உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நடிகர் அஜித்குமார் தந்தை சுப்பிரமணியம் காலமானார்

நடிகர் அஜித்குமார் தந்தை சுப்பிரமணியம் காலமானார்

சென்னை : நடிகர் அஜித் குமாரின் தந்தை சுப்பிரமணியம் (85) வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். சமீபத்தில் அவர் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இன்று(மார்ச் 24) காலை தூக்கத்திலேயே அவரது உயிர் பிரிந்தது.

கேரள மாநிலம், பாலக்காட்டை பூர்வீமாக கொண்ட சுப்பிரமணியம் சென்னையில் மனைவி மோகினி மற்றும் மகன்கள் உடன் வசித்து வந்தார். மறைந்த சுப்பிரமணியம் உடல் சென்னை, ஈசிஆர் ரோட்டில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பெசன்ட்நகர் மயானத்தில் இன்று இறுதிச்சடங்கு நடக்கிறது. ரசிகர்கள் கூட்டம் வந்தால் கட்டுப்படுத்த போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.



சுப்ரமணியம் மகன்களான அனுப் குமார், அஜித் குமார், அனில் குமார் சார்பில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கை விபரம் வருமாறு....

எங்களது தந்தையார் பல நாட்களாக உடல்நலமின்றி படுக்கையில் இருந்தார். இன்று(மார்ச் 24) அதிகாலை தன்னுடைய தூக்கத்தில் உயிர் நீத்தார். நான்கு ஆண்டுகளாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த எங்கள் தந்தையை அன்போடும், அக்கரையோடும் கவனித்து வந்தும், எங்கள் குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்த அனைத்து மருத்துவர்களுக்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

எங்கள் தந்தை 60 ஆண்டுகள் எங்கள் தாயின் அன்போடும், அர்பணிப்போடும் நல்ல வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். இந்த துயர நேரத்தில் பலர் எங்களின் தந்தையாரின் இறப்பு செய்தியை பற்றி விசாரிக்கவும், எங்கள் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்வதற்காகவும் எங்களை போன் மூலம் அழைப்பு விடுத்தோ அல்லது குறுத்தகவல் அனுப்பியோ விசாரித்து வருகின்றனர். தற்போதுள்ள சூழலில் எங்களால் உங்கள் அழைப்பையோ அல்லது பதில் தகவல் அனுப்ப இயலாதமையை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறோம்.



எங்கள் தந்தையாரின் இறுதிச்சடங்கு ஒரு குடும்ப நிகழ்வாகவே இருக்க கருதுகிறோம். எனவே இந்த இறப்பு தகவலை அறிந்து அனைவரும் எங்களுடைய துயரத்தையும், இழப்பையும் புரிந்து கொண்டு குடும்பத்தினர் துக்கத்தை அனுசரிக்கவும், இறுதிசடங்குகளை தனிப்பட்ட முறையில் செய்யவும் ஒத்துழைக்கும்படி வேண்டிக் கொள்கிறோம்.

இவ்வாறு அவர்கள் மூவரும் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !