சிங்கப்பூர் ஆலயத்தில் ஸ்ரீ சீதா ராமர் திருக்கல்யாண மஹோற்சவம்
ஈரேழு புவனங்களையும் இரட்சித்தருளும் ஸ்ரீமந் நாராயணனுக்கு உகந்த மாதம் புரட்டாசி. சிங்கப்பூர் பிரபல வைணவத் தலமான சாங்கி ஸ்ரீ ராமர் ஆலயத்தில் புரட்டாசி சனிக்கிழமை உற்சவங்கள் பூலோக ஸ்வர்க்கமாகக் கருதப்படுகின்ற திருமலை திருப்பதியில் நடைபெறுகின்ற அதே விதமாகக் கோலாகலமாக நடைபெற்று வருகின்றன. கடைசி சனிக்கிழமை வைகறையில் “ கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வ சந்த்யா பிரவர்த்திதே “ எனும் சுப்ரபாத தெய்வீக இசை இப்பகுதி முழுவதிலும் பக்திப் பிரவாகத்தைப் பரப்பியது. தொடர்ந்து தோமாலா சேவையும் திருமஞ்சணமும் ஹோமமும் கண்கொள்ளாக் காட்சிகளாக பக்தர்களுக்குப் பெருவிருந்து படைத்தன. முத்தாய்ப்பு நிகழ்வாக ஸ்ரீ சீதா - ராமர் திருக்கல்யாண மஹோற்சவம் வைகானஸ பகவத் சாஸ்திர முறைப்படி மண்டபம் நிறை பக்தர்களிடை தலைமை அர்ச்சகர் வைகானஸ யஷோ பூஷணம் அம்மன்குடி வெ.ஸ்ரீநிவாச பட்டாச்சார்யாரால் பக்தப் பெருமக்களின் “ கோவிந்தா வைகுந்த வாசா நாராயணா “ எனும் முழக்கமும் மங்கல இசையும் இணைய மெய்சிலிர்க்கும் வகையில் நடைபெற்றது. ஸ்ரீ மஹா விஷ்ணுவின் ஸ்லோகத்தை தலைமை அர்ச்சகர் சொல்ல பக்தப் பெருமக்கள் தொடர்ந்து பின்பற்றியைமை மகத்தான வைபவமாக அமைந்தது. மங்கல மகளிர் வரிசை எடுத்து ஆலயம் வலம் வர - பஞ்சாங்கம் படித்து - அம்மி மிதித்து - அருந்ததி பார்த்து - பூச்செண்டாடி - மாலை மாற்றி - வரிசங்கம் நின்றோத திருமாங்கல்ய தாரணம் நடைபெற்ற காட்சி காண கண்கோடி வேண்டுமென பக்தர்கள் உருக்கத்தோடு உணர்ந்தனர். தொடர்ந்து பக்தர்கட்குத் திருமாங்கல்ய சரடு வழங்கப்பட்டதைப் பிறவி பாக்கியமாக அனைவரும் கருதினர். திருமண வைபவமெனில் விருந்தில்லாமலா ? தலை வாழை இலையில் அறுசுவை அன்னதானத்தை ஆயிரக் கணக்கானோர் உண்டு மகிழ்ச்சிப் பெருக்கில் திளைத்தனர்.தென் கிழக்காசியாவில் 21 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேய சுவாமி திருவுருவச் சிலையைக் கொண்ட இத்தலத்திற்குத் தனி மகத்துவம் உண்டு. மாலையில் சர்வ அலங்கார நாயகர்களாகத் தெய்விகத் தம்பதிகள் ஆலயம் வலம் வந்து அருள்பாலித்தனர். நாளிது அக்டோபர் 20 ஆம் தேதி நிகழவிருக்கும் தீபாவளிச் சிறப்பு நிகழ்வு பற்றியும் தலைமை அர்ச்சகர் விளக்கினார். ஆலய நிர்வாகம் மிகச் சிறப்பாக ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.- சிங்கப்பூரிலிருந்து நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்