உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / முடிவில் மாற்றம் ; ஓடிடி ரிலீஸிற்கு தயாராகும் மரைக்கார்

முடிவில் மாற்றம் ; ஓடிடி ரிலீஸிற்கு தயாராகும் மரைக்கார்

கொரோனா தாக்கம் காரணமாக சில பல தயாரிப்பாளர்கள் தங்களது படங்களை ஓடிடியில் வெளியிட துவங்கினர். ஆனால் பிரமாண்டமாக எடுக்கப்பட்ட சில படங்கள் தியேட்டரில் வெளியானால் தான் ரசிகர்கள் பார்வைக்கு விருந்தாகும் என தியேட்டர்கள் திறப்புக்காக காத்திருந்தன.


அப்படி மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் மிக பிரமாண்டமான வரலாற்று படமாக உருவாகி, கடந்த வருடம் மார்ச் மாதமே ரிலீசுக்கு தயாரான மரைக்கார் படத்தையும் தியேட்டரில் தான் வெளியிட வேண்டும் என்பதில் சில நாட்களுக்கு முன்புவரை அதன் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் தீர்மானமாக இருந்தார். அதனால் தான் மிகப்பெரிய விலை கொடுக்க ஓடிடி நிறுவனங்கள் முன்வந்தும் கூட அதை மறுத்துவிட்டார்.

தற்போது கேரளாவில் தியேட்டர்கள் திறக்கப்பட உள்ள நிலையில், அவரோ தனது முடிவை மாற்றிக்கொண்டு மரைக்கார் படத்தை ஓடிடியிலேயே வெளியிடும் முடிவுக்கு வந்துவிட்டாராம். காரணம் தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் கூட, ஐம்பது சதவீத இருக்கை ஒதுக்கீடு போன்ற சில நிபந்தனைகள் ஒருபக்கம், தற்போது கேரளாவின் சில பகுதிகளை புரட்டிப்போட்ட மழை வெள்ளம் இன்னொரு பக்கம் என சூழ்நிலை சாதகமாக இல்லாமல் தான் இருக்கிறது. அதனால் இனியும் தாமதிக்க வேண்டாம் என இந்த முடிவுக்கு வந்துள்ளார்களாம்.

67வது தேசிய திரைப்பட விழாவில் இந்த படத்திற்கு சிறந்த மலையாள படம், சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த ஸ்பெஷல் எபெக்ட் ஆகிய 3 தேசிய விருதுகள் கிடைத்தது. இந்த விருதை பெற்றுக் கொண்ட படத்தின் தயாரிப்பளார் ஆண்டனி பெரும்பாவூர் படத்தின் வெளியீடு குறித்து நிருபர்களிடம் கூறியதாவது: இனிமேலும் என்னால் காத்திருக்க முடியாது. நான் மிகவும் பொறுமை இழந்து விட்டேன். திரையரங்குகளில் வெளியிடலாமா அல்லது ஓடிடியில் வெளியிடலாமா என்று யோசித்து வருகிறேன். நாங்கள் இந்தப் படத்தைத் தயாரிக்கும் போது, திரையரங்குகளுக்குத் தயாரித்தோம். நாங்களும் அதற்காகக் காத்திருந்தோம். இது குறித்து முடிவெடுப்பதற்கான அனைத்து சாத்தியக் கூறுகளையும் நாங்கள் இப்போது பரிசீலித்து வருகிறோம், 50 சதவிகித இருக்கை அனுமதியுடன் தியேட்டரில் வெளியிட்டால் எங்களால் லாம் ஈட்டுவது சாத்தியமில்லை. அதனால் அமேசான் பிரைமிடம் பேசி வருகிறோம். என்றார்.

பிரியதர்ஷன் இயக்கியுள்ள இந்த படம் கேரளாவில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடியவரின் சரித்திர கதையாக உருவாகி உள்ளது. மோகன்லால், சுனில் ஷெட்டி, அர்ஜுன் சர்ஜா, பிரபுதேவா, மஞ்சு வாரியர், கீர்த்தி சுரேஷ், பிரணவ் மோகன்லால், கல்யாணி பிரியதர்ஷன், அசோக் செல்வன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !