உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'மஞ்சும்மல் பாய்ஸ்'ல் கண்மணி அன்போடு.. 'லோகா'வில் கிளியே கிளியே..: இளையராஜா ராக்கிங்

'மஞ்சும்மல் பாய்ஸ்'ல் கண்மணி அன்போடு.. 'லோகா'வில் கிளியே கிளியே..: இளையராஜா ராக்கிங்


கடந்த ஆண்டு மலையாளத்தில் வெற்றி பெற்ற 'மஞ்சும்மல் பாய்ஸ்' படத்தில் இளையராஜா இசையில் உருவான 'கண்மணி அன்போடு காதலன்' பாடல் இடம் பெற்று இருந்தது. படத்தின் முக்கியமான காட்சிகளில் ஒலித்த அந்த பாடலுக்கு ஏகப்பட்ட வரவேற்பு. படத்தின் வெற்றிக்கு அந்த பாடலும் ஒருவகையில் காரணமாக இருந்தது.

1991ம் ஆண்டு வெளியான 'குணா' படத்தில் இடம் பெற்ற, அந்த பாடலை வாலி எழுத, கமல்ஹாசன், எஸ்.ஜானகி பாடியிருந்தனர். குணா குகை சம்பந்தப்பட்ட கதை என்பதால், மஞ்சும்மல்பாய்ஸ் படத்தில் அந்த பாடலை பயன்படுத்தியிருந்தார்கள் படக்குழுவினர். அந்த பாடல் காப்பிரைட்ஸ் விஷயத்தில் படத்தயாரிப்பாளருக்கும், இளையராஜாவுக்கும் பிரச்னை வந்தது. இளையராஜா 2 கோடி கேட்டு வழக்கு தொடர்ந்தார். பின்னர் 60 லட்சம் பெற்றுக்கொண்டு சமாதானம் ஆனார் என்று கூறப்பட்டது.

இப்போது கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில், துல்கர் சல்மான் தயாரிப்பில் உருவாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் 'லோகா சாப்டர் 1: சந்திரா' படத்திலும் இளையராஜா பாடல் இடம் பெற்றுள்ளது. அது தமிழ் பாடல் அல்ல, கிளியே கிளியே என்ற மலையாள பாடல். மம்முட்டி, பூர்ணிமா பாக்யராஜ் நடித்த 'ஆ ராத்திரி' (அந்த இரவு) என்ற படத்தில் இடம் பெற்றுள்ள அந்த பாடலையும் பாடியவர் எஸ்.ஜானகிதான்.

கல்யாணி பிரியதர்ஷன் சம்பந்தப்பட்ட முக்கியமான காட்சியில் ஒலிக்கும் அந்த பாடல் இன்றைக்கு லோகா பட ரீல்ஸ்களில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. கல்யாணி சம்பந்தப்பட்ட விளம்பர நிகழ்ச்சிகளிலும் அந்த பாடல் ஒலிக்கிறது. 1983ல் வெளியான ஆ ராத்திரி படத்துக்கு இளையராஜா இசையமைக்க, பூவாச்சல் காதர் பாடல்களை எழுதியிருந்தார்.

மஞ்சுமல்பாய்ஸ் படத்தில் கண்மணி அன்போடு பாடல் 34 ஆண்டுகளுக்குபின் மீண்டும் பிரபலம் ஆனது போல, கிளியே கிளியே பாடல் 42 ஆண்டுகளுக்குபின் கேரளாவில் வைரல் ஆகி வருகிறது. தந்தை நடித்த படம் என்பதால் துல்கர் தனது தயாரிப்பில் இந்த பாடலை பயன்படுத்தியிருக்கிறார். ஜேக்ஸ் பிஜாய் என்பவர் லோகா படத்தின் இசையமைப்பாளர். இதுவரை ரைட்ஸ் தொடர்பாக இளையராஜா தரப்பில் இருந்து எந்த நோட்டீசும் விடப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !