ரிப்போர்ட்டர் லீக்ஸ்: பஸ் ஸ்டாண்டுல பஸ்ச நிறுத்திக்கறாரு டிரைவரால் மக்கள் அலைமோதுறாங்க
பஸ் ஸ்டாண்டுல பஸ்ச நிறுத்திக்கறாரு டிரைவரால் மக்கள் அலைமோதுறாங்க கிணத்துக்கடவு பஸ் ஸ்டாண்டில் நண்பரை சந்தித்தேன். வீரப்பகவுண்டனுாருக்கு பஸ் இயக்கறதில்லைனு, பேச ஆரம்பித்தார். பொள்ளாச்சியில இருந்து வீரப்பகவுண்டனுாருக்கு, '4ஏ'ங்கற அரசு டவுன் பஸ் இயக்கப்படுது. வீரப்பகவுண்டனுாருக்கு, தினமும், மூனு தடவ பஸ் வரும். இந்த பஸ்ல ஒரு டிரைவர் டூட்டியில இருக்குறப்ப, மத்தியான நேரத்துல மட்டும் வீரப்பகவுண்டனுாருக்கு பஸ் வர்றது இல்ல. கேட்டா 'டைம் இல்ல'னு ஏதாவது ஒரு காரணத்த சொல்லறாரு. ஆனா, கிணத்துக்கடவு பஸ் ஸ்டாண்டுல பஸ் நிறுத்தி வச்சுக்கறாரு. எங்க ஊருக்கு பஸ் இயக்காம, கிணத்துக்கடவுல இருந்து பொள்ளாச்சிக்கு மட்டும் இயக்கறாரு. இது மட்டுமா, அந்த பஸ்ல லேடீஸ்க்கு இலவச பயணங்கறதால, லேடீஸ் கூட்டமா நின்னா மட்டும் பஸ்சை நிறுத்துவாரு. ஒருத்தரு ரெண்டு பேரு பஸ் ஸ்டாப்ல நின்னா பஸ்சை நிறுத்த மாட்டாரு. அதே மாதிரி, பஸ்ல பயணிக்கற லேடீஸ் கிட்டவும் வரம்பு மீறி பேசறாரு. திட்டிக்கிட்டே தான் இருப்பாரு. மத்தியான நேரத்துல ஹாஸ்பிட்டல் போகணும்னா கூட பஸ் வசதியில்ல. பஸ் ஸ்டாப்புல காத்திருக்க வேண்டியதா இருக்கு. டிரைவர் ஒருத்தரோட தனிப்பட்ட செயல்பாடால, கிராம மக்கள் பாதிக்கறாங்க. இத போக்குவரத்து துறை அதிகாரிங்க கவனித்து நடவடிக்கை எடுக்கணும்னு, விபரத்த சொல்லி முடித்தார். இன்னொரு நணபர் பாலு வந்ததும், அவருடன் நானும் கிளம்பினேன். தள்ளுவண்டி கடைக்காரங்க கிட்டயுமாதன்னார்வலர்களே இப்படி பண்ணலாமா பொள்ளாச்சி அரசு மருத்துவமனை ரோட்டுல இருக்கற தள்ளுவண்டி கடைக்காரங்க, கூட்டமா நின்னு பேசிக்கிட்டு இருந்தாங்க. அவங்க கூறியதில் இருந்து... பொள்ளாச்சி அரசு மருத்துவமனை பக்கதுல தள்ளுவண்டிக் கடைகள் வச்சிருக்கோம். இங்கு, இட்லி, தோசை, சாத வகைகள் விற்பனை செய்யறோம். மருத்துவமனைக்கு வர்றவங்க வயிற்றுப்பசி போக்க, குறைந்த விலையில உணவு பொருட்களை விற்கறோம். தள்ளுவண்டி கடையில விற்பனைய நம்பித்தான் எங்க பொழப்பு ஓடுது. எங்க நிலைமை இப்படி இருக்க, தன்னார்வ அமைப்பை சேர்ந்த சிலர், ஏதேனும் முக்கிய நிகழ்ச்சி நடக்கும் போது, நோயாளிகளுக்கு உணவு பொட்டலம் வழங்க எங்க கிட்ட ஆர்டர் கொடுக்கறாங்க. அவங்க சொல்லற மாதிரி உணவு தயாரிச்சு கொடுக்கறோம். நாளைக்கு பணம் கொடுக்கறதா சொல்லிட்டு போறாங்க. எந்த நாளைக்கு தெரியல. இப்படியே பல மாசமானாலும், பணம் கொடுக்காம டிமிக்கி கொடுக்கறாங்க. இத யாரிடம் போய் சொல்லறதுனு தெரியல. ரோட்டோரத்துல தள்ளுவண்டி வச்சு பொழப்பு நடத்தற எங்க கிட்ட இப்படி பண்ணுறாங்களேனு ஆதங்கமா இருக்குனு, சொன்னாங்க. யாருக்காக... இவங்க யாருக்காகதேயிலை தொழிலாளர்கள் விரக்தி