செய்வதை விட கடினமானது. அதுவும் நல்ல மருத்துவத் துறைதான். 1176 மதிப்பெண் வாங்கத் தேவையான திறமை, உச்ச நீதிமன்ற வழக்குல தன்னை இணைச்சுக்கற பொது அறிவு எல்லாம் இருந்தும், ஏன் உணர்ச்சிவசப்பட்டு தன் உயிரை தானே மாய்க்கணும்கறதுதான் வேதனையா இருக்கு.” என்றார் மாமா.“அப்படி உணர்ச்சிவசப்பட என்ன காரணம்னு நினைக்கறீங்க?”“ஒற்றைப் புள்ளில மட்டுமே தன் வாழ்க்கை மொத்தம் இருக்கறதா நினைச்சுகிட்டு அந்தப் புள்ளில பிரச்னை வந்தா எல்லாமே முழுகிப் போயிட்டதா நினைக்கறதுதான். அப்படி இல்லை. வாழ்க்கையில பல விதமான வாய்ப்புகளும் வரும். சோதனைகளும் வரும். வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கிட்டு சோதனையைத் தாண்டிப் போறது எப்படிங்கற தெளிவு தேவைப்படுது.” “அதை யார் கொடுப்பாங்க?” என்று கேட்டான் பாலு. “ஒவ்வொரு சிறுவனையும் சிறுமியையும் சுத்தி இருக்கறவங்கதான் அதை ஏற்படுத்தணும். குடும்பத்துல இருக்கறவங்க. அவங்க இல்லாட்டி பள்ளியில இருக்கற ஆசிரியர்கள். நல்ல நண்பர்கள். இவங்க மூலம்தான் ஒவ்வொருத்தரும் செழுமையடையறோம். ரொம்ப முக்கியமா பாடத்திட்டத்துலயே வாழ்க்கைத்திறன் கல்வி இருக்கணும்.” என்றார் மாமா. “எதெல்லாம் வாழ்க்கைத் திறன்?” என்றேன்.“உலக சுகாதார நிறுவனம் அதை வரையறுத்திருக்கு. மொத்தம் பத்து வாழ்க்கைத் திறன்கள்.1. நான் யார் என்று உணர்வது. அதாவது என்னோட திறமைகள், பலம், பலவீனங்கள் எல்லாவற்றையும் புரிந்துகொள்வது.2. பிறர் நிலையில் நின்று பார்த்து அவர்களை உணர்ந்துகொள்வது. இது அனுதாபம்ங்கற 'சிம்பதி' இல்ல. புரிதல்ங்கற 'எம்பதி'.3.உறவாடக் கற்றுக்கொள்வது.4.உரையாடக் கற்றுக் கொள்வது. 5. எதையும் கேள்வி கேட்பது. 6. எதற்கும் பதில் கண்டுபிடிப்பது.7.சிக்கல்களை அவிழ்ப்பது. 8. தெளிவாக முடிவு எடுப்பது. 9. அழுத்தங்களை லேசாக்குவது. 10. உணர்ச்சிகளை உணர்ந்துகொள்வது. இந்த பத்து திறன்களையும் ஒருத்தர் கத்துகிட்டாங்கன்னா நிச்சயம் தற்கொலை செய்யமாட்டாங்க. என் வாழ்க்கை என் கையிலன்னு தொடர்ந்து போராடி ஜெயிப்பாங்க.” “ஏன் இதையெல்லாம் பள்ளிக் கூடத்துல கத்துக் கொடுக்கக் கூடாது?” என்றான் பாலு.“சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்துல இது இருக்கு. ஆனா அதைக் கத்துக்குடுக்க ஆசிரியர்களுக்கு போதுமான பயிற்சி இல்லாததால, மேம்போக்கா நடத்தறாங்க. ஸ்டேட் போர்டுல பாடத்திட்டத்துல இல்ல. ஆனா சோதனை முயற்சியா தர்மபுரி மாவட்டத்துல எழுத்தாளர் 'மா' அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு யூனிசெஃப் உதவியோட பயிற்சி கொடுத்தாங்க. அந்த ஆசிரியர்கள் இதுக்குப் பிறகு மாணவர்களோட உறவாடறது நிறைய மாறியிருக்குன்னு சொன்னாங்க. இதைக் கத்துக்கிட்ட மாணவர்கள் கிட்டயும் மாற்றம் தெரியுதுன்னு சொன்னாங்க. திருச்சில நான் ஆலோசகரா இருக்கற தனியார் பள்ளியில 6,7,8ம் வகுப்பு மாணவர்களுக்கு 'மா' எழுதின கதை வடிவ புத்தகம் மூலமா பத்து திறன்களைச் சொல்லித்தராங்க.” என்றார் மாமா.“அப்ப எல்லா பள்ளிகள்லயும் இதெல்லாம் சொல்லித்தர முடியும்தானே?”“நிச்சயம் முடியும். இப்ப தமிழ்நாட்டுல அமைச்சர் செங்கோட்டையனும் ஐ.ஏ.எஸ். அதிகாரி உதயசந்திரனும் செய்ய ஆரம்பிச்ச கல்வி சீர்திருத்தங்கள் பற்றிய விவாதக் கூட்டத்துல நான் இதைப் பத்தி சொல்லியிருக்கேன். இது மட்டும் இல்ல, மீடியாவைப் புரிந்துகொள்வது, சினிமாவைப் புரிந்துகொள்வது, அவரவர் உடல், மன நலத்தைப் புரிந்துகொள்வது எல்லாமே பாடத்திட்டத்துல இருக்கணும்னு நிறைய பேர் சொல்லியிருக்கோம். என்ன நடக்குது பார்க்கலாம்.” என்றார் மாமா.“ஸ்டேட் போர்டா, சி.பி.எஸ்.இ.யா, நுழைவுத் தேர்வு வேணுமா, வேணாமாங்கறதை விட என்ன மாதிரி பாடத்திட்டம் தேவைங்கறதுதான் இன்னும் அடிப்படையான பிரச்னையா தெரியுது.” என்றேன். “அடிப்படை மாற்றங்களைக் கொண்டு வர்றதுதான் அனிதாக்களுக்கு செய்யற உண்மையான அஞ்சலியா இருக்கும்” என்றது வாலு.வாலுபீடியா 1: தற்கொலைக்கு எதிரான உலக விழிப்புணர்வு தினம் - செப்டம்பர் 10. ஆண்டுக்குச் சுமார் 10 லட்சம் பேர் உலகில் தற்கொலையால் இறக்கின்றனர். யுத்தம், பயங்கரவாதம், கொலை ஆகியவற்றால் இறப்போரை விட இது அதிகம். 15 முதல் 24 வயதுக்குள் தற்கொலை கணிசமாக உள்ளது.வாலுபீடியா 2: Ten life skills:1. Self awareness2. Empathy3. Inter personal relationships4. Effective Communication5. Critical thinking6. Creative thinking7. Problem solving8. Decision making9. Coping with stress10.Coping with emotionsவாலுபீடியா 3: சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்காமல், அரசியல்வாதியாக இல்லாமல், முதல் குடியரசுத் துணைத் தலைவரானவர் டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன். அடுத்துக் குடியரசுத் தலைவரும் ஆனார்.