தள்ளிப்போகிறது ஜிவி பிரகாஷின் இரண்டு படங்கள்?
தமிழ்த் திரையுலகத்தில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் இருப்பவர் ஜிவி பிரகாஷ்குமார். இசையமைப்பாளராக பெயர் வாங்கிய அளவிற்கு நடிகராக அவர் பெயர் வாங்கவில்லை. அவர் நடித்த ஒரு சில படங்கள் மட்டுமே வியாபார ரீதியாக வெற்றியைப் பெற்றன.
அவர் நடித்து இன்று வெளியாவதாக இருந்த 'பிளாக்மெயில்' திரைப்படம் நிதிச்சிக்கல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அடுத்த வெளியீட்டுத் தேதி குறித்து பிறகு அறிவிக்க உள்ளார்கள். ஜிவி பிரகாஷ் நடித்து கடந்த ஏழு வருடங்களாக வெளிவராமல் இருக்கும் 'அடங்காதே' படத்தை இந்த மாதம் ஆகஸ்ட் 27ம் தேதி வெளியிடுவதாக அறிவித்திருந்தார்கள்.
அப்படத்தின் தயாரிப்பாளர் சரவணன் செக் மோசடி வழக்கு ஒன்றில் சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 30 நாட்கள் சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால், அவர் தயாரித்துள்ள 'அடங்காதே' திரைப்படம் அறிவித்தபடி வெளியாவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இருக்கும் பிரச்சனைகள் அனைத்தையும் முடித்த பிறகு தயாரிப்பாளர்கள் வெளியீட்டுத் தேதிகளை அறிவிக்க வேண்டும் என்று வினியோகஸ்தர்களும், தியேட்டர்காரர்களும் எதிர்பார்க்கிறார்கள்.