குவைத்தில் தண்ணீர் மற்றும் மின்சாரத்தை சேமிப்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி
குவைத் : குவைத் நகரின் ஜலீப் அல் சுவைக் பகுதியில் உள்ள மஸ்ஜிதே அபு ரபேயில் இந்தியன் முஸ்லிம் அசோஷியேசனின் சார்பில் தண்ணீர் மற்றும் மின்சாரத்தை சேமிப்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி தொடங்கியது. குவைத் நாட்டில் வெப்பநிலை கடுமையாக நிலவி வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோடையில் தண்ணீர் மற்றும் மின்சாரத்தை சேமிப்பது தொடர்பான இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு எற்பாடு செய்யப்பட்டது. தொடக்கமாக இறைவசனங்கள் ஓதப்பட்டது. பொறியாளர் நல பெடரேசன் அமைப்பின் தலைவர் எம்.கே.எஸ். மொஹியுதீன், அமெரிக்க பாதுகாப்பு தொழில் முனைவோர் அமைப்பின் குவைத் பிரிவின் பொதுச் செயலாளர் செய்யது காசிஃப் வாலி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் முக்கிய பிரமுகர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். இந்தியன் முஸ்லிம் அசோஷியேசனின் தலைவர் மௌலானா முஹம்மது உமர் பலாஹி சாஹிப் முக்கிய உரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் திருக்குர்ஆனில் 'உண்ணுங்கள், பருகுங்கள் வீண் விரயம் செய்யாதீர்கள்' உள்ளிட்ட பல்வேறு இறைவசனங்களை நினைவு கூர்ந்தார். மேலும் தண்ணீர், எரிசக்தி உள்ளிட்டவற்றை சேமிக்க வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தினார். இது தொடர்பான விழிப்புணர்வு டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஏற்படுத்தப்படும். மாணவ, மாணவியருக்கு பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்படும் என்றார். இந்த நிகழ்ச்சியில் இந்தியன் முஸ்லிம் அசோஷியேசனின் நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். - நமது செய்தியாளர் காஹிலா