உள்ளூர் செய்திகள்

பழமையான மொழியில் பட்டையைக் கிளப்ப வேண்டாமா?

தாய்மொழி தவிர பிற மொழிகளையும் கற்க வேண்டும் என்ற ஆர்வம் பலரிடமும் உள்ளது. பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம் தவிர பிற மொழிகளைக் கற்கும் வாய்ப்பு உள்ளது. பிரெஞ்சு, ஜெர்மன், சமஸ்கிருதம் ஆகியவை போதிக்கப்படுகின்றன. இந்நிலையில், நீங்கள் படிக்க விரும்பும் வேற்று மொழி என்ன, ஏன் படிக்க விரும்புகிறீர்கள் என்று சென்னை, மண்ணிவாக்கம், ஸ்ரீ நடேசன் வித்யாசாலா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்களுடன் உரையாடினோம். ஒவ்வொருவரும் தங்கள் கருத்துகளைச் சொன்னார்கள்:அ.ஸ்ரீ.தாரிணி, 9ம் வகுப்புஎனக்கு ஜப்பானிய மொழி படிக்க விருப்பம். பொதுவாக எல்லோரும் பிரெஞ்சு, ஸ்பானிஷ் மொழியைத் தேர்ந்தெடுப்பார்கள். ஆசிய கலாசாரத்தில் முக்கிய மொழிகளில் ஒன்று ஜப்பானிய மொழி. நம் நாட்டில் தற்போது ஜப்பானிய நிறுவனங்கள் அதிக அளவில் செயல்படுகின்றன. இந்த மொழியைப் படிப்பதன் மூலம், அங்கே வேலைவாய்ப்புகள் கிடைக்கலாம் அல்லவா? வேலைவாய்ப்பு மட்டுமல்லாமல், ஜப்பானிய மொழியில் உள்ள இலக்கியங்களையும் தெரிந்துகொண்டு, தமிழில் மொழிபெயர்க்க விரும்புகிறேன்.மு.உமைரா பானு, 9ம் வகுப்புஎனக்குப் பிடித்தது சீன மொழி. உலக அளவில் அதிகமான மக்கள் பயன்படுத்தும் மொழிகளில் சீன மொழியும் ஒன்று. நான் சீனா போய், மருத்துவம் படிக்க விரும்புகிறேன். அதற்கு சீன மொழி படிப்பது அவசியம்தானே? மேலும், சீனாவில் தான் இனிமேல் புதிய தொழில்நுட்ப முன்னேற்றங்கள் எல்லாம் நடைபெறப் போகின்றனவாம். அந்த மொழி தெரியாமல் போகலாமா?பி.ச.பிரதிக் ஷா, 9ம் வகுப்புஎன் சாய்ஸ் சமஸ்கிருதம். பல மொழிகளுக்கு மூலமொழி சமஸ்கிருதம். இரண்டாம் நூற்றாண்டில் தோன்றிய பழமையான மொழி. இதைக் கற்பதன் மூலம், இந்தியப் பாரம்பரியத்தையும், இலக்கியங்களையும் தெரிந்துகொள்ள முடியும். இந்தியாவில் உள்ள எல்லா மொழிகளிலும் சமஸ்கிருதத்தின் தாக்கம் உள்ளது. அப்படிப்பட்ட பழமையான மொழியில் பட்டையைக் கிளப்பவேண்டாமா? ரா.ஹரிணி, 8ம் வகுப்புபல மொழிகள் கற்க வேண்டும் என்று ஆசை உண்டு. ஆனால், என் முதல் தேர்வு, ஸ்பானிஷ். உலக அளவில் அதிக பயன்பாட்டில் உள்ள மொழிகளில் ஒன்று ஸ்பானிஷ். மொழிபெயர்ப்புத் துறையில் இந்தியா மட்டுமன்றி உலகளாவிய விதத்தில் ஸ்பானிஷ் மொழியில் அதிக அளவில் வாய்ப்புகள் உள்ளன. ஸ்பானிஷ் மொழியைக் கற்பது மட்டுமன்றி அதில் பேசவும், மொழிபெயர்க்கவும் நன்கு புலமை பெற விரும்புகிறேன்.து.ரோகேஷ், 8ம் வகுப்புஎனக்கு மிகவும் பிடித்த மொழி இந்தி. பிற மொழி என்றாலே வெளிநாட்டு மொழியைத்தான் கற்க வேண்டும் என்றில்லை. நம் நாட்டில் உள்ள மொழிகளில் முக்கியமானதாக இந்தி மொழியைக் கருதுகிறேன். நம் இந்தியாவின் ஆட்சி மொழியாகவும், இணைப்பு மொழியாகவும் நம் நாடு முழுக்க இந்தி பயன்பாட்டில் உள்ளது. இந்தி மொழியை கற்றுத் தேர்வதன் மூலம், இந்தியா முழுக்க எங்கு வேண்டுமானாலும் பணிபுரிய முடியும். எனவே, நான் இந்தி மொழி கற்க விரும்புகிறேன்.வே.ஸ்வர்ணலஷ்மி, 9ம் வகுப்புநான் கற்க விரும்பும் மொழி தெலுங்கு. தென்னிந்திய மொழிகளில் முக்கியமான ஒன்றாகத் தெலுங்கு உள்ளது. தெலுங்கு மொழி கற்பதன் மூலம், அங்குள்ள இலக்கியங்களை தமிழிலும், ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்க வேண்டும் என்று விரும்புகிறேன். தெலுங்கு மொழி தெரிந்த நிறையப் பேர் இருந்தாலும் அவர்கள் பேசத் தெரிந்தவர்களாகவே உள்ளார்கள். நான் தெலுங்கு மொழியை அதன் இலக்கணம், மொழிபெயர்ப்பு சார்ந்து கற்றுத் தேர்ச்சிபெற விரும்புகிறேன்.சீ.வெங்கட்விக்னேஷ், 8ம் வகுப்புஇந்திய மொழிகளில் ஒன்றான கன்னடம் கற்க வேண்டும் என்பது என் விருப்பம். பழமையான மொழிகளில் ஒன்றான கன்னடத்தைக் கற்று அங்குள்ள வரலாற்றுக் கல்வெட்டுகளைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்து, அவற்றை வரலாற்றுப் புத்தகங்களாக பதிவு செய்ய வேண்டும் என்பது என் விருப்பம். கன்னட மொழி இலக்கியங்களை, தமிழிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்ப்பு செய்ய விரும்புகிறேன்.ரா.தேவதர்ஷன், 8ம் வகுப்புநான் கற்க விரும்பும் மொழி பிரெஞ்சு. உலகில் அதிகம் பேசப்படும் பழமையான மொழிகளில் பிரெஞ்சும் ஒன்று. உலகின் முக்கியமான இலக்கியப் படைப்புகள் பிரெஞ்சு மொழியில் வெளியாகியுள்ளன. பல பிரெஞ்சு நிறுவனங்கள் நம் இந்தியாவில் தங்கள் முதலீடுகளைச் செய்து தொழில் தொடங்கியுள்ளன. பிரெஞ்சு மொழி கற்பதன் மூலம், அதில் மொழிபெயர்ப்புப் பணிகள் செய்யலாம். ஐக்கிய நாடுகள் சபையில் ஆங்கிலத்திற்கு அடுத்தபடியாக பிரெஞ்சு மொழி பயன்பாட்டில் உள்ளது. பிரெஞ்சு கற்பதன் மூலம், பன்னாட்டு நிறுவனங்களில் அதிக வேலை வாய்ப்புகளைப் பெற முடியும். எனவே, நான் கற்க விரும்புகிற மொழி பிரெஞ்சு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !