கத்தார் முத்தமிழ் மன்றத்தின் முத்தமிழ் விழா
பாலைவனச்சோலைகள் நிறைந்த கத்தார் நாட்டில் தோகா நகரிலுள்ள, இந்தியா கலாச்சார மைய அசோகா உள்ளரங்கத்தில், கத்தார் முத்தமிழ் மன்றத்தின் 'முத்தமிழ் விழா'வில் மூன்று தமிழ்க்கலை வடிவங்களில் தமிழருவி பொழிந்ததால், வெயில் காலத்து மாலைப் பொழுது தமிழ் மக்களின் மனதை குளிர்வித்தது. இயல், இசை, நாடகம் ஆகிய மூன்று கலைப்பரிமாணத்தில் இந்த முத்தமிழ் விழாவின் நிகழ்ச்சிநிரல் அமைக்கப்பட்டிருந்தது. ஐ.சி.சி.யின் தலைவர் மணிகண்டன், பொதுச் செயலாளர் மோகன் குமார் ஆகியோர் கலந்துகொண்ட இந்த நிகழ்வை முத்தமிழ் மன்ற நிர்வாகக்குழு உறுப்பினரான ரெஜினா கோபால்சாமி தனது தேன்தமிழ் மொழிநடையால் நேர்த்தியாக தொகுத்து வழங்கினார். கர்நாடக 'சங்கீத இசையொலி' ரஞ்சனி ரமேஷ் குழுவினர் வழங்கிய குழு இசைப்பாடல்களுடன் தொடங்கியது முத்தமிழருவி. நீராருங் கடலுடுத்த நிலமடந்தை என்று தமிழ்த்தாய் வாழ்த்தினில் ஆரம்பித்து, அமுதே தமிழே எனதுயிரே என தவழ்ந்து, இறைவனிடம் கை ஏந்துங்கள் என ஓங்கி ஒலித்து, தமிழா தமிழா நாளை நம் நாளே என்று நம்பிக்கை முழக்கத்தோடு சேர்ந்திசை பாடல்களை இளம் பாடகர்கள் வெகு சிறப்பாக பாடி நேர்மறை அலைகளை அரங்கில் நிரப்பினர். அதைத் தொடர்ந்து 'நாட்டிய ஒளி' முத்துலஷ்மி கஜலக்ஷ்மணனின் குழு வழங்கிய கண்கவர் பரத நாட்டியம் அரங்கத்தை அலங்கரித்து காண்போரை பரவசப்படுத்தியது. இயற்றமிழ் வகையில் 'கவிச்சமர்' என்ற ஒரு புதிய இலக்கிய நிகழ்வை கத்தார் முத்தமிழ் மன்றம் அரங்கேற்றியது. கவிச்சமரில் மரபும் புதுமையும் கவிதையில் வெவ்வேறு தலைப்புக்களில் மோதிக்கொண்டன. கவிஞர் மனோகௌதம் மற்றும் கவிஞர் சிவசங்கர் முறையே மரபுக்கவிதை புதுக்கவிதைகளை சொல்லி கவிதைப்போர் செய்தது, இனிமையோடு புதுமையாகவும் இருந்தது. அடுத்தாக, நாடகத்தமிழ் வரிசையில் வீரபாண்டிய கட்டபொம்மனின் இறுதி வீர முழக்கத்தை கட்டபொம்மனாக கயல்விழி கிருஷ்ணமூர்த்தியும், துரையாக சஞ்சனா பாலாவும் மற்றும் தர்ஷன், ரக்க்ஷன், மதுசரண் ஆகியோரும் மிகச் சிறப்பாகவும் தத்ரூபமாகவும் நடித்தனர். கட்டபொம்மன் கர்ஜனையை கண்டுகளித்த அரங்கத்து மக்கள் எழுந்து நின்று கரவொலி எழுப்பி தங்களது உணர்வுப்பூர்வமான பாராட்டைத் தெரிவித்தனர். முத்தமிழ் இலக்கிய விழாவில் அடுத்ததாக பட்டையை கிளப்பியது 'எட்டுப்பட்டி பஞ்சாயத்து', என்ற தலைப்பில் அரங்கேறிய பட்டிமன்றம். பல்கலை வித்தகர் விஜய் ஆனந்த் நாட்டாமையாக அமர்ந்து 90 vs 2K தலைப்பில் ஊர்மக்கள் கூடிப்பேசியது போல, ஒருசுவாரஸ்யமான கிராமத்து பஞ்சாயத்து நடந்தது. ரெஜினா கோபால்சாமி, கவிஞர் மனோ கௌதம், கிருஷ்ணவேணி திருமூர்த்தி ஆகியோர் '90களின் வாழ்வியல்' சார்ந்த கருத்து மழையை நகைச்சுவை தோய்த்து பொழிய, தொடர்ந்து வசந்தி நகுலன், நிர்மலா குரு, ஷேக் காதர் ஆகியோர் '2K வாழ்வே சிறந்தது' என எதிர்கருத்தை முன்னிறுத்தி வாதங்களை நயமாக நகைச்சுவையாக எடுத்து வைக்க, மக்கள் மனவோட்டத்தை உணர்ந்திருந்த நாட்டாமை, அவர்கள் விரும்பியதையே பஞ்சாயத்தின் முடிவென தீர்ப்பு வழங்கினார். ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்த பஞ்சாயத்தை, தங்களின் இருக்கையை விட்டு நகராமல் மக்களும், விருந்தினர்களும் அதீத மகிழ்ச்சியுடன் ரசித்தனர். இறுதி நிகழ்வாக 'துள்ளல் பறை' அமைப்பின் நிர்வாகி பறை இசைக்காவலர் நிர்மலின் குழுவினர் கொட்டிய தமிழ்ப்பாரம்பரிய அதிரடி பறையிசை அரங்கத்தை அதிர வைத்தது. இசைஞானியின் மெல்லிசை தொடங்கி இசைப்புயலின் துள்ளிசை வரை பறையடியில் பாங்குடன் படைத்து, முடிவில் துள்ளல் பறைஇசைக்குழுவின் பிரத்தியேக அதிரடியை வழங்கி பார்வையாளர்களை பரவசத்தின் உச்சிக்கு கொண்டு சென்றனர், பறையிசைக் கலைஞர்கள். இந்த முத்தமிழ் விழாவில், 'பல்கலை வித்தகர்' விஜய் ஆனந்த், 'கவிஞானி' மனோ கௌதம், அபிநய ராகா கலைக்கூடம் நடத்திவரும் 'ஏழிசைத் தென்றல்' ரஞ்சனி ரமேஷ், நாட்டுப்புற மற்றும் பரதக்கலை ஆசிரியையான 'ஆதிக்கலைக் காவலர்' முத்துலஷ்மி, துள்ளல் பறையிசைக்குழு நடத்திவரும் 'ஆதிக்கலைக் காவலர்' நிர்மல் சந்திரபோஸ், ஆருத்ரா சிலம்பம் கலைக்கூடம் நடத்திவரும் 'ஆதிக்கலைக் காவலர்' சிலம்பம் சரவணன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். விழாவுக்கு வந்திருந்த முக்கியஸ்தர்களான ஐ.சி.சி.யின் தலைவர் மணிகண்டன், பொதுச்செயலாளர் மோகன்குமார், ஐ.சி.பி.எஃப்-ன் ராமசெல்வம், ஐ.எஸ்.சி.யின் புருஷோத்தமன், கத்தார் தமிழர் சங்கத்தின் கார்த்திக், முனியப்பன், பாண்டியன், பாபு ராஜவிஜயன், நவீனப் ப்ரியா, லட்சுமி ராமசெல்வம், 'தமிழ் மகன் அவார்ட்ஸ்' சாதிக் பாட்சா, 'மகிழ்வரங்கம்' வரதராஜன் மற்றும் ராமகிருஷ்ணன், திருமுருகன், சண்முக பாண்டியன், ரவீந்திர பிரசாத், சத்யராஜ் ஆகியோர் முத்தமிழ் மன்ற நிர்வாகக்குழுவுடன் சேர்ந்து கலைஞர்களை கௌரவித்து மகிழ்ந்தனர். கத்தாரில் இயங்கிவரும் பல்வேறு தமிழ் அமைப்புகளில் இருந்து தாகீர் பின் ஷேக், தவமணி, இபு இப்ரஹிம், குரு பிரசாத், ப்ரியா, கார்குழலி, ஹுசைன், தஸ்தகீர், 'ஆதிரன் சிலம்பம்' ரூபன் பிரபு, சொல்வேந்தர் மன்றம் ரமணி, சதீஷ் ஆகியோர் முத்தமிழ் விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். முத்தமிழ் மன்றத்தின் முத்தமிழ் விழா வெகு சிறப்பாக நடந்தமைக்கு ஆதரவு அளித்த தமிழ் மக்கள் அனைவருக்கும் அதன் நிர்வாகியான குரு நெகிழ்வோடு நன்றி பாராட்ட, அவரோடு முத்தமிழ் மன்றத்தின் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் அனைவரும் மேடையேறி பார்வையாளர்களுக்கு தங்களது நன்றியை தெரிவித்தனர். இந்த விழாவில் புகைப்படம் மற்றும் காணொளி பதிவுகளை சிறப்பாக செய்த 'ழா' கிரியேஷன்ஸ் வசீகரன் வசந்த் மரியாதை செய்யப்பட்டார். அதே போல 'ஸ்கை தமிழ்' ஊடக தொலைக்காட்சியின் நிறுவனர் பாசித் கௌரவிக்கப்பட்டார். நிகழ்ச்சியின் நிறைவில் அனைவருக்கும் பாரம்பரிய உணவுவகைகளான புளியோதரை, தேங்காய்சோறு, தயிர்சோறு முதலியவை இனிப்புடன் இரவு விருந்தாக வழங்கப்பட்டது. தமிழ் மொழியையும், மூன்று தமிழ்க்கலைகளையும் முன்னிறுத்தி, 'கற்றவை பற்றவை' எனும் தாரகைமந்திரத்தோடு இயங்கிவரும் கத்தார் முத்தமிழ் மன்றத்தின் முத்தமிழ் விழாவை, 'தரமான தமிழ் விழா' என ஒருமித்த கருத்தில் அனைவரும் பாராட்டியது குறிப்பிடத்தக்கது. - நமது செய்தியாளர் சிவ சங்கர். S -