திருநெல்வேலி செல்ல பாஸ்போர்ட் கேட்கும் மாரிசெல்வராஜ்
இயக்குனர் ராமிடம் உதவியாளராக இருந்தவர் மாரி செல்வராஜ். பின்னர் படிப்படியாக உயர்ந்து பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை படங்களை இயக்கினார். இப்போது விக்ரம் மகன் துருவ் நடிக்கும் பைசன் படத்தை இயக்கி வருகிறார். அடுத்து தனுஷ் படத்தை இயக்க உள்ளார். இவ்வளவு உயர்ந்தாலும் தனது குருநாதர் ராம் சம்பந்தப்பட்ட விழாக்களில் முன்னின்று வேலைகளை கவனிப்பார். சென்னையில் நடந்த பறந்து போ பட விழாவிலும் அப்படி நடந்தது.
அந்த விழாவில் பேசிய மாரி செல்வராஜ் 'ராம்சாரிடம் ஆரம்பத்தில் பணியாற்றும்போது வெள்ளந்தியாக இருந்தேன். தங்கமீன்கள் படத்தில் அவரிடம் உதவியாளராக இருந்தபோது, ஊரில் என் அப்பாவுக்கு பாம்பு கடித்துவிட்டது. அதை கேட்டு அழ, திருநெல்வேலி செல்ல பிளைட்டில் டிக்கெட் போட்டுக் கொடுத்தார். என்னிடம் பாஸ்போர்ட் இல்லையே என கலங்க, திருநெல்வேலி போக பாஸ்போர்ட் தேவையில்லை என அவர் சொன்னார். இப்போது வளர்ந்து குடும்பத்துடன் ஜப்பான் சென்றேன். அங்கே என் மகன் தொலைந்து போக, அப்பவும் ராம் சாரை நினைத்தேன். என் மகனுக்கு ஐஸ்கீரிம் தேவை என்றால் ராம் சார் ஆபீசுக்கு அழைத்து போ என்பான். என்னை போலவே, என் மகனிடம் அவர் பாசமாக இருக்கிறார். ராம் சாருக்கு நகைச்சுவை உணர்ச்சி அதிகம். நகைச்சுவை படங்களை தான் விரும்பி பார்ப்பார். ஒரு கட்டத்தில் களவாணி பார்த்துவிட்டு நீங்க இந்த மாதிரி காமெடி படம் எடு என்று என்னிடம் சொல்லியிருக்கிறார். பறந்து போ படத்தில் நிறைய காமெடி இருக்கிறது' என்றார்.