உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / விருந்தினர் பகுதி / இலைகளில் கலை கலையரசனின் கைவண்ணம்

இலைகளில் கலை கலையரசனின் கைவண்ணம்

தேடுதல், விடாமுயற்சி உள்ளவர்கள் எங்கிருந்தாலும் தனியே பிரதிபலிப்பார்கள். ஒவ்வொரு செயலிலும் புதிதாக ஒன்றை செய்ய வேண்டும் என்ற முயற்சியில் இலைகளில் மனிதர்கள் முகத்தை வடிக்கும் கலையை கற்றுள்ளார் காஞ்சிபுரம் சேந்தமங்கலத்தை சேர்ந்த எம்.பி.ஏ., பட்டதாரி கலையரசன்.முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், மறைந்த நடிகர் விவேக், கிரிக்கெட் வீரர் தோனி தொடர்பான இவரது இலை ஓவியங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.இவர் கூறியதாவது: சிறுவயதிலே ஓவியம் வரைவதில் ஆர்வம் இருந்தது. ஓவியத்திறமை, சமையல் திறமையை வெளி உலகிற்கு காட்ட விரும்பினேன். அதற்காக யூடியூப் சேனலில் வீடியோக்கள் வெளியிட்டு வந்தேன். பழங்களில் கிரிக்கெட் வீரர்களின் உருவங்களை செதுக்கி வீடியோவாக வெளியிட்டேன். அதற்கு நல்ல ஆதரவு கிடைத்து.சமூக வலைதளம் மூலம் சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு பழங்களில் செதுக்கிய வீரர்களின் உருவங்கள் கொண்டு வரக் கூறினர். அங்கு உருவங்கள் செதுக்கிய பழங்கள் கொண்டு சென்ற போது நட்பு வட்டாரம் பெருகியது. இதில் சில கேரள நண்பர்கள் கிடைத்தனர். கேரளாவிற்கு சென்று இலைகளில் மனித உருவங்களை வடிவமைப்பது பற்றி பயிற்சி பெற்றேன். இலை சிற்பத்திற்காக தென்னை மட்டை பச்சையாக இருக்கும் போது பயன்படுத்துவேன். மற்ற இலைகளான பாதாம் மர இலை, அரசு, தேக்கு இலைகளை காய வைத்து பயன்படுத்துவேன். இலைகளில் முதலில் பென்சில், பேனா கொண்டு உருவங்களுக்கு அவுட் லைன் கொடுத்து விடுவேன். சில உருவங்கள் வரைய இயலாத போது, படங்களை நகல் எடுத்து இலைகள் மேல்வைத்து அவுட் லைன் வரைவேன். உருவங்கள் செதுக்கும் போது காற்றடிக்காத இடத்தில் பணி மேற்கொள்வேன்.ஒரு உருவத்தை செதுக்க 2 மணி நேரம் வரை ஆகும். சில நேரங்களில் 90 சதவீதம் பணி முடிந்த பின் இலைகள் உடைந்து விடும். குறிப்பாக கண் போன்ற நுட்பமான பகுதிகளை செதுக்கும் போது இலை நரம்பு சேதமடைந்து விடும். அப்போது சிறிதாக வருந்துவேன் நுணுக்கமான வேலை என்பதால் ஆர்வத்துடன் செய்கிறேன் என்றார்.இவரை வாழ்த்த 97897 88635.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