சாப்பாட்டுக்கு முக்கியத்துவம் தரும் தனுஷ்: அருண் விஜய் புகழாரம்
தனுஷ் இயக்கி நடித்திருக்கும் 'இட்லி கடை' படம் நாளை வெளிவருகிறது இதில் தனுசுடன் அருண் விஜய், நித்யா மேனன், ஷாலினி பாண்டே, ராஜ்கிரண் ஆகியோர் நடித்திருக்கின்றனர். 'படத்தில் ஹீரோ இட்லி கடையும், அருண் விஜய்யும்தான்' என்று பலமுறை தனுஷ் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த நிலையில் படத்தில் நடித்திருப்பது குறித்து அருண் விஜய் கூறியிருப்பதாவது: மதுரையில்தான் அதிக நாட்கள் படப்பிடிப்பு இருந்தது. நாங்கள் தங்கியிருந்த இடத்தில் உடற்பயிற்சிக்கான வசதிகள் இல்லாததால் சென்னையில இருந்து உடற்பயிற்சி கருவிகளை கொண்டு சென்று பயன்படுத்தினோம்.
தினமும் காலை 7 மணிக்கு எழுந்து உடற்பயிற்சி செய்து விட்டு படப்பிடிப்புக்கு கிளம்பி விடுவோம். படப்பிடிப்பு முடிந்ததும் மதுரை முழுக்க நல்ல நல்ல ரோட்டு கடைகளை கண்டுபிடித்து சாப்பிட்டோம். தனுஷ் சைவ உணவுகள்தான் சாப்பிடுவார். எனக்கு விதவிதமாக வாங்கி கொடுப்பார்.
நாம் வேலை பார்ப்பதே சாப்பிடுவதற்குதான் என்பதைத் தெளிவாக எண்ணி சாப்பாடு நேரத்தில் அனைவருக்கும் பிரேக் கொடுத்துவிடுவார். தனுசின் உழைப்பை பார்த்து நாம் இன்னும் அதிக வேகமாக ஓட வேண்டும் என்பதை கற்றுக் கொண்டேன். என்கிறார் அருண் விஜய்.