ராயனுடன் மோதும் கொக்கி குமாரு
தனுஷின் 50வது படமாக உருவாகி உள்ளது ராயன். தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்தில், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படம் வருகிற 26ம் தேதி வெளியாகிறது.
இந்த படத்துடன் தனுஷ் நடித்த புதுப்பேட்டை படமும் மறு வெளியீடாகிறது. 2006ல் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான 'புதுப்பேட்டை', ஒரு கல்ட் கிளாசிக் படமாக ரசிகர்களை கவர்ந்தது. இந்தப்படத்தில் முதன்முறையாக கொக்கி குமாரு என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் தனுஷ்.
சினேகா, சோனியா அகர்வால் நாயகிகளாக நடித்திருந்தனர். நடிகர் விஜய் சேதுபதி இந்தப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏடிஎம் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான மதுராஜ் இந்தப் படத்தை தமிழகமெங்கும் மறு வெளியீடு செய்கிறார். இரண்டு படங்களுமே வட சென்னையை களமாக கொண்ட தாதா கதை என்பது குறிப்பிடதக்கது.