உள்ளூர் செய்திகள்

சிங்கப்பூர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி மஹோற்சவ கோலாகலம்

வைணவத் திருத்தலங்களில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும் விழாக்களில் ஒன்று வைகுண்ட ஏகாதசி. மற்ற மாதங்களில் வரும் ஏகாதசியில் விரதம் இருக்க முடியாதவர்களும் தங்களின் பாவங்களை நீக்கி பெருமாளின் திருவடியை அடைய புண்ணியப் பலனைப் பெறுவதற்காக மார்கழி மாதத்தில் வரும் ஏகாதசி வைகுண்ட ஏகாதசியாகக் கொண்டாடப்படுகிறது. சிங்கப்பூர் பிரபல வைணவத் தலமான சாங்கி ஸ்ரீ ராமர் ஆலயத்தில் ஜனவரி முதல்தேதியிலிருந்து 10 ஆம் தேதி வரை வைகுண்ட ஏகாதசி மஹோற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. ஸ்ரீ தசாவதார மஹா யாகத்தைத் தலைமை அர்ச்சகர் வைகானஸ ஆகம யஷோ பூஷணம் அம்மன்குடி வெ.ஸ்ரீநிவாச பட்டாச்சார்யார் தவைமையில் வேத விற்பன்னர்கள் மிகச் சிறப்பாக நடத்தினர். யாகசாலையிலிருந்து புனித கடம் ஆலயம் வலம் வந்தபோது பக்தப் பெருமக்கள் உருக்கத்தோடு சரண கோஷம் எழுப்பினர்.வைகறையில் ஸ்வர்க்க வாசல், ஆயிரக்கணக்கானோர் “ கோவிந்தா ...மாதவா, நாராயணா “ என முழங்க திறக்கப்பட்டமை மெய்சிலிர்க்க வைத்தது. கூடாரை வெல்லுஞ் சீர்க் கோவிந்தா உன்தன்னை என்ற திருப்பாவை 27 ஆவது பாடலைப் பாடி ஆண்டாள் நாச்சியார் இறையருளோடு கலந்தார். மார்கழி 27 ஆம் தேதி கூடார வல்லித் திருவிழா தத்ரூபமாகக் காட்சிப்படுத்தப்பட்டமை பக்தர்களைப் பெரும் பரவசத்தில் ஆழ்த்தியது. - நமது செய்தியாளர் வெ.புருசோத்தமன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்