உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை'

அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை'

தனுஷ் இயக்கி, நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த படம் ‛இட்லி கடை'. நித்யா மேனன், ராஜ்கிரண், அருண் விஜய் உள்ளிட்ட பலர் நடித்தனர். ஜிவி பிரகாஷ் இசையமைத்து இருந்தார். விமர்சன ரீதியாக படத்திற்கு பாராட்டுகள் கிடைத்தன. இந்நிலையில் இந்த படத்தை பா.ஜ.வின் அண்ணாமலை பாராட்டி உள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில், ‛‛அன்புள்ள சகோதரர் தனுஷிற்கு... திரையுலகில் கதாநாயகர்களுக்கு வைத்திருந்த இலக்கணத்தை உடைத்து, திறமையே தகுதி என்பதை வெளிப்படுத்தி, அதில் வெற்றியும் பெற்ற வெகுசிலரில், நீங்களும் ஒருவர். உங்களின் இட்லி கடை படத்தை காணும் வாய்ப்பு கிடைத்தது. தமிழக இளைஞர்கள் அனைவருமே இந்த காலகட்டத்தில் எதிர்கொண்டிருக்கும் ஒரு முக்கியமான பிரச்சினையை நீங்கள் பேசியிருப்பது பாராட்டத்தக்கது. இளைஞர்கள் வாழ்க்கையில் மனதிற்கும், பணத்திற்கும் இடையேயான ஒரு போராட்டத்தைக் குறித்து மிகவும் தைரியமாக உடைத்துப் பேசியிருக்கிறீர்கள்.

ஒரு இனிமையான கிராம சூழலில், எந்த விதமான வன்முறைக் காட்சிகள் இன்றி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மனநிறைவாக கண்டுகளிக்கும் வண்ணம், காட்சிகளை அமைத்திருக்கிறீர்கள். கிராமத்துச் சூழலில் பிறந்து வளர்ந்து, இன்றும் கிராமத்துடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் என் போன்றவர்களுக்கு, இட்லி கடை திரைப்படத்தில் காட்டப்படும் கிராம வாழ்க்கையும், கிராம தெய்வங்களும், வழிபாடுகளும், இயல்பான கதாபாத்திரங்களும், மனதிற்கு மிக நெருக்கமாக அமைத்திருப்பதில் வியப்பில்லை. குறிப்பாக ராஜ்கிரண், ஒரு தந்தையாக, மிக மிக அற்புதமாக வாழ்ந்திருக்கிறார்.

எழுத்து, இயக்கம், நடிப்பு என இந்த மூன்று துறைகளையும் கையாண்டு அற்புதமான படைப்பை வெளிக்கொண்டு வந்தவர்கள், இந்திய அளவில் மிகக் குறைவானவர்களே. அதில் உங்கள் பெயரும் நிச்சயம் இடம் பிடிக்கும். திரையுலகில் பலர் வெளிப்படுத்த தயங்கும் உங்கள் ஆன்மிகப் பற்றை வெளிப்படுத்த அஞ்சியதில்லை. தொடர்ந்து நீங்கள் பல அற்புதமான படைப்புகளை உருவாக்கி மக்களை மகிழ்விக்கவும், மேலும் பல பல விருதுகளை வெல்லவும், எனது இனிய நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !