உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / சிந்திப்போமா / அரசு நூலகங்களில் அதர பழசு நூல்கள்!

அரசு நூலகங்களில் அதர பழசு நூல்கள்!

கட்டுரையாளர், தமிழகத்தில் பதிப்புத்துறையில் 50 ஆண்டுகளுக்கு மேல் அனுபவமுள்ளவர். எண்ணற்ற புத்தகங்களை அச்சிட்டு வெளியிட்டுள்ளார். இளம் எழுத்தாளர்களை ஊக்குவிப்பவர். ஆண்டு தோறும் 'வாசகர் திருவிழா' நடத்தி புத்தக வாசிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். பதிப்பகத்துறை சாதனைகளுக்காக பல விருதுகள் பெற்றவர். எழுத்தாளர்களை ஊக்குவித்து சிறந்த படைப்பாளர்களுக்கான விருதுகள் வழங்கி வருபவர்.தமிழகத்தில் பதிப்பகத்துறை சிறப்பாக வளர்ந்துள்ளது. ஆண்டுதோறும் பல லட்சம் புத்தகங்கள் கண்காட்சி மற்றும் விற்பனைக்கு வருகின்றன. ஆனால், வாசகர்களின் எண்ணிக்கைதான் அதிகரிக்கவில்லை. புத்தக வாசிப்பு குறைந்துள்ளது. தமிழகத்தில் இப்போது புத்தக கண்காட்சிகள் அதிகம் நடத்தப்படுகின்றன. பல லட்சம் ரூபாய் செலவு செய்து புத்தக கண்காட்சி நடத்த வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு பதிலாக பள்ளி கல்லுாரி மாணவ, மாணவியர், இளம் தலைமுறையினர் மத்தியில் வாசிப்பின் அவசியத்தை வலியுறுத்தும் விதமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தலாம்.வாசிப்பு அதிகரிக்கும் சமூகத்தில்தான் ஒழுக்கம், நேர்மை இருக்கும். நுாலகங்களுக்காக, தமிழக அரசு பல கோடி ரூபாய் செலவு செய்கிறது. புதிய நுாலகங்களை திறக்கிறது. இது வரவேற்க வேண்டிய விஷயம். ஆனால், ஏற்கனவே உள்ள அரசு நுாலகங்களில் பழைய நுால்கள்தான் உள்ளன. புதிய நுால்கள் இல்லை; காரணம், வாங்குவதில்லை.நுாலகங்களுக்கு, கடந்த 10 ஆண்டுகளாக நுால்கள் வாங்குவதை அரசு நிறுத்திவிட்டது. புதிய நுால்கள் இல்லாததால் நுாலகங்களுக்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது. அரசு, பதிப்பகங்களுடன் இணைந்து பல மாவட்டங்களில் புத்தக கண்காட்சி நடத்துகிறது. பல லட்சம் ரூபாய் செலவிடுகிறது. வாசகர்களுக்கு எந்த பலனுமில்லை. அந்த பணத்தில் நுாலகங்களுக்கு, நுால்கள் வாங்கினால் வாசகர்களுக்கு பலன் கிடைக்கும். எழுத்தாளர்களுக்கும், பதிப்பாளர்களும் உதவியாக இருக்கும்.

யாருக்கு லாபம்?

சமீபத்தில், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) நடந்திய, 47வது சென்னை புத்தக கண்காட்சிக்கு, தமிழக அரசு 75 லட்சம் ரூபாய் நிதி வழங்கி உள்ளது. அரசு நல்ல நோக்கத்துடன் தான் இத்தனை லட்சம் ரூபாய் வழங்கியுள்ளது. ஆனால் அந்த தொகையால் வாசகர்களுக்கும், பதிப்பாளர்களுக்கும் எந்த பலனுமில்லை. இந்த ஆண்டு, 'பபாசி' நடத்திய சென்னை புத்தக கண்காட்சியில், பதிப்பாளர்கள் பலருக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கண்காட்சிக்கும் வரும் வாசகர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பதிப்பாளர்களிடம், புத்தக அரங்குகளுக்கு வாடகை அதிகம் வாங்கப்படுகிறது. வாடகை கொடுக்கும் அளவுக்கு கூட இந்த முறை புத்தகங்கள் விற்பனையாகவில்லை.பெரும்பாலான பதிப்பாளர்கள் கை நஷ்டம் அடைந்துள்ளனர். உள்ளூர் பதிப்பாளர்களுக்கு மட்டும் செலவு குறைவு. வெளியூரில் இருந்து சென்றவர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அரசிடம் இருந்து, பல லட்சங்களை நிதியாக பெறும் 'பபாசி' நுழைவு கட்டணம் வாங்காமலே அனுமதிக்கலாம்; பதிப்பாளர்களுக்கான வாடகையை குறைக்கலாம். மாறாக வாடகையை அதிகரித்துள்ளது. இதற்கு பல லட்சம் ரூபாய் செலவு செய்து புத்தக கண்காட்சி நடத்த வேண்டிய அவசியமில்லை.

நுாலகத்தில் நவீனம்

வாசிப்பின் முக்கியத்துவத்தை மக்கள் மத்தியில் விளக்க வேண்டும். இதற்காக அரசு செலவு செய்யலாம். நுாலகங்களை நவீனப்படுத்தலாம். இதனால் வாசகர்கள் பலனடைவர். மக்கள் புதிய விஷயங்களை தேடுகின்றனர். நவீன ஊடகங்கள் எத்தனை வந்தாலும் புத்தங்களுக்கு ஈடாகாது. புத்தகங்கள் படிப்பவர்கள் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க செய்ய வேண்டும். அறிவார்ந்த சமூகத்தை உருவாக்குவதுதான் அரசின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும்.பதிப்பாளர்களுக்காக தமிழக அரசு உருவாக்கிய நலவாரியம் செயல்படாமல் முடங்கி உள்ளது. அதை செய்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் வாயிலாக, நலிந்த பதிப்பாளர்களுக்கு நிதி உதவி வழங்கி பதிப்புத்துறை வளர்ச்சிக்கு உதவ வேண்டும். பதிப்பாளர்கள் பங்களிப்பு தொகை பல லட்சம் ரூபாய் பதிப்பாளர்கள் வாரியத்தில் உள்ளது.வாரியம் செயல்படாமல் இருப்பதால், அந்த நிதி குறித்து எந்த விபரமும் பதிப்பாளர்களுக்கு தெரியவில்லை. பதிப்பு துறையில் உள்ளவர்களுக்கும், பதிப்பக பணியாளர்களுக்கும் பலன் அளிக்கும் வகையில், இந்த நலவாரியம் செயல்பட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மன அமைதி தரும்

இது பழைய காலம் போல் அல்ல. கல்வி, தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. இன்றைக்கு பணம் சம்பாதிப்பது கஷ்டமான காரியமில்லை. அவரவர் தேவைக்கு ஏற்ற பணத்தை சம்பாதித்து விடுகின்றனர்.ஆனால், சந்தோஷமாக வாழ முடிகிறதா என்றால் இல்லை. நோய் உபாதை இல்லாமல், மன அமைதியுடன் வாழ முடியவில்லை. மருந்து மாத்திரைகளை நம்பியே வாழ்க்கை நகர்கிறது. புத்தங்கள் வாசிப்பதால், மன அமைதி கிடைக்கும். நல்ல சிந்தனைகள் வெளிப்படும். அறிவுத் தேடல் அதிகரிக்கும். கலாசாரம் மற்றும் பண்பாட்டு வளர்ச்சியை புத்தக வாசிப்பு தான் உருவாக்க முடியும். பிரச்னைகளுக்கான தீர்வுகளையும், தன்னம்பிக்கையையும் புத்தகங்கள் தருகின்றன.

