நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி வழக்கு; ஹரிநாடார் கைது
நடிகர்கள் விஜய் மற்றும் சூர்யா இணைந்து நடித்த 'பிரண்ட்ஸ்' உள்பட சில படங்களில் நடித்தவர் விஜயலட்சுமி. இவர் கடந்த 2020ம் ஆண்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார். இது குறித்தான வழக்கை விசாரித்த திருவான்மியூர் போலீசார், விஜயலட்சுமி அளித்த வாக்குமூலத்தில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பனங்காட்டு படை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஹரிநாடார் மற்றும் ஒருசிலர் தன்னை மிரட்டியதால் தற்கொலைக்கு முயன்றதாக கூறி இருந்தார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் தற்போது ஹரி நாடாரை கைது செய்துள்ளனர். இவர் ஏற்கனவே பணமோசடி வழக்கு ஒன்றில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜயலட்சுமி தற்கொலை வழக்கில் ஹரிநாடாரை கைது செய்ய அனுமதி கோரி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு திருவான்மியூர் போலீசார் கடிதம் எழுதி இருந்த நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.