சிம்ரனின் 50வது படம் அறிவிப்பு
ADDED : 937 days ago
1997ம் ஆண்டு விஐபி என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் சிம்ரன். அதையடுத்து ஒன்ஸ்மோர், நேருக்கு நேர் என அடுத்தடுத்து பல படங்களில் நடித்து முன்னணி ஹீரோயினாக வலம் வந்தார். திருமணத்திற்கு பிறகு சிலகாலம் நடிப்பை விட்டு விலகிய சிம்ரன் தற்போது மீண்டும் பிஸியாக நடிக்கிறார். மகான், ராக்கெட்ரி, கேப்டன் ஆகிய படங்களில் நடித்தவர் அந்தகன், துருவ நட்சத்திரம் போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது ஈரம் அறிவழகன் இயக்கத்தில் ஆதி, லட்சுமி மேனன் இணைந்து நடிக்கும் சப்தம் படத்தில் சிம்ரனும் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது இவரது 50வது படம் ஆகும். இந்த படத்தில் மாஜி நாயகி லைலாவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். 7ஜி பிலிம்ஸ் மற்றும் ஆல்பா பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசை அமைக்கிறார்.