UPDATED : மார் 05, 2024 07:02 PM | ADDED : மார் 05, 2024 06:59 PM
தேர்தல் தேதி அறிவிக்கவில்லையே தவிர தேர்தல் களம் சூடுபிடித்துவிட்டது.கடந்த வாரம் தமிழகத்திற்கு பிரதமர் வந்து போன சுவடே இன்னும் தீரவில்லை என்ற நிலையில் இந்த வாரமும் சென்னை பொதுக்கூட்டத்திற்கு பிரதமர் வந்துவிட்டார்.காசி வேட்பாளராக அறிவித்த பிறகு கலந்து கொள்ளும் முதல் கூட்டம் என்பதை விட பிரதமருக்கு பிள்ளயைா குட்டியா என்று லாலு பிரசாத் சொன்ன வார்த்தை தந்த தகிப்புடன் சூடாக மேடைக்கு வந்தார்.
அவருக்கு பேசுவதற்கு நிறைய விஷயங்கள் இருந்தன.திமுகவின் முக்கிய புள்ளியாக இருந்து போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தேடப்படும் சாதிக் பற்றி,எனக்கா குடும்பம் இல்லை பாரதமே என் குடும்பம்தான் என்று சொல்வது பற்றி,அமைச்சர் உதயநிதிக்கு உச்ச நீதிமன்றம் குட்டு வைத்த விஷயம் என்று நிறைய விஷயங்கள் இருந்தன.முன்பெல்லாம் எவ்வளவு பெரிய பாஜக தலைவர்கள் வந்தாலும் அது தெருமுனைக்கூட்டம் போலத்தான் நடக்கும் ஆனால் இப்போது திராவிட கட்சிகளுக்கு சவால் விடும் வகையில் பிரம்மாண்டமாக கூட்டம் நடக்கிறது,இந்தக்கூட்டமும் அப்படித்தான் நடந்தது.
மேடையில் குஷ்பு மட்டும் தனியாக உட்கார்ந்திருந்தார் வானதி சீனிவாசன் வந்த பிறகுதான் கொஞ்சம் பேசிக்கொண்டு இருந்தார்.மோடி பிரதமரான பிறகுதான் சிறுத்தைப் புலிகள் எண்ணிக்கை அதிகமாகியிருக்கிறது இப்படி விலங்குகள் நலனிலும் அக்கறை காட்டுபவர் பிரதமர் மோடி அதற்காகவே அவருக்கு புலித்தோல் போல நெய்யப்பட்ட காஞ்சி பட்டு சால்வை போர்த்துகிறேன் என்று பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை பிரதமருக்கு சால்வை போர்த்தினார்.தொடர்ந்து பிரதமருக்கு மகாபலிபுரத்தில் செய்யப்பட்ட அனுமன் சிலை,பனைமரத்தொழிலாளர்கள் பயன்படுத்தும் பனைத்தொழில் பொருட்கள் என பரிசுகள் பல வழங்கப்பட்டது.மக்கள் கூட்டம் மட்டும் ஆராவாரம் காரணமாக பிரதமர் சந்தோஷப்பட்டது அவரது முகத்திலும் உரையிலும் தென்பட்டது.,அந்த சந்தோஷம் தமிழகத்தின் நலனிற்கு பிரதிபலித்தால் சந்தோஷம்தான்.-எல்.முருகராஜ்