உள்ளூர் செய்திகள்

சிங்கப்பூர் ஆலயத்தில் அன்னாபிஷேக கோலாகலம்

சிங்கப்பூர் ஆலயத்தில் அன்னாபிஷேக கோலாகலம் “ கல்லினுள் தேரை முதல் கருப்பை உயிர் வரை எண்ணாயிரம் கோடி உயிர்களுக்கு உணவு அளிப்பவன் ஈசன். அதனை நினைவு கூர்ந்து நன்றி செலுத்தும் விதமாக ஆண்டு தோறும் ஐப்பசி மாத பௌர்ணமி நாளில் அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது. சிவலிங்கத்தை அன்னத்தினால் முழுமையாக அலங்கரித்து ஆராதனைகள் செய்வதே அன்னாபிஷேகம். ஐப்பசி மாதப் பௌர்ணமிக்கு ஒரு சிறப்பு உண்டு. இந்நாளில்தான் சந்திரன் தனது சாபம் நீங்கி பதினாறு கலைகளுடன் முழுப் பொலிவுடன் திகழ்கிறான். “அன்னம் பரப்பிரம்மம் “ என்பர். உணவை இறைவனாகப் பார்க்கிறது ஆன்மிகம். அனைத்து உயிர்களுக்கும் அன்னமான உணவை அளித்துப் பாது காக்கும் சிவபெருமானுக்கு சாதத்தால் அலங்கரிப்பது இதன் சிறப்பாகும் “ என தலைமை அர்ச்சகர் ஆகம ப்ரவீண நாகராஜ சிவாச்சாரியார் அன்னாபிஷேக மகிமையை விளக்க பக்தர்கள் உணர்வு பொங்க “ ஓம் நமசிவாய...பரமேஸ்வராய ... தென்னாடுடைய சிவனே போற்றி ... எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி “ என முழங்க சிங்கப்பூர் மார்ஷலிங் ஸ்ரீ சிவ கிருஷ்ணா ஆலயத்தில் நவம்பர் 5 ஆம் தேதி அன்னாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.ஆலய மண்டபத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் சிவபெருமான் அன்னாபிஷேகத்தில் காட்சியளித்தமை திருவண்ணாமலையாரே நேரில் தோன்றியவாறிருந்ததாக பக்தர்கள் உணர்ந்து கோஷமிட்டனர். ஸ்ரீ அம்பிகை சந்தனக் காப்பு அலங்காரத்தில் ஜொலித்தது சர்க்கரைப் பந்தலில் தேன்மாரி பொழிந்தது போலிருந்ததென பக்தர்கள் மெய்சிலிர்த்தனர். மகா தீபாராதனை நிறைவு பெற்று பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது. ஆலய மேலாண்மைக் குழுத் தலைவர் சுரேஷ்குமார் அனைத்து ஏற்பாடுகளையும் முன்னின்று சிறப்பாகச் செய்திருந்தமை பாராட்டுக்குரியவை. மண்டபம் நிறை பக்தர்கள் மனநிறைவோடு சிவனருள் பெற்றுச் சென்றனர்.- சிங்கப்பூரில் இருந்து நமது செய்தியாளர் : வெ.புருஷோத்தமன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !