மேலும் செய்திகள்
மன உறுதியுடன் விடாமுயற்சி பெண் தொழிலதிபர்
28-Jul-2025
இ ளம் வயதிலேயே சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகளால் அவதிக்குள்ளாவோரது எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சத்தான, பாரம்பரிய உணவுகளை மறந்து பாஸ்ட்புட் கலாசாரத்திற்கு மாறியதே இதற்கு காரணம் என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். டேஸ்டியாகவும், ெஹல்த்தியாகவும் இயற்கை மணம் மாறாமலும் உணவுகளை எடுத்து கொண்டாலே இதுபோன்ற பிரச்னைகளே இருக்காது. அதற்காகவே பிரஷ் பழங்கள், தானியங்களை கொண்டு இன்றைய பாஸ்ட்புட் கலாசாரத்திற்கு ஏற்ப உணவு வகைகளை தயாரித்து வழங்கி மதுரை மக்களின் மனங்களுக்கு நெருக்கமாகி இருக்கிறார் சுப்புலட்சுமி. வெற்றிகரமான தொழில் முனைவோரானது குறித்து சுப்புலட்சுமி மனம் திறந்ததாவது... தனியார் வங்கியில் சில ஆண்டுகள் பணிபுரிந்தேன். திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். வேலை சற்று அலுப்பு தந்தது. இன்றைய அவசரயுகத்தில் பாஸ்ட்புட் பெரும்பான்மையானவர்களின் விருப்பமாக இருக்கிறது. அப்படி பட்டவர்களுக்கு நம்மால் முடிந்தளவுக்கு இயற்கையான முறையில் ருசியாகவும், சத்தாகவும் உணவு வழங்க முடிவு செய்து 2022ல் வங்கி பணியை உதறி விட்டு, மதுரையில் சிறிய கடை வாடகைக்கு எடுத்து நியூட்ரிஷன் சாலட், சான்ட்விச் தயாரித்து கொடுக்க துவங்கினேன். நல்ல வரவேற்பு. பெரிதாக பிரஷ் பியூஷன் என்ற பெயரில் நிறுவனத்தை தொடங்கினேன். முழுக்க வெஜ்டேரியன் தான். பழங்கள், தானியங்களால் பீட்சா, பர்கர், நுால்டுல்ஸ், நியூட்ரிஷன் சாலட், சான்ட்விச் தயாரித்து கொடுக்கிறேன். திருமணம் போன்ற விழாக்களுக்கு பலர் மொத்தமாக ஆர்டர் கொடுக்கின்றனர். இதனால் நான் இன்று பலருக்கு வேலைவாய்ப்பு கொடுப்பவளாக மாறியிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. கலப்பட ரசாயன உலகில் மக்களுக்கு இயற்கையான முறையில் உணவுவகைகளை கொடுப்பது ஆத்ம திருப்தி தருகிறது. 'ஈட் பிட்... ஒர்க் பிட்... லிவ் பிட்' என்பதை 'மோட்டோவாக' வைத்து செயல்படுகிறோம். இன்று பெண்களுக்கு எவ்வளவோ பிரச்னைகள் இருக்கத்தான் செய்கிறது. அதற்காக பெண்கள் வீடுகளிலேயே முடங்கி விடக்கூடாது. நம்மால் முடியும் என முதலில் தன்னம்பிக்கை கொள்ள வேண்டும். சொந்த காலில் நிற்க வேண்டும் என்ற வெறி வந்து விட்டால் போதும் பெண்கள் எந்த துறையில் இறங்கினாலும் சாதிக்கலாம் என்றார். இவரை வாழ்த்த 98940 74218
28-Jul-2025