வால்பாறையில் கவர்மென்ட் கொடுத்த போனஸ்சை விட மிகக்குறைவான போனஸ் வழங்கப்பட்டதால், தனியார் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கோபத்தில் இருக்காங்கனு இளைஞர்கள் இருவர் பஸ் ஸ்டாண்டில் பேசிக்கொண்டனர். வால்பாறையில் தேயிலை தொழிலை நம்பி தான் தொழிலாளர்கள் இருக்காங்க. வனவிலங்கு நடமாட்டம் மிகுந்த எஸ்டேட் பகுதியில, உயிரை கையில பிடிச்சுட்டு வேலைக்கு போயிட்டு இருக்காங்க. இவங்களுக்கு, தீபாவளி பண்டிகைக்கு போனஸ் கொடுக்கறாங்க. இந்த வருசம் கவர்மென்ட் தேயிலை தோட்டமான டான்டீயில், தொழிலாளர்களுக்கு 20 பர்சன்டேஜ் போனஸ் கொடுத்திருக்காங்க. ஆனா, தனியார் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு, 8.33 பர்சன்டேஜ் மட்டுமே போனஸ் கொடுத்திருக்காங்க. இதனால, தொழிற்சங்கங்கள் மீது தொழிலாளர்கள் கடும் அதிருப்தியில இருக்காங்க. இதே போல புதிய சம்பள பேச்சு வார்த்தையிலும், தொழிற்சங்கங்கள் முறையாக பேச்சு நடத்தாமல் குறைவான சம்பளத்திற்கு மீண்டும் ஒப்பந்தம் போடுறாங்க. தொழிலாளர்களுக்கு துரோகம் செய்யும் தொழிற்சங்கங்கள் மீது தொழிலாளர்கள் கடும் கோபத்துல இருக்காங்க. தொழிற்சங்கத்துக்காரங்க தொழிலாளர்களுக்கு சாதகமா இல்லாம, தோட்ட நிர்வாகத்துக்கு சாதகமாக செயல்படுறாங்க. இப்படியே போனா வால்பாறையில் இருக்கற தொழிலாளர்கள் எல்லோரும் வெளியேறிடுவாங்க. அப்புறம் இவங்க, யாருக்காக தொழிற்சங்கம் நடத்த முடியும்னு பேசிக்கிட்டாங்க. கொடுக்க வேண்டியத கொடுத்தா தான்சப்-ரிஜிஸ்டர் ஆபீஸ்ல வேலை நடக்கும் பொள்ளாச்சி தாலுகா அலுவலகம் அருகே நண்பருக்காக காத்திருந்தேன். அங்கு வந்த முதியவர் ஒருவர், 'என்னப்பா, பகல் கொள்ளையாக இருக்குது, இதுக்கெல்லாம் முடிவு கட்ட மாட்டங்களா,' என பேச ஆரம்பித்தார். என்ன விஷயம்னு அவரிடம் விசாரித்தேன். பொள்ளாச்சி சப் -- ரிஜிஸ்டர் ஆபீஸ்ல உயில் எழுதப்போனேன். அதற்கு கட்டணம் எவ்வளவுனு தெரியல. மூவாயிரம் ரூபா செலவாகும்னு நெனச்சேன். ஆனா, 75 ஆயிரம் ரூபா செலவாகும்னு சொல்லறாங்க. நேரடியாக சப் - ரிஜிஸ்டர் ஆபீஸ்க்கு போனா எந்த வேலையும் நடக்கறதில்ல. சிலர் புரோக்கர் மாதிரி இருக்காங்க. அவங்க கிட்ட போய், கொடுக்க வேண்டியதை கொடுத்தா தான் எந்த வேலையா இருந்தாலும் நடக்கிறது. என்னோட சொத்த உயில் எழுத, 75 ஆயிரம் ரூபா கட்டணுமானு கேட்டா யாரும் பதில் சொல்லமாட்டீங்கறாங்க. உயர் அதிகாரிக வரை பணம் கொடுக்கணும். உங்களுக்காக பேசி தான் இந்த தொகையை பேசி முடிச்சிருக்கேன்னு சொல்லுறாங்க. இதை எங்க போய் சொல்ல. தட்டிக்கேட்க ஆள் இல்லாமல் திண்டாட வேண்டியிருக்கு. உயில் எழுதவே இவ்வளவு தொகைனா, சொத்து பதிவுக்கு எவ்வளவு வாங்குவாங்க. கையில காசு இருக்கறவங்க மட்டும் தான் சப் - ரிஜிஸ்டர் ஆபீசுக்கு போகணும் போலிருக்குனு, வேதனையோடு சொன்னார். ஜி.