காப்புரிமை வழக்கு : ஏஆர் ரஹ்மான் ரூ.2 கோடி செலுத்த ஐகோர்ட் உத்தரவு
பொன்னியின் செல்வன் நாவலை தழுவி மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக வெளிவந்தது. விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்தனர். ஏஆர் ரஹ்மான் இசையமைத்து இருந்தார். பொன்னியின் செல்வன் 2 படத்தில் இடம் பெற்ற ‛வீரா ராஜா வீரா' என்ற பாடல் சிவா ஸ்துதி பாடலை போல் உள்ளதாக பயாஸ் வாசிபுதீன் தாகர் என்பவர் டில்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இதுதொடர்பான வழக்கில் ‛சிவா ஸ்துதி' பாடல்கள் மூலம் ஈர்க்கப்பட்டு அதை தழுவி ‛வீரா ராஜா வீரா' பாடலை உருவாக்கியதாக ரஹ்மானே கோர்ட்டில் தகவல் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் இந்த வழக்கில் காப்புரிமை சட்டப்படி ஏஆர் ரஹ்மான் ரூ.2 கோடியை டில்லி ஐகோர்ட் பதிவாளர் அலுவலகத்தில் செலுத்த ஐகோர்ட் உத்தரவிட்டது. மேலும் மனுதாரருக்கு ரூ.2 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.