| ADDED : மார் 10, 2024 12:04 PM
இன்றைய அவசர உலகில் அவசரப்பணியால் வெளியூர்செல்லும் போது வீட்டில் உள்ள லைட், பேன், பிரிட்ஜ் உள்ளிட்ட மின் சாதனங்களை 'ஆப்' செய்ய மறந்து விடுவது வழக்கமாகி விட்டது. இதுபோன்ற சமயத்தில் உலகில் எங்கிருந்தாலும் உங்கள் அலைபேசி வழியாக இயங்கும் 'குளோபல் சுவிட்சிங் சிஸ்டம்' என்ற புதிய தொழில்நுட்பம் மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.பொதுவாக நோயாளிகள், வயதானவர்கள் மற்றும் வேலைக்காக தொலைதுாரம் செல்பவர்களுக்கு இது உதவியாக இருக்கும். வீடு, அலுவலகம், மருத்துவமனை மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு ஆட்டோமேஷன் செய்ய ஏற்றது. வெளிநாட்டில் வாழும் இந்தியர்களும், இந்தியாவில் இருக்கும்அவர்களுடைய வீடுகளில் உள்ள மின்சாதனங்களை இயக்கமுடியும்.உங்கள் தோட்டம் தொலைவில் இருந்தாலும் வீட்டில் இருந்து கொண்டே நீர்ப் பாசனம் செய்து கொள்ளலாம் என்கிறார் ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டையை சேர்ந்த எலக்ட்ரீஷியன் பி.ராபின்சன் 39. அவர் கூறுவதென்ன...நான் சென்னையில் ஒரு கார்ப்பரேட் கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்தேன். 2020ல் கொரோனா பரவல் சூழ்நிலையால் சொந்தஊர் வந்து விட்டேன். அதன் பிறகு வேலைகள் எதுவும் சரியாக அமையாததால் தெரிந்த எலக்ட்ரிக்கல் வேலையை சொந்தமாக செய்து வந்தேன்.தொழிலை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்ல நினைத்து அதற்கான வாய்ப்புகளைத் தேடினேன். அப்போது தான் 'குளோபல் சுவிட்சிங் சிஸ்டம்' என்ற ஒரு அமைப்பு வெளிநாட்டில் இருப்பதை தெரிந்து கொண்டேன்.தற்போது இருக்கும் இயந்திர வாழ்க்கை சூழ்நிலையில் மின்சாதன பொருட்களான பேன், பிரிட்ஜ், மோட்டார், டி.வி., சார்ஜர் போன்றவைகளை வயதானவர்கள், நோயாளிகள் ஆன் செய்யவும், இயக்கவும் சிரமப்படுகின்றனர்.ஏற்கனவே வைபை, ப்ளுடூத் உதவியுடன் வீட்டிலிருந்து 28 மீட்டர் வெளியில் இருக்கும் போது அலைபேசி வழியாக மின் சாதனங்களை இயக்கும் வசதி உள்ளது. அதே சமயம் அவசரமாக பணிக்கு செல்பவர்கள், வெளியூர் செல்லும் போது 'சுவிட் ஆப்' செய்ய மறந்து விடுவது போன்ற இன்னல்களை இந்த சிஸ்டத்தில் சரிசெய்ய முயற்சி எடுத்தேன்.பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஒரு நிறுவனத்தின் கூட்டு முயற்சியுடன் இந்தக் கருவியை செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளேன். இது இன்டர்நெட்டினால் இயங்கும் ஒரு ஐ.ஓ.டி., ப்ராடக்ட். ஒரு கருவியின் வழியாக நான்கு மின் சாதனங்களை இயக்கலாம். மக்களின் தேவையை பொறுத்து வீட்டில் அமைப்பதற்கு ரூ.12,000 முதல் ரூ.18,000 வரை செலவாகும். வீட்டில் ஏற்கனவே இருக்கும் இன்டர்நெட்டையே இதற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.இந்தக் கருவிக்கு ஓராண்டு உத்தரவாதம் உண்டு. இதனுடன் ஒரு ரிமோட்டும் வழங்கப்படும். வீட்டில் இருக்கும் போது ரிமோட், அலைபேசி வழியாக மின் சாதனங்களை சுவிட் ஆன், ஆப் செய்யலாம். இதற்கு மக்களிடமும் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது என்றார்.- தொடர்புக்கு: 99527 03928