மேலும் செய்திகள்
சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி'
47 days ago
குறைந்த காட்சிகளுடன் 4வது வாரத்தில் 'கூலி'
47 days ago
ரியூனியன் என்பது முன்னாள் மாணவர்களுக்கு ஒரு உணர்வுபூர்மான நிகழ்வு. பள்ளி அல்லது கல்லூரிகளில் படித்து முடித்தவர்கள் சில பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சந்திக்கும் அந்த தருணத்தை விவரிக்க வார்த்தைகள் கிடையாது. சிலர் பல வருடங்களுக்குப் பிறகுதான் தங்களது நண்பர்களை சந்திக்க வேண்டிய சூழல் இருந்திருக்கும்.
தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவரான நாசர், செங்கல்பட்டு நகரைச் சேர்ந்தவர். அங்குள்ள செயின்ட் ஜோசப் பள்ளியில் 1975ல் படித்து முடித்தவர். 50 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களது ரியூனியன் நடந்துள்ளது. ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.
அதில் பங்கேற்ற நடிகர் நாசர், “நான் படித்த பள்ளியில் 50 ஆண்டுகள் கடந்து என்னோடு படித்த நண்பர்களைப் பார்த்தேன். வாழ்க்கையில் கற்பித்த ஆசிரியர்களைப் பார்த்தேன். வாழ்க்கையில எப்பவும் கிடைக்காத ஒரு நெகிழ்வான தருணம். இந்த தருணத்தின் ஆரம்பம் நேற்று இரவிலிருந்தே ஆரம்பித்துவிட்டது, காத்துக் கொண்டிருந்தேன். இன்று எல்லோரையும் பார்த்ததில் மிக மிக சந்தோஷம். ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் உணர்வை விவரிக்க முடியாது. ஐம்பது ஆண்டுகால வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கிற ஒரு வைபவமாக இது இருந்தது” என்று குறிப்பிட்டுப் பேசியுள்ளார்.
செங்கல்பட்டில் பள்ளி படிப்பை முடித்த பின், சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் பியுசி படித்தார் நாசர். அதன்பின் சில காலம் இந்திய விமானப் படையில் பணிபுரிந்து, பின்னர் பிலிம் சேம்பர் நடத்திய நடிப்புக் கல்லூரி மற்றும் சென்னை தரமணியில் உள்ள அரசு திரைப்படக் கல்லூரியில் நடிப்புப் பயிற்சி பயின்றார்.
பாலசந்தர் இயக்கத்தில் 1985ல் வெளிவந்த 'கல்யாண அகதிகள்' படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து நடிகராக அறிமுகமானார். 'வேலைக்காரன், வண்ணக் கணவுகள், நாயகன்' ஆகிய படங்கள் அவரை பிரபலமாக்கியது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார் நாசர்.
'அவதாரம், தேவதை, மாயன், பாப் கார்ன்' ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார். அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'ஹரிஹர வீரமல்லு' தெலுங்குப் படம் இந்த வாரம் வெளியாக உள்ளது.
47 days ago
47 days ago