உள்ளூர் செய்திகள்

இன்யாம்போ

உலகில் எத்தனையோ கால்நடை இனங்கள் இருந்தாலும், ஒரு நாட்டின் கலாச்சாரம், வரலாறு மற்றும் அரச கௌரவத்தோடு பிணைக்கப்பட்ட மாடுகள் என்று பார்த்தால், அவை ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவின் 'இன்யாம்போ' மாடுகள் தான். பார்ப்போரைக் வியப்பில் ஆழ்த்தும் பிரம்மாண்டமான பிறை வடிவக் கொம்புகளும், கம்பீரமான தோற்றமும் கொண்ட இந்த மாடுகள், ருவாண்டா மக்களின் வாழ்வியலில் வெறும் விலங்காகப் பார்க்கப்படாமல், நாட்டின் உன்னத அடையாளமாகக் கருதப்படுகின்றன.பொதுவாக மாடுகள் என்றாலே விவசாய நிலங்களை உழுவதற்கும், வண்டி இழுப்பதற்கும், பாரம் சுமப்பதற்கும் பயன்படுத்துவது தான் உலக வழக்கம். ஆனால், இன்யாம்போ மாடுகளை அத்தகைய கடினமான வேலைகளில் ஈடுபடுத்துவது அந்த மாடுகளுக்குச் செய்யப்படும் 'அவமரியாதை' எனக் கருதப்பட்டது. இவை பிரத்யேகமாகப் பால் தருவதற்காகவும், அதைவிட முக்கியமாக அரச விழாக்களில் காட்சிப்படுத்துவதற்காகவுமே வளர்க்கப்பட்டன.முற்காலத்தில் இந்த இன்யாம்போ மாடுகள் சாதாரண மக்களால் வளர்க்கப்படவில்லை; இவை மன்னர்கள் மற்றும் அரச குடும்பத்தினரால் மட்டுமே வளர்க்கப்பட்ட விசேஷ இனமாகும்.பொதுவான மாடுகளைப் போல இவற்றைச் சாதாரணத் தொழுவத்தில் அடைப்பதில்லை. இவற்றுக்கெனப் பிரத்யேக அரச வழக்கங்களும், பராமரிப்பு முறைகளும் இன்றும் பின்பற்றப்பட்டு வருகின்றன:மனிதர்களைப் போலவே, பிறக்கும் ஒவ்வொரு இன்யாம்போ மாட்டிற்கும் ஒரு தனித்துவமான பெயர் சூட்டப்பட்டு அழைக்கப்படுகிறது. இவற்றை மேய்க்கும் மேய்ப்பர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. அவர்கள் இந்த மாடுகளைப் பாராட்டி, அவற்றின் அழகை வர்ணித்துப் பாடுவதற்கு என்றே பிரத்யேகமாகப் பயிற்சி பெற்றவர்கள். ஆச்சரியமாக, இந்த மேய்ப்பர்களின் பாடலைக் கேட்டு, அதற்கு ஏற்ப இந்த மாடுகள் கம்பீரமாகத் தலையை ஆட்டி, நடனமாடுவது போல் நடைபயிலும்.இன்யாம்போ மாடுகளின் அழகே அவற்றின் நீண்ட கொம்புகள் தான். அவை நேர்த்தியான பிறை வடிவில் வளைந்து வளர்வதற்காக, அவை குட்டியாக இருக்கும் போதிலிருந்தே சிறப்பு கவனம் செலுத்திப் பராமரிக்கப்படுகின்றன. திருவிழாக்கள் மற்றும் முக்கிய கலாச்சார நிகழ்வுகளின் போது, இந்த மாடுகளின் கொம்புகளிலும் கழுத்திலும் மணிகள் மற்றும் பாரம்பரிய ஆபரணங்களை அணிவித்து, ராஜாக்களைப் போல அழகு பார்க்கிறார்கள்.-ல் ருவாண்டாவில் ஏற்பட்ட கொடூரமான உள்நாட்டுப் போர் மற்றும் இனப்படுகொலையின் போது, இந்த இன்யாம்போ மாடுகள் பெருமளவில் கொல்லப்பட்டன. இதனால் இந்த அரிய இனம் முற்றிலுமாக அழியும் விளிம்பிற்குச் சென்றது.அதன் பிறகு, நாட்டின் பாரம்பரியத்தை மீட்டெடுக்க நினைத்த ருவாண்டா அரசாங்கம் தீவிர முயற்சியை மேற்கொண்டது. தற்போது, ருவாண்டாவின் 'நயன்சா அரண்மனை அருங்காட்சியகத்தில்' சில நூறு மாடுகள் அரச பாரம்பரியப்படி மிகக் கவனமாகப் பராமரிக்கப்பட்டு வருகின்றன.தற்போதைய கணக்கின்படி, தூய்மையான இன்யாம்போ இன மாடுகள் உலகில் சில நூறுகள் மட்டுமே உள்ளன. இதனால் இவை மிகவும் பாதுகாக்கப்பட்ட விலங்குகளின் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளன.தூய்மையான 'இன்யாம்போ' என்ற இந்த அரச இனம் ருவாண்டா நாட்டில் மட்டுமே முக்கியமாக நயன்சா அரச அருங்காட்சியகத்தில் வாழ்கிறது.இருப்பினும், இதன் அசல் மூல இனமான 'அங்கோல் வாடுசி' என்ற மாடுகள் உகாண்டா, புருண்டி போன்ற அண்டை ஆப்பிரிக்க நாடுகளிலும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள சில உயிரியல் பூங்காக்களிலும் வளர்க்கப்படுகின்றன. ஆனால், பாடலுக்கு நடனமாடும் குணமும், அரச பாரம்பரியமும் கொண்ட 'இன்யாம்போ' இனம் ருவாண்டாவிற்கு மட்டுமே சொந்தமான பெருமையாகும்.மன்னராட்சிகள் மறைந்தாலும், தங்களின் கலாச்சாரத்தின் சாட்சியாக இந்த இன்யாம்போ மாடுகளை ருவாண்டா மக்கள் இன்றும் போற்றிப் பாதுகாத்து வருவது உலக அரங்கில் வியப்பிற்குரிய ஒன்றாக உள்ளது.-எல்.முருகராஜ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை