இந்தியாவில் உருவாகுமா புதிய நேரமண்டலம்?
நேர மண்டலம் ஒரு நாட்டின் வர்த்தகம், வேலை நேரம் போன்ற பல அம்சங்களில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இங்கிலாந்தின் கிரீன்விச் (Greenwich) நகரம் வழியே செல்லும் பூஜ்ஜியம் டிகிரி தீர்க்கரேகையில் இருந்து ஒரு நேரமண்டலத்தைக் குறிக்கும் தீர்க்கரேகை எவ்வளவு தொலைவில் இருக்கிறதோ, அதைப் பொறுத்து அந்த நேரமண்டலத்தின் நேரம் நிர்ணயிக்கப்படுகிறது. அந்த நேரமே, ஒருங்கிணைக்கப்பட்ட உலகளாவிய நேரம் (Coordinated Universal Time (UTC)). பரப்பளவில் பெரிய நாடுகளில், ஒன்றுக்கும் மேற்பட்ட நேர மண்டலங்கள் இருக்கும். உதாரணமாக ரஷ்யாவுக்கு 11 நேரமண்டலங்கள், அமெரிக்காவுக்கு 6 நேர மண்டலங்கள் உண்டு. ஆனால், இந்தியாவுக்கு இந்தியச் சீர் நேரம் என்னும் (Indian Standard Time- IST) ஒற்றை நேரம் மட்டுமே உண்டு. இந்தியாவின் அலகாபாத் நகர் வழியாக செல்லும் 82.5 டிகிரி தீர்க்கரேகையை அடிப்படையாகக் கொண்டு இந்தியச் சீர் நேரம் கணக்கிடப்படுகிறது.நாடு முழுக்க ஒரே நேர மண்டலம் பின்பற்றப்படுவதால், வடகிழக்கு மாநிலங்கள் இந்தியச் சீர் நேரத்துக்கு ஒரு மணி நேரம் முன்னதாக இருக்கின்றன. மேற்கில் இருக்கும் குஜராத் மாநிலம் ஒரு மணி நேரம் பிந்தி இருக்கிறது. நாம் இப்போது பயன்படுத்தும் நேர மண்டலம் கன்னியாகுமரி, லட்சத்தீவுகளில் இருக்கும் கவராட்டி (Kavaratti), குஜராத்தின் கெளர்மோட்டா ஆகிய இடங்களுக்கு ஏற்றதாகவும், கொல்கத்தா, கேங்டாக் மற்றும் மிர்ஸாப்பூர் ஆகிய நகரங்களுக்கு சற்றே பொருத்தமானதாகவும், அந்தமானின் போர்ட் ப்ளேர், அஸ்ஸாமின் டாங் (Dong) ஆகிய இடங்களுக்கு முற்றிலும் பொருத்தமில்லாததாகவும் இருக்கிறது.இந்தியச் சீர் நேரத்தைப் பின்பற்றுவதால், வடகிழக்கு மாநிலங்களில் சூரிய வெளிச்சம் இருக்கும் நேரத்தை, முழுமையாக வர்த்தகத்துக்கும் அலுவல்களுக்கும் பயன்படுத்த முடிவதில்லை. அங்கு மாலை ஐந்து மணிக்கே சூரியன் மறைந்து இருட்டிவிடும். இதனால் அலுவல்கள் பாதிக்கப்படுகின்றன.இதைச் சரிசெய்ய, வடகிழக்கு மாகாணங்களுக்கும், அந்தமான் நிகோபார் தீவுகளுக்கும் தனி நேர மண்டலத்தை உருவாக்க தேசிய இயற்பியல் ஆய்வகம் (National Physical Laboratory) பரிந்துரை செய்துள்ளது.ஆனால், இந்தியாவில் புதிய நேரமண்டலம் உருவாக்கப்பட்டால், பங்குச்சந்தை வர்த்தக நேரங்களை மாற்றியமைப்பது உட்பட பல்வேறு சிக்கல் ஏற்படும் என்பதால், இத்திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்தவில்லை.