உள்ளூர் செய்திகள்

சிங்கப்பூர் வைராவிமட காளியம்மன் ஆலயத்தில் விஜயதசமி விழா

சிங்கப்பூர் வைராவிமட காளியம்மன் ஆலயத்தில் விஜயதசமி விழாகருணையே வடிவாக சிங்கப்பூர் தொபாயோ பகுதியில் எழுந்தருளி அருளாட்சி புரியும் அன்னை ஸ்ரீ காளிகாம்பாள் ஆலயத்தில் அக்டோபர் 2 ஆம் தேதி வெற்றிகள் அருளும் விஜய தசமி - அம்பு எய்தல் நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது. விஜய தசமி பற்றித் தலைமை அர்ச்சகர் விளக்குகையில் “ஆணவத்தை வீரமும் வறுமையை செல்வமும் அறியாமையைக் கல்வியும் வெற்றி கொண்ட நாளே விஜயதசமி.உலகை ஆட்டிப் படைத்த மகிஷாசுரனை அழிக்க தேவி துர்க்கையாக அவதரித்து 9 நாட்கள் நீடித்த போர் விஜயதசமி நாளன்று முடிவுக்கு வந்தது. மகிஷாசுரனை துர்க்கை வென்ற நாளான விஜயதசமி நாளன்று எச்செயலைச் செய்தாலும் வெற்றிகரமாக அமையும். இந்நாளில் குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்தல் - இசைக் கருவிகள் பயிற்சி - நடனப் பயிற்சி - புதிதாகத் தொழில் துவங்குதல் முதலியவை மேற்கொள்ளும் போது தேவியின் கருணை பரிபூரணமாகக் கிடைக்கும் என்பதால் நவமியில் சரஸ்வதியை வணங்கி கல்வி கலைகளுக்கு வழிபாடு நடத்துவதும் தசமியில் ஆயுத பூஜை - தொழிற் கருவிகளுக்கும் வாகனங்களுக்கும் வழிபாடும் நடத்தப்படுகிறது. “ என்றார். நவராத்திரி நமது கலாச்சாரம் . வைராவி மட காளியம்மன் ஆலயத்தில் ஒன்பது நாளும் மண்டபம்நிறை பக்தர்களிடையே பல்வண்ணக் காட்சிகளில் அம்பிகை அருள்புரிந்த - கோலாகலமாக நடைபெற்ற நவராத்திரியைத் தொடர்ந்து பத்தாம் நாள் விஜய தசமியில் அம்பிகை குதிரை வாகனத்தில் எழுந்தருளி அம்பு எய்த காட்சி தத்ரூபமாக நடைபெற்ற போது பக்தர்களின் “ ஓம் சக்தி “ முழக்கம் அடங்க நெடுநேரமாயிற்று. ஆலய வித்வான்களின் மங்கல இசை அனைவரையும் ஆட வைத்தது. நிறைவாக பங்கேற்ற பக்தர்களுக்கு அறுசுவை அன்னப் பிரசாதம் அகமகிழ்வை அளித்தது. ஆலய நிர்வாகம் அனைத்து ஏற்பாடுகளையும் குறைவறச் செய்திருந்தது. - சிங்கப்பூரில் இருந்து நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்