அமீரக குறுநாடக விழா போட்டியின் 9வது வருட நிகழ்ச்சி
துபாய் : தமிழகத்திலிருந்து புலம் பெயர்ந்து, அமீரகத்தில் பல ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்களுக்கு முத்தமிழான இயல் இசை நாடகம் மற்றும் பல்வேறு கலைகளில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகளுக்கு குறை இருந்ததே இல்லை. இயல், இசை போன்ற தனித்திறமைக்கான அங்கீகாரங்கள் கிடைக்க பல வாய்ப்புகள் வருடம் முழுதும் அமையும். என்றாலும், நாடக கலை என்பது குழுவாக அரங்கேற்றப்படவேண்டும் என்பதால் வாய்ப்புகள் அரிதே!! மேலும் ஒரே மேடையில் பல நாடகங்கள் நடத்தவும் சவால்கள் அதிகம்!! ஆமீரக குறு நாடக விழா அமைப்பாளர்கள் 2016 ம் வருடம் முதல் இவர்களின் திறமையையும் ஆர்வத்தையும் கருத்தில் கொண்டு மேடையேறும் வாய்ப்பினை அமைத்து போட்டியாக நடத்தி வருகிறார்கள். கதை வசனம் எழுதி, அது தேர்ந்தெடுக்கப்பட்டதும், நடிக நடிகையருடன் ஒத்திகை செய்து, கதைக்கேற்ற பின்புல அரங்க அமைப்புகளை திட்டமிட்டு, பதாகைகள் அழைப்புகள் தயார் செய்து, கதாபாத்திரத்திற்கு ஏற்ப ஒப்பனை மற்றும் உடை அலங்காரங்களை முடிவு செய்து என மிகப்பெரும் பணியில் ஈடுபட வேண்டியிருக்கும். உடன் பல்வேறு குழுக்கள் மோதுவதால் மற்றவரை காட்டிலும் சிறப்பாக மிளிர முற்படுவர். நூறு குறுநாடகங்களுக்கு மேலாக குழுக்கள் மேடை கண்டிருக்கும் இவ்விழாவில் பல நாடக உலக பிரபலங்கள் பங்கு கொண்டு சிறப்பித்துள்ளனர். இவ்வருடம் மேடை நாடகங்களில் தன் கலை உலக வாழ்வை துவங்கி தரமான பல மலையாள படங்கள், தமிழ் திரைப்படங்களில் குணசித்திர வேடங்கள், சின்னத்திரையில் தன் நடிப்பால் உலகின் பல தமிழ் ரசிகர்களை கவர்ந்த ரேணுகா குமரன் தலைமையேற்று சிறப்பித்தார். 12 நாடகங்களில், 100 பங்கேற்பார்களின் திறனை கண்டு மகிழ்ந்து, மதிப்பிட்டு, அரங்கம் நிறைந்த பார்வையாளர்கள் முன் அது குறித்த விமர்சனங்களை பகிர்ந்து, பரிசுகளும் நினைவு பரிசும் வழங்கி சிறப்பித்தார். 2024 ம் வருட அமீரக குறு நாடக விழாவில் வெற்றி பெற்றவர்கள் விவரங்கள் 1.பெறப்பட்ட முதல் கதை: பெருமாளே- சுதா மன்னர் மன்னன் 2. பெறப்பட்ட முதல் பதாகை: பெருமாளே- சுதா மன்னர் மன்னன் 3. சிறந்த பதாகை: பட்டாகத்தி; உங்கள் உதவி தேவை 4. சிறந்த ஒப்பனை, உடை அலங்காரம்: உங்கள் உதவி தேவை; மகளிர் மட்டும் 5. சிறந்த அறிமுகம்: நடிகர் : மொகமது சமீர் கான் (பணம் பத்தும் செய்யும்); நடிகை: விசாலாக்ஷி நம்பிராஜன் (நேச்சுரல் இண்டெலிஜென்ஸ்); கதை வசனம்: ப்ரியங்கா நாராயணன் (பட்டாம்பூச்சி); இயக்குனர்: முத்துக்குமரன் (பணம் பத்தும் செய்யும்) 6. சிறந்த மேடை பின்புலம்: உங்கள் உதவி தேவை; மகளானேன் 7. சிறந்த கதை, வசனம், உரையாடல்: பெருமாளே- சுதா மன்னர் மன்னன்; மகளானேன்- சதீஷ் குப்புசாமி 8. சிறந்த இசை: நெல்சன் (பட்டாகத்தி); ரஞ்சித் குமார் (மகளானேன், செல்லமே) 9. சிறந்த குழந்தை நட்சத்திரம் : தாரிஷா ஸ்ரீநிவாசன்; அப்துல் ஹஃபீஸ் 10. சிறந்த குணச்சித்திர வேடம்: ராஜாரமன் (பட்டாக்கத்தி); ரூபா பிரபுகிருஷ்ணன் (அலட்சியமும் அபகடம்) 11. சிறந்த நடிகர் : விக்னேஷ் ராஜ் லக்ஷ்மிபதி (மகளானேன்); அன்பன் கோவிந்தராஜன் (பட்டாகத்தி) 12. சிறந்த நடிகை: பூர்ணிமா பாலாஜி (மகளிர் மட்டும்); ஜோஷினி ராதாகிருஷ்ணன் (மகளானேன்) 13. சிறந்த இயக்குனர்: அன்பன் கோவிந்தராஜன் (பட்டாக்கத்தி); ஸ்ரீவித்யா நாராயணன் (மகளிர் மட்டும்) 14. சிறந்த நாடகம்: பட்டாம்பூச்சி (பிரியங்கா நாராயணன்); ஆலட்சியமும் அபகடம் (ஷங்கர் மஹாதேவன்) அமீரகத் தமிழர்களின் நாடகக் கலை ஆர்வத்தை மேம்படுத்த விழா அமைப்பாளர்களின் இப்பெரும் முயற்சிக்கு உறுதுணையாக நிற்கும் புரவலர்களுக்கு தங்கள் நன்றியை தெரிவித்து தகவல்களை பகிர்ந்தார்கள் விழா அமைப்பாளர்கள் ஆனந்த் மற்றும் ரமா மலர். - நமது செய்தியாளர் காஹிலா