உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மகளிர் ஆணையத்தில் மனைவியுடன் நேரில் ஆஜரான மாதம்பட்டி ரங்கராஜ்

மகளிர் ஆணையத்தில் மனைவியுடன் நேரில் ஆஜரான மாதம்பட்டி ரங்கராஜ்

தமிழில் மெஹந்தி சர்க்கஸ் என்கிற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் கோவையைச் சேர்ந்த மாதம்பட்டி ரங்கராஜ். குக் வித் கோமாளி ரியாலிட்டி ஷோ மூலம் இன்னும் பிரபலமானார். அதன் பிறகு படங்களில் நடிப்பதை விட கேட்டரிங் தொழிலில் பிசியான மாதம்பட்டி ரங்கராஜ் தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவில் உள்ள பல பிரபலங்கள் வீட்டு நிகழ்வுகளுக்கும் கேட்டரிங் பொறுப்பேற்று நடத்தி வருகிறார். ஏற்கனவே அவருக்கு ஸ்ருதி என்கிற மனைவி இருந்த நிலையில் அவர் ஆடை அலங்கார நிபுணரான ஜாய் கிரிசில்டா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக சோசியல் மீடியாவில் தகவலும் புகைப்படங்களும் வெளியாகின.

இந்த புகைப்படங்களை வெளியிட்டு இதை அறிவித்த ஜாய் கிரிசில்டா சில மாதங்கள் கழித்து மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து மோசடி செய்து விட்டதாகவும் தான் கர்ப்பமாக இருப்பதாகவும் கூறி மீடியாக்களில் பேசியதுடன் காவல் துறையிலும் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து மகளிர் ஆணையத்திலும் மாதம்பட்டி ரங்கராஜ் மீது புகார் அளித்தார். இந்த நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ் நேரில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று மகளிர் ஆணையம் அவருக்கு சம்மன் அனுப்பியது. அது மட்டுமல்ல ஜாய் கிரிசில்டாவும் இந்த விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இதனையடுத்து சென்னையில் உள்ள மகளிர் ஆணையத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் தனது மனைவி ஸ்ருதி உடன் நேரில் ஆஜரானார். ஸ்ருதியை இவர் பிரிந்ததாக கூறப்படும் நிலையில் அவருடன் ரங்கராஜ் நேரில் ஆஜரானது பலரையும் ஆச்சர்யப்படுத்தியது. அதேப்போல் ஜாய் கிரிசில்டாவும் நேரில் ஆஜரானார்.

இந்த விஷயத்தில் மவுனம் காத்து வந்த மாதம்பட்டி ரங்கராஜ் இந்த வழக்கை சட்டப்படி எதிர்கொள்வேன் என்று நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார். பதிலுக்கு ஜாய் கிரிசில்டாவும் தங்களது திருமண புகைப்படத்தை பகிர்ந்து கொண்டு, “சட்டத்திற்கு முன் நீங்கள் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.. முதலில் நீங்க போலீஸ் ஸ்டேஷனுக்கு விசாரணைக்கு வாங்க.. சட்டம் தன் கடமையை செய்யும்” என்று ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
மாதம்பட்டி ரங்கராஜிடம் சுமார் இரண்டரை மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர், வரும் 29ம் தேதி மீண்டுமு் ஆஜராகும்படி மாநில மகளிர் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !