'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' படத்தில் சந்தானம் ஜோடியாக அறிமுகமானவர் ஆஸ்னா சவேரி. அதன்பிறகு இனிமே இப்படித்தான், மீன் குழம்பும் மண்பானையும், பிரம்மா.காம், நகேஷ் திரையரங்கம், கடைசியாக இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படத்தில் கதையின் நாயகியாக நடித்தார். இந்த படம் 2018ம் ஆண்டு வெளிவந்தது. அதன்பிறகு கன்னித்தீவு படத்தில் நான்கு நாயகிகளில் ஒருவராக நடித்தார்.
தற்போது 7 வருடங்களுக்கு பிறகு 'திரைவி' என்ற படத்தில் கதையின் நாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தில் கதை நாயகனாக முனீஷ்காந்த் நடித்துள்ளார். பி.ராஜசேகரன் தயாரிப்பில், கார்த்தி தட்சிணாமூர்த்தி இயக்கி உள்ளார்.
இதுகுறித்து ஆஸ்னா சவேரி கூறும்போது, ''தமிழ் படத்தில் மீண்டும் நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த படம் எனக்கும் சிறப்பானது. மற்ற படங்களை காட்டிலும் இந்த படத்தில், எமோஷனல் ரீதியாக சிறப்பாகவே நடித்துள்ளேன். எனவே எனது இன்னொரு முகத்தை ரசிகர்கள் பார்க்கலாம். 'திரைவி' என்றால் மென்மையான, அழகான, ஈரமுள்ள பெண் என்று பொருள். கிரைம் திரில்லர் ஜானர் படம்'', என்றார்.