'அடுத்த வாரிசு' படத்தின் உல்டாவா 'ப்ளடி பெக்கர்' ?
இயக்குனர் நெல்சன் தயாரிப்பில், சிவபாலன் முத்துக்குமார் இயக்கத்தில் கவின் கதாநாயகனாக நடிக்கும் படம் 'ப்ளடி பெக்கர்'. இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியிடப்பட்டது.
ராஜபரம்பரையின் சொத்துக்களை அடைவதற்காக திட்டமிடும் சிலர், தெருத்தெருவாக நடனமாடிப் பிழைக்கும் ஒரு இளம்பெண்ணை காணாமல் போன ராஜவாரிசு என நடிக்க வைத்து சொத்துக்களை அடைய நினைக்கிறார்கள். இதுதான் 'அடுத்த வாரிசு' படத்தின் கதை. எஸ்பி முத்துராமன் இயக்கத்தில் இளையராஜா இசையமைப்பில் ரஜினிகாந்த், ஸ்ரீதேவி மற்றும் பலர் நடிப்பில் 1983ல் வெளிவந்து பெரிய வெற்றியைப் பெற்ற படம்.
'அடுத்த வாரிசு' படத்தில் தெருவிலிருந்து மாளிகைக்குப் போனது ஸ்ரீதேவி. 'ப்ளடி பெக்கர்' படத்தில் தெருவிலிருந்து மாளிகைக்குப் போவது கவின். பெண் கதாபாத்திரத்தை, ஆண் கதாபாத்திரமாக மாற்றி விட்டார்களோ ?.
'அடுத்த வாரிசு' படமே 1972ல் வெளிவந்த ஹிந்திப் படமான 'ராஜா ஜானி' படத்தின் ரீமேக் தான். அந்த ஹிந்திப் படம் 1956ல் வெளிவந்த ஹாலிவுட் படமான 'அனஸ்டாசியா' படத்தின் தழுவல்தான். அதே சமயம் 'ப்ளடி பெக்கர்' படம் 2019ல் வெளிவந்த 'ரெடி ஆர் நாட்' என்ற ஹாலிவுட் படத்தின் தழுவலாகவும் இருக்கும் என சிலர் சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்டுள்ளார்கள்.
'அடுத்த வாரிசு' படத்தை ஜெய்ப்பூர் அரண்மனை ஒன்றில் படமாக்கினார்கள். 'ப்ளடி பெக்கர்' டிரைலரில் இடம் பெற்றுள்ளது மைசூரில் உள்ள லலித மஹால் பேலஸ். படம் வந்த பின் எந்தப் படத்திலிருந்து இந்தப் படத்தை எடுத்துள்ளார்கள் என்பதை ரசிகர்கள் கண்டுபிடித்துவிடுவார்கள்.