உணவு விநியோக பணியில் பெண்கள்
பெங்களூருவை தலைமையகமாகக் கொண்டு செயற்படும் ஸ்விகி (Swiggy) நிறுவனம், நாடு முழுவதும் 45,000 உணவகங்களோடு இணைந்து மிகப் பெரிய உணவு விநியோக வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிறுவனம், பெண்களுக்குப் பயிற்சியளித்து உணவு விநியோகப் பணிகளில் ஈடுபடுத்தத் திட்டமிட்டுள்ளது. ஏற்கெனவே, 10 நகரங்களில் 60க்கும் மேற்பட்ட பெண்களைப் பணியமர்த்தியுள்ளது. இப்போது, 2 ஆயிரம் பெண்களைப் பணியில் ஈடுபடுத்த முடிவெடுத்துள்ளது. 2019 மார்ச் மாதத்திற்குள் இப்பெண்களும் இணைந்து பணியாற்றும் ஒருங்கிணைந்த பணிச்சூழலை ஏற்படுத்திவிடுவோம் என்று இந்நிறுவனத்தினர் தெரிவிக்கின்றனர். ஊழியர்களுக்கு மாதாந்திர ஊக்கத் தொகைகள், இரு சக்கர வாகனக் கடன் உதவி, விபத்து மற்றும் மருத்துவக் காப்பீடுகள் ஆகியவையும் வழங்க, ஸ்விகி முடிவு செய்துள்ளது.