பிளாஷ்பேக்: சிவாஜியுடன் பத்மினி சகோதரிகள் நடித்த படம்
நடிகர் திலகம் சிவாஜி நடித்த முக்கியமான படம் தூக்கி தூக்கி, இந்த படத்தில் சிவாஜி நடித்த அத்தனை பாடல்களையும் டி.எம்.சவுந்தர்ராஜன் பாடினார். பாடல்கள் ஹிட்டானது. சிறிய இசை அமைப்பாளராக இருந்த ஜி.ராமநாதன் பெரிய இசை அமைப்பாளர் ஆனார்.
இந்த படத்தின் சிறப்பு அம்சமே படம் பேசிய தத்துவங்கள்தான். தமிழ்நாட்டில் புகழ்பெற்றிருந்த கொண்டு வந்தால் தந்தை, கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய், சீர் கொண்டு வந்தால் சகோதரி, கொலையும் செய்வாள் பத்தினி, உயிர் காப்பான் தோழன் என்ற ஐம்பெரும் தத்துவங்களை உண்மை என்று நிரூபிப்பதே படத்தின் கதை.
ஒவ்வொரு தத்துவத்திற்கும் ஒவ்வொரு நாட்டுப்புற கதையாக சொல்லப்பட்டு வந்ததை தொகுத்து ஒரே படமாக தந்த படம். படத்தின் நாயகன் சிவாஜி இந்த தத்துவங்களை நம்ப மாட்டார். பின்னர் தனது அனுபவத்தால் அதை எப்படி நம்புகிறார் என்பதுதான் கதை. 1935ம் ஆண்டு முதல் 'தூக்குத் தூக்கி' படம் வெளிவந்தது. இதற்கு வசனம் எழுதிய உடுமலை நாராயணகவிதான் சிவாஜி நடித்த தூக்கு தூக்கி படத்திற்கும் வசனம் எழுதினார்.
'தூக்கு தூக்கி' படத்தில் சிவாஜி கணேசன், டி.எஸ். பாலையா, லலிதா, பத்மினி, ராகினி, பி.பி. ரங்காச்சாரி, சி.கே. சரஸ்வதி, எம்.எஸ்.எஸ். பாக்யம் மற்றும் டி.என். சிவதாணு உள்பட பலர் நடித்திருந்தார்கள். பத்மினி, ராகினி, லலிதா சகோதரிகள் மூவரும் சிவாஜியுடன் இணைந்து நடித்த ஒரே படம் இதுதான். பத்மினி ராஜகுமாரியாகவும், லலிதா சிவாஜியின் மனைவியாகவும், ராகினி அமைச்சரின் மகளாகவும் நடித்தனர்.