உள்ளூர் செய்திகள்

சிங்கப்பூர் ஸ்ரீ ராமர் ஆலயத்தில் ஸ்ரீ முருகன் திருக்கல்யாண மஹோற்சவ கோலாகலம்

பரித்ராணாய ஸாதுனாம் விநாசாய ச துஷ்க்ருதாம் தர்ம ஸம்ஸ்தாபனார்த்தாய ஸம்பவாமி யுகே...யுகே.பரித்ராணாய - {காப்பாற்றுவதற்காக - முக்திக்காக} ஸாதூனாம் - {பக்தர்களுடைய} விநாசாய { அழிப்பதற்கு } ச - { கூட } துஷ்க்ருதாம் { தீயவர்களுக்கு } தர்ம { தர்மத்தை } - ஸம்ஸ்தாபனார்த்தாய { திரும்பவும் நிலை நாட்ட } ஸம்பவாமி { அவதரிக்கிறேன் } - யுகே...யுகே { யுகம் யுகமாக }. துஷ்ட நிக்ரஹ இஷ்ட பரிபாலனம் செய்ய நிமிடமும் தாமதிக்காமல் இறைவன் எழுந்தருளி அருள்பாலிப்பார் என்பது கீதாச்சார்யார் திருவாக்கு. அசுரர்களின் அட்டகாசத்தை அடக்கி ஒடுக்கி நிம்மதி தரும் நல்வாழ்வு தர ஸ்ரீ முருகப்பெருமான் தாரகாசுரன், கஜமுகாசுரன், சிங்கமகாசுரன் முதலியவர்களை வதம் செய்து வெற்றி கண்டு அருள்பாலித்த பின்பு நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தை சிங்கப்பூர் சாங்கி ஸ்ரீ ராமர் ஆலயத்தில் தத்ரூபமாக நடத்திக் காட்டிப் பெருமை பெற்றனர். பழங்கள், பல்வகை மலர்கள், பட்சணங்கள், பட்டாடைகள் எனப் பல்வகை வரிசைப் பொருட்களை மங்கல மகளிர் ஆலயம் வலம் வந்து சமர்ப்பிக்க தெய்விக மணமக்கள் தனித்தனியே சர்வ அலங்கார நாயகர்களாக பக்தர்கள் புடைசூழ அழைத்து வரப்பட்டனர் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ....வீர வேல் முருகனுக்கு அரோகரா எனப் பக்தப் பெருமக்கள் முழங்க - வைகானஸ யஷோ பூஷணம் அம்மன்குடி வெ.ஸ்ரீநிவாச பட்டாச்சார்யார் தெய்விகத் திருமணத்தை நடத்தி வைத்தார். மணமக்கள் மாலை மாற்றி, அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, பூச்செண்டாடி, வரிசங்கம் நின்றோத தெய்வீக மங்கல நாதஸ்வர இசை முழங்கத் திருமுருகப் பெருமான் ஸ்ரீ வள்ளி - ஸ்ரீ தெய்வானைக்குத் திருமாங்கல்யதாரணம் நடைபெற்றபோது பக்தப் பெருமக்கள் உருக்கத்தோடு “ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ... வீரவேல் முருகனுக்கு அரோகரா “ என முழங்கியதுவிண்ணை எட்டியது. தெய்வீகத் தம்பதிகள் ஆலயம் வலம் வந்து அருள்பாலித்தனர். திருக்கல்யாணம் என்றால் விருந்தில்லாமலா ? ஆயிரக் கணக்காணோர் பங்கேற்றபோதும் தலை வாழை இலையில் அறுசுவை விருந்தை வழங்குவதில் ஆலய நிர்வாகமும் அருட்பிரசாதம் வழங்குவதில் அர்ச்சகர்களும் ஒருவருக்கொருவர் சளைக்காமல் ஈடுபட்டமை அனைவரின் பாராட்டினைப் பெற்றது. இப்படி இனியொரு தெய்விக நிகழ்வு வராதா என ஏக்கத்தோடு பக்தப் பெருமக்கள் பரவசத்தோடு இல்லம் சென்றனர். - நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்