UPDATED : ஆக 27, 2026 06:29 PM | ADDED : ஆக 27, 2026 06:27 PM
கனடாவின் புகழ்பெற்ற நயாகரா நீர்வீழ்ச்சிப் பகுதியில் அமைந்திருக்கிறது 'மேரின்லேண்ட்' நீர்வாழ் உயிரியல் பூங்கா.இங்குள்ள டால்பின்கள் உலகெங்கிலுமிருந்து வரும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகளைத் தங்கள் துள்ளலான அழகாலும் சாதுரியமான சாகசங்களாலும் கவர்ந்து இழுத்தது.ஆனால் அதெல்லாம் ஒரு காலம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.காரணம் நிதி நெருக்கடி காரணமாகவும்,கனடாவில் 2019-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டப்படி, திமிங்கலங்கள் மற்றும் டால்பின்களை அடைத்து வைப்பதற்கும், காட்சிப்பொருளாகப் பயன்படுத்துவதற்கும் தடைகள் மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாலும் உயிரியல் பூங்காவை மூட வேண்டிய நிர்ப்பந்தம்.இதன் காரணமாக, மேரின்லேண்டில் இருந்த 4 டால்பின்களும் ஸ்பெயினில் உள்ள காப்பகத்திற்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது அதன்படி மூன்று டால்பின்கள் மாற்றப்பபட்டு விட்ட நிலையில் கடந்த பத்தாண்டுகளாக மக்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திக் கொண்டிருந்த கடைசி டால்பினான மரினாவும் மாற்றப்பட்டது.கனடாவில் மனிதர்களின் பராமரிப்பில் இருந்த கடைசி டால்பின்களில் மரினாவும் ஒன்று என்பதால், அதன் இடமாற்றம் வரலாற்று சிறப்புமிக்க ஒன்றாகக் மாறிவிட்டது.ஒரு டால்பினை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு, அதுவும் கண்டங்கள் தாண்டி மாற்றுவது என்பது சாமானிய விஷயமல்ல. அதன் உடல்நிலை, நீர் வெப்பநிலை மற்றும் பயணத்தின்போது ஏற்படும் மனஅழுத்தம் ஆகியவற்றை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். இதற்காக ஸ்பெயின் நாட்டின் முன்னணி மீன்வளக் காப்பக நிபுணர்களும், மேரின்லேண்ட் பூங்காவின் மருத்துவக் குழுவினரும் களமிறங்கினர்.சிறப்பு வசதிகள் கொண்ட நீர்ப்படுகை வாகனத்தில் மரினாவை மிகவும் பத்திரமாக ஏற்றுவதற்காக, வல்லுநர்கள் அடங்கிய குழு ஒன்று மிகவும் கவனமாகவும் நேர்த்தியாகவும் அதைத் தயார்படுத்தியது.கனடாவிலிருந்து லாரி மூலம் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து சிறப்பு விமானம் வாயிலாக ஸ்பெயினில் உள்ள நவீன நீர்வாழ் உயிரியல் பூங்காவிற்கு மரினா மாற்றப்படவுள்ளது. தனது பழைய இருப்பிடத்தை விட்டுப் பிரிந்தாலும், ஸ்பெயினில் உள்ள தனது புதிய மற்றும் பழைய கடலுலக நண்பர்களுடன் மரினா விரைவில் இணையவுள்ளது.பழகிய இடத்தைவிட்டு பிரிய நேர்ந்தாலும் பழகிய நண்பர்களை பார்க்கப் போவதால் மரினாவின் புதிய வாழ்க்கை பயணம் சிறப்பாகவே இருக்கும் இருக்கட்டும்.-எல்.முருகராஜ்.