ஜெத்தா தமிழ்ச்சங்கம் சார்பில் தமிழ்ப் பயிற்சி மையம்
ஜெத்தா தமிழ்ச் சங்கம் சார்பில் தமிழ்ப் பயிற்சி மையம் துவங்கப்பட்டுள்ளது. இதற்கான கலந்தாய்வு கூட்ட அமர்வு ஜெத்தா நகரில் நடைபெற்றது. இதில் தன்னார்வல ஆசிரியர்களாக சேர்ந்துள்ள ஆசிரியர்களும் மற்றும் இந்திய பள்ளிகளில் பணிபுரியும் பள்ளி முதல்வர்களும் தமிழ் ஆசிரிய ஆசிரியர்களும் குடும்பத்துடன் வந்து கலந்து கொண்டனர். இந்த கலந்தாய்வில், இதுவரை பதிவு செய்துள்ள 80 குழந்தைகளுக்கு (மேல் மழலையர்கள் முதல் இரண்டாம் வகுப்பு வரை) வார விடுமுறை நாட்களில் நடத்தவிருக்கும் நேரடி வகுப்பிற்கான பாடத்திட்டம் மற்றும் வழிமுறைகள் குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டது. இதன் அடுத்த அமர்வாக பதிவு செய்துள்ள குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் உடனான சந்திப்பு மற்றும் நெறிமுறைகள் விளக்க கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை நடைபெற இருப்பதாக நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்தக் கூட்ட அமர்விற்கு வந்திருந்த அனைவருக்கும் மூர்த்தி பூங்கொத்து கொடுத்து உபசரிக்க, ஜெத்தா தமிழ்ச் சங்கம் சார்பில் பிரேம் வரவேற்றார். அதனை தொடர்ந்து சிராஜ் ஜெத்தா தமிழ்ச் சங்கத்தின் சேவைகள் குறித்தும், இந்த பயிற்சி மையத்தின் முக்கியத்துவம் குறித்தும் விளக்கினார். மேலும், சிறப்பு அழைப்பாளர்களாக சர்வதேச பள்ளிகளில் இருந்து பங்கேற்ற பள்ளி முதல்வர்களுக்கும்,தமிழ் ஆசிரியர்களுக்கும், தன்னார்வல தமிழ் ஆசிரியர்களுக்கும் சிறப்பு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து, தமிழ்ப் பயிற்சி மையத்தின் எண்ணம், நோக்கம் இவைகள் பற்றி மருத்துவர் ஜெய் ஸ்ரீ விளக்க, பாடத்திட்டங்கள் குறித்து பேராசிரியை ஹேமா ராஜா, பேராசிரியை தங்கம் மகேந்திரன் விரிவாக எடுத்துரைத்தார்கள் . தன்னார்வல ஆசிரியர்களை, பார்த்திபன், செந்தில் அறிமுகம் செய்து வைத்தனர். ஆசிரியர்களுக்கான வழிமுறைகளையும் செயல் திட்டங்களும் சத்யா தங்கம் விளக்கினார். இந்த நிகழ்ச்சியினை சிவக்குமார் தொகுத்து வழங்க, இறுதியாக ஜெய் ஷங்கர், தமிழ் பயிற்சி மையத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி விரிவாக எடுத்துரைக்க, காஜா மொஹிதீன் நன்றியுரையுடன் அணைத்து ஜெத்தா தமிழ்ச் சங்கம் நிர்வாக குழு உறுப்பினர்கள் ஒத்துழைப்பாலும் நிகழ்ச்சி இரவு உணவுடன் இனிதே நிறைவடைந்தது. - நமது செய்தியாளர் M.Siraj