நவம்பர் 7ல் சிறிய படங்களின் வெளியீடுகள்
 
2025ம் ஆண்டின் 10 மாதங்கள் கடந்த வார வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்துவிட்டது. கடந்த 10 மாதங்களில் 222 நேரடி தமிழ்ப் படங்கள் வெளியாகி உள்ளன. கடந்த 2024ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 20 படங்கள் அதிகம். கடந்த வருடத்தில் மொத்தமாகவே 234 படங்கள்தான் வெளியாகின. அதை இன்னும் ஓரிரு வாரங்களில் இந்த வருட வெளியீடுகள் முறியடித்துவிடும்.
இந்த வாரம் நவம்பர் 7ம் தேதியன்று, “அறிவான், ஆரோமலே, சிங் சாங், கிறிஸ்டினா கதிர்வேலன், அதர்ஸ், பகல் கனவு, வட்டக்கானல், வீரத்தமிழச்சி” ஆகிய 8 படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் 6 படங்கள் வெளியாகிய நிலையில் இந்த வாரம் 8 படங்கள் வெளியாக உள்ளது. வாராவாரம் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை என்பது மற்ற எந்த ஒரு இந்திய மொழி சினிமாவிலும் நடக்காத ஒன்றாக உள்ளது.
ஒரு காட்சி கூட ஹவுஸ்புல் ஆக ஓட முடியாத, ஓடிடி தளங்களில் விற்பனை ஆகவும் முடியாத படங்கள் என தரத்தில் குறைவான பல படங்கள் வருகின்றன. அதை யாராலும் தடுக்க முடியாத ஒரு சூழ்நிலையே உள்ளது. எதற்காக இப்படியான படங்களைத் தயாரிக்கிறார்கள், அந்த நஷ்டத்தை அவர்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்பதுதான் புரியாத புதிர்.