ஐதராபாத்தில் நடந்த பூஜையில் தனுஷ் : அடுத்து விஜய், சிவகார்த்திகேயன்?
தமிழ் சினிமா உலகத்தில் முன்னணி நடிகர்கள் நடிக்கும் தமிழ்ப் படங்களின் படப்பிடிப்பு கடந்த பல ஆண்டுகளாகவே ஐதராபாத்தில்தான் அதிகம் படமாக்கப்பட்டு வருகிறது. அதனால், சென்னையில் உள்ள தமிழ்த் திரைப்படத் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
இந்நிலையில் தமிழ் சினிமாவில் உள்ள சில முன்னணி நடிகர்கள் தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளில் தயாராகும் படங்களில் நடிக்க ஆர்வம் காட்ட ஆரம்பித்தார்கள். விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் ஆகியோரது அடுத்த படங்கள் தமிழ், தெலுங்கில் தான் தயாராகப் போகின்றன.
விஜய், தனுஷ் ஆகியோரது படங்கள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கெனவே வெளியானது. சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் பற்றிய அறிவிப்பு புத்தாண்டன்று வெளிவந்தது.
இதில் தனுஷ் நடிக்கும் தெலுங்கு, தமிழ் படத்தின் பூஜை இன்று ஐதராபாத்தில் நடந்தது. அதில் தெலுங்குத் திரையுலகத்தின் முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர். அடுத்து விஜய், சிவகார்த்திகேயன் ஆகியோரது படங்களின் பூஜையும் ஐதராபாத்தில்தான் நடக்கும் எனத் தெரிகிறது.
ஒரு காலத்தில் தென்னிந்திய சினிமாக்கள் சென்னையில்தான் மையம் கொண்டிருந்தன. இப்போது தமிழ் சினிமாவை ஹைதராபாத் பக்கம் முழுமையாக எடுத்துச் செல்ல சில முன்னணி நடிகர்கள் முயல்வதாக தொழிலாளர் தரப்பிலும், சில தமிழ்த் தயாரிப்பாளர்களும் கடும் கோபத்தில் உள்ளனர் என்கிறார்கள்.