- மு.வேலாயுதம், gmail.com


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

SENTHIL NATHAN
நவ 30, 2024 11:12

நூலகங்கள் தேவையில்லை. குப்பை புத்தகங்கள் வாங்க மக்கள் வரிப்பணம் ஏன் வீணாக்க வேண்டும்? நூலகங்கள் நகரின் முக்கிய பகுதிகளில் அமைந்துள்ளன. அங்கு மக்களுக்கு அவசியமான வேறு பல அலுவலகங்கள் அமைக்கலாம். இண்டர்நெட் வசதியுள்ள இந்த நாட்களில் அனைவரும் அவரவர் விருப்பப்படி நூல்கள் படிக்கலாம்.


rama adhavan
ஏப் 12, 2024 13:34

இப்போ யார் புத்தகம் படிக்கன்றனர்? மொபைல் போனில் சினிமா, ஆட்டம், கிரிக்கெட் தான். பதிரிகைகளும், நாளேடுககளும் விற்பனை குறைவு. மின்னணு காலத்தில் புத்தகத்துக்கு வேலை இல்லை. படைப்புகளிலும் சாரம் இல்லை. வரும் காலத்தில் கணினி தான்.


Rajamani Krishnamurthi
ஏப் 11, 2024 06:46

அரத பழசு .......அதர இல்லை


தர்மராஜ் தங்கரத்தினம்
மார் 21, 2024 09:41

அதரம் போன்ற வார்த்தைகளை சாண்டில்யன் போன்ற எழுத்தாளர்களுக்காக தியாகம் செய்து விடுங்கள் .....


vbs manian
பிப் 28, 2024 18:43

இந்த டிஜிட்டல் யுகத்தில் அச்சிடப்படும் புத்தகங்கள் மவுசு குறைந்து விட்டது. எல்லாம் பதிவேற்றம். தொழில் நுட்ப வளர்ச்சியின் தாக்கம்.


அப்புசாமி
பிப் 28, 2024 12:19

எல்லாத்தையும் ஆன்லைன்ல படிச்சிடறோம்.


venugopal s
பிப் 28, 2024 11:18

தலைப்பை முதலில் மாற்றுங்கள்! அது அதர பழசு அல்ல அரதப் பழசு!


.Dr.A.Joseph
மார் 17, 2024 05:54

ஒரு தடவ எழுதினா நூறு தடவ எழுதுன மாதிரி


Barakat Ali
மார் 19, 2024 21:53

வாசகர் வேணுகோபாலின் கருத்து சரியானதே .... முன்பே நானும் குறிப்பிட நினைத்தேன் .... ஆர்வமிழந்து விட்டுவிட்டேன் .... அதரம் என்றால் உதடு அல்லது இதழ் என்றுதான் பொருள் .... அரதப் பழசு என்றுதான் கூறுவார்கள் ....


Barakat Ali
பிப் 28, 2024 08:36

உண்மை நிலை என்ன?? மக்களுக்கோ, மாணவர்களுக்கோ பயன்படும் நூல்கள் மிகவும் குறைவு.. திராவிஷ ஆராய்ச்சியாளர்கள் எழுதிய குப்பைகளே நூலகங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.. உதாரணம் 1. கலைஞரின் எழுத்துக்களில் இலக்கியம் 2. தமிழுக்கு அணிகலனாக அண்ணாவின் படைப்புக்கள் ....


rama adhavan
பிப் 28, 2024 11:13

சரியான பதிவு. அரசு நூலகங்களில் தினத்தந்தி, தினமலர், ஹிந்து, எக்ஸ்பிரஸ் போன்ற நாள் இதழ்களை மட்டும் சிலர் படிக்கின்றனர். முரசொலி போன்ற அரசியல் இதழ்களை பெரும்பாலும் படிப்பது இல்லை. அதேபோல் நாவல்களை மட்டும் படிக்கன்றனர். கவிதை, கட்டுரை போன்றவற்றை தொடுவதே இல்லை. புதிய புதினங்கள் தேவை ஆனால் lending library இல் வாங்கி படிக்கன்றனர். நகரங்களிலும், கிராமங்களிலும் இதுதான் இன்றைய நிலை. அதுவும் மொபைல் போனில் எல்லா படைப்புகளும், சினிமா உட்பட இலவசமாக வீட்டிலேயே கிடைக்கும் போது யார் நூலகம் போவார்கள்?


புதிய வீடியோ