உள்ளூர் செய்திகள்

துபாய் பிரமுகர்கள் இணையவழி இலக்கிய ஆய்வரங்கு

துபாய் : ஏகத்துவ மெய்ஞ்ஞானத் தமிழ்ச் சங்கம் சார்பில்,இறைநேசர் குருபிரான் கலீல் அவ்ன் நாதரின் இலக்கியப் படைப்புகள் ஆய்வரங்கு, 11.05.2024 (சனிக்கிழமை) இந்திய நேரப்படி மாலை 5 மணி அளவில், ஜூம் செயலி வாயிலாக இணைய வழியில் நடைபெற்றது. ஆய்வரங்குக்கு, நபிகள் நாயகத்தின் (ஸல்) 36ஆம் தலைமுறைத் திருப்பேரர் ஜமாலிய்யா அஸ்ஸய்யித் யாஸீன் அலி மௌலானா அல்ஹஸனிய்யுல் ஹுஸைனிய்யுல் ஹாஷிமிய் நாயகம் தலைமை தாங்கி, ஆசியுரையாற்றினார். குருபிரான் கலீல் அவ்ன் நாதரின் 'குத்புகள் திலகம் யாஸீன் மௌலானா அல்ஹாஷிமிய் (ரலி)” என்னும் கவிதைக் காவிய நூல், ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரி மேனாள் பேராசிரியர் முனைவர் தி.மு.அப்துல் காதர் நூல் ஆய்வுரை ஆற்றினார். தொடக்கமாக, மதுக்கூர் அல்ஹாஜ் முஹம்மது தாவூத் ஹக்கிய்யுல் காதிரிய் இறைபோற்றல் பாடினார். மதுக்கூர் கலீபா எம் முஸ்தபா ஹக்கிய்யுல் காதிரிய் நபி போற்றல் பாட, சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழக தரவு அறிவியல் மாணவர் அ.முஹம்மது மாதிஹ் ஹக்கிய்யுல் காதிரிய் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினார். ஏகத்துவ மெய்ஞ்ஞானத் தமிழ்ச் சங்கத் தலைவர் கலீபா. ஆலிம்புலவர். ஹுஸைன் முஹம்மது மன்பஈ ஹக்கிய்யுல் காதிரிய், ஆய்வரங்கம் குறித்த அறிமுக உரை யாற்றினார். ஆய்வரங்க நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக, குருபிரான் கலீல் அவ்ன் நாதர் ஞானவெளிப்பாடாக இயற்றிய, 'மஹானந்தன் நானே” என்னும் மெய்ஞ்ஞானப் பாடல், இசையமைப்பாளர் மௌன ராகம் முரளி மற்றும் பஹ்மீ பரூக்கி ஆகியோரின் இசை வடிவமைப்பில், மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் குரலில், காணொளி வடிவமாக வெளியிடப்பட்டது. முன்னதாக, கவிஞர். கிளியனூர் இஸ்மத் ஹக்கிய்யுல் காதிரி வரவேற்புரையாற்ற, நிறைவில், துபாயில் வசித்து வரும் அதிரை எஸ். சர்புத்தீன் ஹக்கிய்யுல் காதிரிய் நன்றி கூறினார். நிகழ்ச்சியை அ.நைனார் முஹம்மது அன்சாரி ஹக்கிய்யுல் காதிரிய் தொகுத்து வழங்கினார். இணைய வழி ஆய்வரங்கில், மௌலானாமார்கள், கலீபாக்கள் உள்பட, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, துபை, அபுதாபி, குவைத், கத்தார், சௌதி அரேபியா, இலண்டன் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் நூற்றுக்கணக்கான தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். இறைநேசர் குருபிரான் கலீல் அவ்ன் நாதரின் இன்னொரு இலக்கிய படைப்புடன் அடுத்த ஆய்வரங்கம் எண். 2 நடைபெறும் என்ற அறிவிப்போடும் அழைப்போடும் நிகழ்ச்சி நிறைவு பெற்றது. - நமது செய்தியாளர் காஹிலா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !