உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / விருந்தினர் பகுதி / மாற்றுத்திறனாளி மகனின் விதியை மதியால் வென்றெடுத்த தாயார்: ஐ.டி., இன்ஜியராக உருவாக்கி அசத்தல்

மாற்றுத்திறனாளி மகனின் விதியை மதியால் வென்றெடுத்த தாயார்: ஐ.டி., இன்ஜியராக உருவாக்கி அசத்தல்

குடும்பத்தில் ஒரு குழந்தை மாற்றுத்திறனாளியாக பிறந்தால் அந்த குறைபோக்க முறையான சிகிச்சை, தொடர் பயிற்சி மேற்கொள்ளாமல் குழந்தையின் தலையெழுத்து என கூறி சில பெற்றோர் கவலையில் மூழ்கிவிடுகின்றனர். ஆனால் காது கேட்காத, வாய் பேசாத மாற்றுத்திறனாளி குழந்தையை மாற்றத்திற்கான குழந்தையாக உருவாக்கும் முயற்சியில் தேனியை சேர்ந்த தாய் ஒருவர் ஈடுபட்டு அந்த குழந்தையின் தலையெழுத்தையே தன் மதியால் வென்று மகனை ஐ.டி., இன்ஜினியராக உருவாக்கி வெற்றியும் கண்டுள்ளார்.தேனி ஸ்ரீராம் நகர் நந்தகோபாலன், சீத்தாலட்சுமி தம்பதியினரின் மூத்த மகன் பாலாஜி 25. பிறவியிலே காது கேளாமல், வாய் பேச இயலாது. ஆனால் இவர் தற்போது பெங்களூரு ஐ.டி., நிறுவனத்தில் பணி செய்து சம்பாதிக்கிறார். கிரிக்கெட், கபடி சிறப்பு போட்டிகளில் மாநில, மாவட்ட அளவில் வென்று பரிசுகளை குவித்து வருகிறார். இவரது ஒவ்வொரு வெற்றியிலும் தாயார் சீத்தாலட்சுமி ஊக்கப்படுத்தி வருகிறார். மாற்றுத்திறனாளி மகனை படிக்க வைத்து, இன்ஜினியராக்கியது எப்படி என சீத்தாலட்சுமி கூறியதாவது:மகன் பிறந்து ஒரு மாதத்திற்கு பிறகு நாங்கள் கைத்தட்டினால் எதிர்வினை ஆற்றாமல் இருந்தான். டாக்டரிடம் ஆலோசித்த போது செவித்திறன் பாதித்தது தெரியவந்தது. திருச்சியில் சிறப்பு குழந்தைகளுக்கான பள்ளியில் படிக்க வைக்க முடிவு செய்தோம். மகனுக்கு 2 முதல் 5 வயது ஆகும் வரை 3 ஆண்டுகள் சிறப்பு பள்ளியில் நானும் படித்தேன். உதடு அசைவில் வார்த்தை உச்சரிப்பை உணர்ந்து பேச 2 ஆண்டுகள் 'ஸ்பீச் தெரபி' டாக்டரிடம் பயிற்சி பெற்றேன். மகனுக்கு படிப்பில் சந்தேகம் என்றால் பயிற்சி வழங்க கற்றுக்கொண்டேன்.ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை மற்ற மாணவர்களுக்கான இயல்பான பள்ளியில் படித்தான். மாற்றுத்திறனாளி என்பதால் மகனை 6ம் வகுப்பில் சிறப்பு பள்ளியில் படிக்க வைக்க ஆசிரியர்கள் கூறினர். 'என் மகன் இயல்பான மாணவர்களுடன் படிக்க வேண்டும். அவன் மார்க் எடுக்காவிட்டால் சிறப்பு பள்ளியில் படிக்க வைக்கிறேன் என வகுப்பு ஆசிரியரிடம் உறுதியளித்தேன். இயல்பான பள்ளியில் படிக்க நானே பாடம் நடத்தி பயிற்சி அளித்தேன். மகனும் ஆர்வத்துடன் படித்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 500க்கு 438 மதிப்பெண்கள் எடுத்தான். பிளஸ் 2விற்கு பின் கலசலிங்கம் பல்கலையில் பி.டெக்., படித்தான். பெங்களூருவில் சிறப்பு பயிற்சி மையத்தில் ஐ.டி., துறை சிறப்பு பயிற்சி பெற்றான். கொச்சி ஐ.டி. நிறுவனத்தில் பணியில் சேர்ந்து மூன்று ஆண்டு நிறைவு செய்தார். தற்போது பெங்களூருவில் பணி புரிகிறார்.படிப்பு தவிர கிரிக்கெட், கபடி, மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றான். தற்போது தேனி மாவட்ட காது கேளாதவர்களுக்கான கிரிக்கெட் அணியில் இணைந்து மாநில போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றனர். மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பெற்றோர், குழந்தைகளுக்கு ஊக்கமளித்து அவர்களை வெற்றியாளராக உருவாக்க கொஞ்சம் மெனக்கெடவேண்டும் என்றார்.வாழ்த்த 94423 38036


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Sudhakar NJ
ஜூலை 26, 2024 13:24

மிக்க மகிழ்ச்சி மற்றும் வாழ்த்துக்கள். எனக்கும் இவரை போன்று மகள் இருக்கிறாள். 10வது மற்றும் 12வது வகுப்பில் நல்ல மதிப்பின் பெற்றாள். இப்பொழுது கல்லூரி படிப்பும் முடிந்து இளநிலை பட்டம் பெற்றுள்ளார். மத்திய அரசின் போட்டி தேர்விற்கு பயின்று வருகிறாள். என் மகள் எனக்கு கடவுள் கொடுத்த வரம்.


நிக்கோல்தாம்சன்
ஜூலை 27, 2024 09:19

குழந்தைகள் இறைவனின் கொடை


Venkataraman Subramania
ஜூலை 22, 2024 10:25

Many congratulations to the proud mother and also the child who have developed confidence and winning over situation. Kudos to mother.


மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி