விஜயகாந்த் பற்றி விஜய்யின் 'அண்ணன்' பேச்சு : மகன் சண்முக பாண்டியன் சொன்ன பதில்
விஜயகாந்த் நடித்த கேப்டன் பிரபாகரன் படம் 34 ஆண்டுகளுக்குபின் ரீ ரிலீஸ் ஆகியுள்ளது. சென்னையில் இன்று காலை அந்த படத்தின் இயக்குனர் ஆர்.கே.செல்வமணி, மன்சூர் அலிகான், நடிகை அம்பிகா உள்ளிட்டோருடன் படம் பார்த்தபின், விஜயகாந்த் இளைய மகனும், நடிகருமான சண்முகபாண்டியன் அளித்த பேட்டி...
கேப்டன் பிரபாகரன் உருவானபோது நான் பிறக்கவில்லை. இந்த படத்தை டிவியில தான் பார்த்து இருக்கிறேன். இப்பதான் திரையில் பார்த்தேன். நிறைய இடங்களில் அப்பாவை பார்த்து அழுதுவிட்டேன். அவரை அவ்வளவு அழகாக காண்பித்து இருந்தார்கள். அவரின் டயலாக்கும் சூப்பராக இருந்தது. குறிப்பாக, அந்த ஓபனிங் சண்டைக் காட்சியை என்ஜாய் பண்ணி பார்த்தோம். பாடல்களும் நன்றாக இருந்தது.
இந்த படத்தை 1990ல் எடுத்தார்கள் என்பதை நம்ப முடியவில்லை. படம் எங்கும் போராடிக்கவில்லை, இந்த மாதிரி படங்களை இப்ப உள்ள இயக்குனர்கள் எடுக்க வேண்டும். என்னை வைத்து கேப்டன் பிரபாகரன் பார்ட் 2 எடுப்பதாக இயக்குனர் செல்வமணி சொல்லியிருக்கிறார். நான் அவருக்கு கால்ஷீட் கொடுக்க ரெடி.
நேற்று மதுரை மாநாட்டில் அப்பாவை அண்ணன் என அழைத்து இருக்கிறார் விஜய். அவரை அண்ணனாக பார்க்கிறார் விஜய். சின்ன வயதில் இருந்தே அப்பாவை அவருக்கு தெரியும் என்பதால் அண்ணன் என்கிறார்'' என்று பேசினார்.
அப்போது தேமுதிக தொண்டர்களை விஜய் இழுக்கிறாரா என்ற கேள்விக்கு 'அப்பா மக்கள் சொத்து. அவர் இந்த படத்தில் கூட மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என டயலாக் பேசியிருப்பார். யார் யாரை இழுக்கிறார் என்பதை மக்கள் சொல்வார்கள். இப்ப கேப்டன் பிரபாகரனை பற்றி பேசுவோம். இந்த படம் மாதிரி அவரின் பல படங்கள் ரீ-ரிலீஸ் ஆக வேண்டும்' என்றார்.
திரையில் பார்த்து அழுத குடும்பம்
நெய்வேலியில் உள்ள தியேட்டரில் இப்படத்தின் முதல் காட்சியை ரசிகர்களுடன் சேர்ந்து விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, தனது குடும்பத்தினருடன் பார்த்தார். ஜயகாந்த் தோன்றும் காட்சிகளை குடும்பத்தினர் கண்ணீருடன் பார்த்தனர். குறிப்பாக விஜயகாந்த் அறிமுக காட்சியில் பிரேமலதா கதறி அழுதது காண்போரையும் கண்கலங்க வைப்பதாக இருந்தது.
படத்தை பார்த்து விட்டு வெளியே வந்த பிரேமலதா, நிருபர்களிடம் கூறும்போது, 'கேப்டன் பிரபாகரன்' படத்தில் கேப்டன் மாவீரன் போல் நடித்துள்ளார். இப்போது எடுத்த படம் போல் இருக்கிறது. மாவீரனுக்கு மனைவியாக வாழ்ந்ததை நினைத்து பெருமைப்படுகிறேன்” என்றார்.