உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / விருந்தினர் பகுதி / குறைபாடு என்பது வெறும் வார்த்தையே சூப்பர் பவராக்கிய காட்சன்

குறைபாடு என்பது வெறும் வார்த்தையே சூப்பர் பவராக்கிய காட்சன்

பார்வையில்லையே... மற்றவர்கள் போல் நம்மால் இருக்க முடியவில்லையே என்பதற்கு இடம் கொடுக்காமல் தொழில்நுட்பத்தை தனக்கு ஏற்றவாறு உபயோகப்படுத்திக்கொண்டு தன்னம்பிக்கையுடன் இசையுலகில் தனக்கென ஒரு முத்திரை பதிக்க பன்முக திறமைகளோடு பயணித்து வருகிறார் இசையமைப்பாளர் காட்சன்.ஐ.டி., ஊழியர், தொழில்நுட்ப நிபுணர், இசையமைப்பாளர், பயிற்சியாளர் என பன்முக திறமைகொண்ட சென்னையை சேர்ந்த காட்சன் பார்வை குறைபாடுடையவர். சிறு வயதிலிருந்தே இசை மீது ஆர்வம் கொண்ட காட்சனுக்கு முதலில் பெற்றோர் சிறிய கீ போர்டு வாங்கி கொடுத்தனர். அப்போதிருந்தே தொலைக்காட்சி, ரேடியோக்கள் வாயிலாக கேட்கும் இசைகளை வாசிக்க முயற்சி செய்திருக்கிறார். பெற்றோர் இசை பயிற்சி வகுப்பில் சேர்த்துள்ளனர்.பார்வை குறைபாடு உள்ளவர் என்பதால் பலரும் கற்றுகொடுக்க முன்வரவில்லை. 2 மாதங்களுக்கு ஒரு முறை வேறொரு மாஸ்டரை தேட வேண்டிய சூழல் உருவானது. இசை மேல் உள்ள ஆர்வத்தால் தானாக இசை கற்று வந்தார்.உயர்கல்வி படிக்கும்போது ராஜேஷ் என்ற இசை ஆசிரியர் கற்றுக்கொடுக்க முன்வந்தார். அவர் மூலமாக லண்டன் டிரினிட்டி இசைக் கல்லுாரியில் தேர்ச்சி பெற்றார். கம்ப்யூட்டர் மீதான ஆர்வமும் அதிகமிருந்தது. ஆனால் குறைபாட்டின் காரணமாக கல்லுாரியில் அந்த பிரிவுகளை எடுக்க முடியவில்லை. தனியாக டிப்ளமோவில் கம்ப்யூட்டர் குறித்து படித்துள்ளார்.

அனிருத்துடன் பணியாற்றும் வாய்ப்பு

கல்லுாரி, படிப்பு, இசைப்பயிற்சி என வாழ்க்கை சென்று கொண்டிருந்த வேளையில் கொரோனா வந்தது. இவருக்கு இந்த காலகட்டம் பெரிய மாற்றங்களை கொண்டு வந்தது. தான் முன்னேற என்ன செய்ய வேண்டும், எப்படி கற்றுக்கொள்வது என்பது குறித்த ஆராய்ச்சிகளை தொழில்நுட்பங்களையும், இணையத்தையும் வைத்து தேடி உள்ளார். பல்வேறு நாட்டின் இசையை கேட்டு இசை ஆராய்ச்சியும் செய்து தானாக பயிற்சி பெற்று மியூசிக் ப்ரொடக்சனை உருவாக்கினார். யுடியூப் சேனலில் இசையமைத்தவற்றை அப்லோட் செய்ய வரவேற்பை கொடுக்க ஆரம்பித்தது.ஒரு இசையமைப்பாளரின் இசை எப்படி இருக்கிறதோ அதேபோல் அவர்கள் என்ன சவுண்ட் பயன்படுத்தியிருப்பர் என்பது வரை ஆராய்ச்சி செய்து அதே இசை போல் காட்சனும் இயக்கி உள்ளார். அதன் வாயிலாக அனிருத்துடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்து.கிரிமினல் கிரஷ் ஆல்பம் ஸாங் பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாட இசையமைத்தது காட்சன் தான். தற்போது 7 மில்லியன் பார்வையாளர்களை தாண்டி அந்த பாடல் இருக்கிறது. பொருளாதார சூழல் காரணமாக பல்வேறு அட்வான்ஸ் கோர்ஸ் படித்து தற்போது ஐ.டி., துறையில் பணியாற்றுகிறார். இசை பயணம் இன்றும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. சினிமாவில் ஆல்பம் பாடல்கள், வெளிவராத படங்கள் என பலவற்றுக்கும் இசையமைத்துள்ளார்.இது மட்டுமின்றி மனநல ஆலோசனை வழங்குதல், புத்தக எழுத்தாளர், பயிற்சியாளர் என பன்முக திறமை கொண்டுள்ளார். வாழ்வில் சந்தித்த இடர்களை எப்படி தாண்டி வெற்றிபெற்றார் என காயங்கள் (Scare), Disability to ability என்கிற 2 புத்தகங்களாக வெளியிட்டுள்ளார்.

கண்கள் தடுமாறிய இடங்களில்...

காட்சன் நம்மிடம் பகிர்ந்து கொண்டது: நான் வளர வளர பார்வை படிப்படியாக மங்க தொடங்கியது. ஆனால் இருளை தடையாக கருதாமல், உலகை புதிய கண்ணோட்டத்தில் ஆராய்வதற்கான வழியாக ஏற்றுக்கொண்டேன். பெற்றோர், நண்பர்கள், உடனிருந்தவர்கள் ஊக்கப்படுத்தினர். என் கண்கள் தடுமாறிய இடங்களில் என் மற்ற புலன்கள் துணை நின்றன. காதுகள் ரேடாராகவும், கைகள் எனது வழிகாட்டியாகவும் மாறின. சில நேரங்களில் நான் கண்ணுக்கு தெரியாதவனாக உணர்ந்தேன். என்னை பலரும் ஒதுக்கி வைத்தனர். வேண்டுமென்றே அல்ல, என்னால் சமாளிக்க முடியாது என அவர்கள் கருதினார்கள்.குறைபாட்டை சூப்பர் பவராக மாற்ற முடிவு செய்தேன். உண்மையான குறைபாடு, முயற்சி செய்ய தைரியம் இல்லாததுதான்.தொழில்நுட்பமும் இசையும் என் இருளை வெளிச்சமாக்கி விட்டன. ஆராய்ச்சி, முடிவில்லாத பயிற்சியால் அனைத்தும் கற்றுக்கொண்டேன். சினிமா இசையமைப்பாளராக சாதிப்பதை ஒரே குறிக்கோளாக வைத்துள்ளேன். தினமும் 14 மணி நேர உழைப்பை கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.குறைபாடு என்பது ஒரு வார்த்தை மட்டுமே. அது நம்மை வரையறுப்பதில்லை.குறைபாட்டை கொண்டாடுவது மட்டுமல்லாமல் திறனையும் கொண்டாடுவோம் என்றார் உற்சாகத்தோடு..இவரை வாழ்த்த... 97911 91534.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