உள்ளூர் செய்திகள்

நான் யார்?

ஒடிஸாவில் இருக்கும் பெர்ஹாம்பூரில் பிறந்தேன். என்னுடைய அப்பா பெயர் வராககிரி ஜோகைய்யா பந்துலு, அம்மா பெயர் சுபத்ரம்மா. புகழ்பெற்ற வழக்கறிஞராக எனது தந்தை இருந்ததால், நானும் சட்டம் பயில வேண்டும் என்று விரும்பினார். அதற்காக, 1913ல் அயர்லாந்து, டப்ளின் நகரில் உள்ள 'யுனிவர்சிட்டி' கல்லூரியில் சட்டம் பயின்றேன். இளம் வயதிலிருந்தே தொழிலாளர்கள், ஏழைகள், ஒடுக்கப்பட்டவர்கள் ஆகியோர் மீது அதிக அக்கறை இருந்தது.லண்டனில் இருந்த மகாத்மா காந்தியை 1914ல் சந்தித்தேன். அந்தச் சந்திப்பிற்குப் பிறகுதான், சட்டம் பயில்வதைவிட விடுதலைப் போராட்டம், தொழிலாளர் உரிமைகளுக்கான போராட்டங்களில் பங்கேற்பது முக்கியம் என்று புரிந்தது.அதனால், 'சின் ஃபெயின்' எனும் அயர்லாந்து விடுதலை அமைப்பில் பங்கேற்றுத் தீவிரமாகப் போராடினேன். இந்தக் காரணங்களுக்காக, சட்டப் படிப்பை முடிப்பதற்கு முன்பாகவே அயர்லாந்து நாட்டிலிருந்து 1916ல் வெளியேற்றப்பட்டேன். இந்தப் போராட்ட அனுபவங்கள் இந்தியாவில் தொழிலாளர் உரிமைப் போராட்டத்தில் பங்கேற்கப் பெரிதும் உதவின. இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்க தொழிலாளர் சங்கங்களை வழிநடத்திச் சென்றேன். லண்டனில் நடைபெற்ற வட்ட மேஜை மாநாட்டில், தொழிலாளர்களின் பிரதிநிதியாகக் கலந்துகொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது.மதராஸ் மாகாணத்தின் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு வென்று தொழிலாளர் மற்றும் தொழில்துறை அமைச்சராக 1936ல் பதவியேற்றேன். 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தை காந்தி 1942ல் தொடங்கியபோது, அமைச்சர் பதவியை உதறிவிட்டு, போராட்டத்தில் பங்கேற்றுச் சிறை சென்றேன்.இந்திய விடுதலைக்குப் பின்னர், 1957ல் மத்திய தொழிலாளர் துறை அமைச்சராகவும் உத்தரப் பிரதேசம், கேரளம் உட்பட பல மாநிலங்களின் ஆளுநராகவும் பணியாற்றி இருக்கிறேன். அதன்பிறகு, 1967ல் குடியரசுத் துணைத் தலைவராகப் பதவியேற்றேன். அப்போதைய குடியரசுத் தலைவர் ஜாகிர் உசேன் மறைந்ததால், 1969ல் குடியரசுத் தலைவராகவும் இடைக்காலப் பதவி வகித்தேன். அதன்பிறகு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வென்று, 1974 வரை அந்தப் பதவியில் இருந்தேன்.'நேர்மை, துணிச்சல், அர்ப்பணிப்பு, பாரபட்சம் இல்லாத கருத்துகளை வெளிப்படையாகச் சொல்பவர்' என்ற எல்லோரது பாராட்டும் எனக்குத்தான்! இந்தியாவின் மிக உயரிய விருதான 'பாரத ரத்னா' விருது 1975ல் எனக்குக் கிடைத்தது.V.V. கிரி என்ற வராஹகிரி வேங்கட கிரிபிறப்பு: ஆகஸ்ட் 10, 1894மறைவு: ஜூன் 23, 1980


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !