பாடகர், நடிகர் மாணிக்க விநாயகம் மண்ணுலகை விட்டு மறைந்தார்
பிரபல பின்னணி பாடகரும், நடிகருமான மாணிக்க விநாயகம்(78) உடல்நலக்குறைவால் காலமானார். அண்மையில் இதயக்கோளாறு காரணமாக அறுவை சிகிச்சை செய்திருந்த நிலையில் இன்று(டிச., 26) மாலை மாரடைப்பால் காலமானார். 800க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ள இவர், திருடா திருடி, திமிரு, பேரழகன், சந்தோஷ் சுப்ரமணியம் உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.
மயிலாடுதுறையை சேர்ந்த மாணிக்க விநாயகம், பிரபல நடன ஆசிரியர் வழுவூர் ராராமையாவின் இளைய மகனாவார். 1948ம் ஆண்டு டிச., 10ல் பிறந்த இவர் இளம் வயது முதலே நன்றாக பாடக் கூடியர். கனீர் குரலுக்கு சொந்தக்காரரான இவர் தமிழில் விக்ரம் நடித்த தில் படத்தில் வித்யாசாகர் இசையமைப்பில் கண்ணுக்குல கெழுத்தி.... என்ற பாடல் மூலம் பாடகராக அறிமுகமானார். தொடர்ந்து ஏலே இமயமலை... (தவசி), தேரடி வீதியில தேவதை வந்தா... (ரன்), பொம்பளைங்க காதலைதான் நம்பிவிடாதே... (உன்னை நினைத்து), விடை கொடு எங்கள் நாடே.... (கன்னத்தில் முத்தமிட்டால்), கொடுவா மீச அறுவா பார்வை.... (தூள்), சின்ன வீடா வரட்டுமா... (ஒற்றன்), கொக்கு பற பற... (சந்திரமுகி), கட்டு கட்டு கீரை கட்டு... (திருப்பாச்சி) உள்ளிட்ட ஏராளமான பாடல்களை பாடி உள்ளார்.
பாடகராக மட்டுமல்லாது திருடா திருடி, திமிரு, பேரழகன், சந்தோஷ் சுப்ரமணியம், கிரி, யுத்தம் செய் உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்ர நடிகராக நடித்துள்ளார். ஏராளமான இன்னிசை கச்சேரிகளிலும், பாடல் தொடர்பான நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பங்கேற்றுள்ளார். பக்தி பாடல்கள், கிராமியப் பாடல்கள் என ஆயிரக்கணக்கான பாடல்களை இவர் பாடி உள்ளார்.
மறைந்த இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் உடன் இணைந்து மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கன்னத்தில் முத்தமிட்டால் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இவர் பாடிய விடை கொடு எங்கள் நாடே.... பாடல் பலரை கலங்க வைத்தது. அதேப்போன்று இளஞர்களை ஆட வைக்கும் துள்ளல் பாடல்களுக்கும் இவர் குரல் மிகப்பொருத்தமாக அமைந்தது என்றால் மிகையல்ல.
எப்போதும் சிரித்த முகம், நெற்றியில் திருநீறு, குங்குமம், கழுத்தில் தங்க ஜெயின், கையில் பிரேஸ்லெட் என சினிமா உலகிலும், பொது வெளிகளிலும் வலம் வந்தார். தனது கனீர் குரலால் ரசிகர்களை ஈர்த்த மாணிக்க விநாயகம் அவர்களின் மறைவு இசை ரசிகர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திரையுலகினரும், ரசிகர்கள் பலரும் அவருக்கு இரங்கில் தெரிவித்து வருகின்றனர்.