எச்.,ல மரத்த வெட்டி கடத்திட்டாங்கவிசாரிச்சா உண்மை வெளிச்சத்துக்கு வரும் உடுமலை அரசு மருத்துவமனையில, கல்லுாரி நண்பரை சந்தித்தேன். எப்படி இருந்த இடம் இப்படி மாறிடுச்சுனு பேச ஆரம்பித்தார். அரசு மருத்துவமனை முன்னாடி, பழமையான மரங்கள் நிறைய இருந்துச்சு. மருத்துவமனைக்கு அழகாகவும், வரும் பொதுமக்களுக்கு நிழல் தரும் வகையிலும் இருந்த மரங்கள திடீரென வெட்டி கடத்திட்டாங்க. மரம் வெட்டியபோது உரிய பாதுகாப்பு முன் ஏற்பாடுகளும் செய்யாத நிலையில, மருத்துவமனை முன் பக்க காம்பவுண்ட் சுவரும், பல அடி நீளத்திற்கு இடிந்து விழுந்திருச்சு. மரம் வெட்டுவதற்கு எந்த காரணமும் இல்லை. முறையாக மதிப்பு நிர்ணயித்து, ஏல முறையிலும் விற்பனை செய்யல. முறைகேடாக மரங்களை வெட்ட, தனி நபருக்கு சாதகமாக பொதுப்பணித்துறை அதிகாரிக செயல்பட்டிருக்காங்க. மரம் வெட்டியதால், பல அடி நீளத்திற்கு உடைந்த காம்பவுண்ட் சுவரை மீண்டும் கட்ட, பல லட்சம் ரூபாய் செலவாகும். இதற்கு யார் பொறுப்புனு மருத்துவமனை அலுவலர்கள் கேள்வி எழுப்பியிருக்காங்க. அரசு மருத்துவமனையில இருந்த மரங்கள வெட்டி கடத்தியது குறித்து மாவட்ட நிர்வாகம் விரிவான விசாரணை நடத்தணும். அப்ப தான் பல உண்மைகள் வெளிச்சக்கு வரும்னு ஆதங்கப்பட்டாரு.
தேங்காய் திருடும் கும்பல் உலா வர்றாங்க!
உடுமலை தளியிலுள்ள பேக்கரியில், 'தோட்டத்துல இருக்கற மரத்துக்கு கூட பாதுகாப்பு இல்லாத நிலைமை ஆயிருச்சுனு' விவசாயிகள் காரசாரமாக விவாதித்து கொண்டிருந்தனர். என்னனு விசாரிச்சேன். திருமூர்த்திநகர் சுற்றுப்பகுதியில, நுாற்றுக்கணக்கான தோட்டத்து சாளைகள் இருக்கு. சில வாரமாக இப்பகுதியில, மர்ம கும்பல் ராத்திரி நேரத்துல சுத்திட்டு இருக்காங்க. தோட்டத்துல இருக்கற மோட்டார், கேபிள் வயர் எல்லாத்தையும் இந்த கும்பல் திருடிட்டு போயிறாங்க. சமீபகாலமா தோட்டத்துல குவிச்சுவெச்சு இருக்கற, தேங்காய், இளநீர், கொப்பரையிலும் கை வைக்கறாங்க. ஏதாவது வண்டி எடுத்துட்டு வந்து, ஆள் நடமாட்டம் இல்லாதப்ப மொத்தமாக தேங்காய்களை திருடிட்டு போயிடுறாங்க. மலை அடிவாரத்துல ஏற்கனவே வனவிலங்குகள் தொல்லையால, வீட்டை விட்டு வெளியில் வர முடியாத நிலையில் விவசாயிங்க இருக்காங்க. இப்ப, விளையற தேங்காயும் திருடு போனா எப்படித்தான் வாழறதுன்னு தெரியல.எல்லாரும் ஒண்ணா சேர்ந்து, தளி ஸ்டேஷன்ல புகார் கொடுத்திருக்கோம். போலீசார் என்ன நடவடிக்கை எடுக்க போறாங்கன்னு தெரியல. திருடிட்டு போறவங்க கிட்ட இருந்து, தேங்காய் வாங்கறவங்கள கண்டுபிடிக்கணும். இப்படியே போச்சுன்னா தோட்டத்துல இருக்குற மரங்களை கூட வெட்டிட்டு போயிருவாங்க. மக்கள பாதுகாக்க போலீஸ்காரங்க ஏதாவது நடவடிக்கை எடுத்தா பரவாயில்லை. விளைபொருட்கள் திருடறத தடுக்க, குற்றவாளிகள கைது பண்ணனும் என்றபடி அங்கிருந்து கிளம்பிச்சென்றனர்.