உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: வித்தியாசமான சிந்தனையோடு 'வீணை' எஸ் பாலசந்தர் தந்த விளையாட்டு “பொம்மை”

பிளாஷ்பேக்: வித்தியாசமான சிந்தனையோடு 'வீணை' எஸ் பாலசந்தர் தந்த விளையாட்டு “பொம்மை”


தேர்ந்த கல்வி ஞானத்தோடும், திறமை மிகு இசை ஞானத்தோடும், கலையுலகில் கால் பதித்து, காண்போரின் சிந்தனையைத் தூண்டும் கலைப் படைப்புகள் பல தந்து, த்ரில்லர் கதைகளின் முன்னோடியாக தமிழ் திரையுலகில் பார்க்கப்பட்ட நடிகர், வீணை இசைக் கலைஞர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் என்ற பன்முகத் தன்மை கொண்ட பைந்தமிழ் திரைக்கலைஞர்தான் 'வீணை' எஸ் பாலசந்தர். “அந்த நாள்”, “அவனா இவன்?”, “நடு இரவில்” போன்ற இவரது த்ரில்லர் திரைப்படங்களின் வரிசையில் வந்த மற்றுமொரு த்ரில்லர் திரைப்படம்தான் இந்த “பொம்மை”.

இவரது முந்தைய சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படங்களான “அந்த நாள்”, “அவனா இவன்?” ஆகிய திரைப்படங்களைப் போல் “பொம்மை” திரைப்படமும் ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது. ஜெகதீஷ் என்பவன் தன் கூட்டாளிகளோடு சேர்ந்து, நடைப்பயிற்சி செய்வது போன்று வடிவமைக்கப்பட்ட ஒரு பொம்மையின் உள்ளே வெடிகுண்டை வைத்து, சோமசுந்தரம் என்பவரை கொலை செய்ய திட்டமிட, எதிர்பாராத விதமாக அந்த பொம்மை, ஜெகதீஷ் மற்றும் அவனது கூட்டாளிகள் பயணிக்கும் வாகனத்திற்கே வந்து அவர்கள் அனைவரையும் கொன்றுவிடுவதுதான் இந்த “பொம்மை” திரைப்படத்தின் கதை.

1938ம் ஆண்டு வெளிவந்த ஆல்ப்ரட் ஹிட்ச்காக்கின் “சாபோடேஜ்” என்ற ஆங்கில திரைப்படத்தின் தழுவலாக வந்த இந்த “பொம்மை” திரைப்படத்தை தமிழ் திரைப்பட ரசிகர்களின் ரசனைக்கேற்றவாறு ஸ்கிரிப்டில் சில மாற்றங்கள் செய்து, வெடிகுண்டை சுமந்து செல்லும் ஒரு பொம்மையை முக்கிய கதாபாத்திரமாக்கி புதுமை படைத்திருப்பார் 'வீணை' எஸ் பாலசந்தர். மேலும் இத்திரைப்படத்தில் டைட்டில் கார்டு என்ற ஒன்று இடம் பெறாமலே படம் ஆரம்பிக்கப்பட்டு, முழுப்படமும் ஓடி முடிந்த பின் இறுதியில் 'வீணை' எஸ் பாலசந்தர் ஒரு இயக்குநராக திரையில் தோன்றி, பார்வையாளர்களைப் பார்த்து, படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரையும் திரையில் தோன்றச் செய்து, அவர்களாகவே அவர்களது பெயர்களைச் சொல்லி பார்வையாளர்களிடம் அறிமுகப்படுத்திக் கொள்வது போன்ற ஒரு புது உத்தியை கையாண்டு, தமிழ் திரையுலகில் இதுவரை யாரும் செய்திராத ஒரு புதுமையையும் செய்திருப்பார் 'வீணை' எஸ் பாலசந்தர்.

'கானகந்தர்வன்' என இசையுலகம் கொண்டாடி மகிழும் பின்னணிப் பாடகர் கே ஜே ஜேசுதாஸ் இத்திரைப்படத்தில் இடம் பெற்ற “நீயும் பொம்மை நானும் பொம்மை” என்ற பாடலைப் பாடித்தான் தமிழ் திரையுலகிற்கு ஒரு பின்னணிப் பாடகராகவும் அறிமுகமானார். நடிப்பு, இசை, தயாரிப்பு மற்றும் இயக்கம் என அத்தனைப் பொறுப்புகளையும் சிரமேற்கொண்டு சுமந்து, சிறந்த படைப்பாக தந்த இந்த “பொம்மை” திரைப்படம், 1964ம் ஆண்டு வெளிவந்து, 100 நாள்கள் வரை ஓடி, 'வீணை' எஸ் பாலசந்தருக்கு வணிக ரீதியான ஒரு வெற்றியையும் தேடித் தந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

Columbus
2025-08-19 12:21:00

I watched his Nadu Iravil film in YouTube. Print not good quality. Original print reportedly burnt. Still a very good film.