தன்னுடைய பெயரில் ரசிகர் நடத்தும் ஹோட்டலுக்கு அனுமதி அளித்த சிரஞ்சீவி
சமீபத்தில் நடிகர் சிரஞ்சீவி தனது பெயர், புகைப்படம் உள்ளிட்ட தனது உடைமைகளை பொதுவெளியில் யாரும் பயன்படுத்தக் கூடாது என்று கூறி நீதிமன்ற மூலம் நடைபெற்றார். இதை கண்காணிக்க சிரஞ்சீவியின் ஏற்பாட்டில் ஒரு தனிக்குழுவே இயங்கி வருகிறது. அந்த வகையில் ஹைதராபாத்தில் சிரஞ்சீவியின் பெயரில் ஏற்கனவே ‛சிரஞ்சீவி தாபா' என்கிற ரெஸ்டாரண்டை நடத்தி வரும் ரவி என்பவருக்கும் சிரஞ்சீவியின் நிர்வாக குழுவினரிடம் இருந்து அவரது பெயரை பயன்படுத்தக்கூடாது என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
ஆனால் நிர்வாக குழுவினரை நேரில் சந்தித்த ரவி, தனக்கு கிட்டத்தட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட தொழில்கள் இருப்பதாகவும் இந்த ரெஸ்டாரண்டை சிரஞ்சீவியின் பெயரில் ஆரம்பித்ததற்கு அவர் மீது கொண்ட அபிமானம் மட்டுமே காரணம் என்பதையும் விளக்கிக் கூறியுள்ளார். இந்த தகவல் சிரஞ்சீவிக்கு சொல்லப்பட்டதும் அந்த ரசிகர் தன்னுடைய பெயரிலேயே அந்த ரெஸ்டாரண்டை நடத்திக் கொள்ள சிரஞ்சீவி அனுமதி அளித்துள்ளார்.
இது குறித்து நெகிழ்ச்சியுடன் தனது சோசியல் மீடியா பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ள ரெஸ்டாரண்ட் உரிமையாளர் ரவி கூறும்போது, “எந்த ஒரு காலத்திலும் உங்களது பெயருக்கும் பெருமைக்கும் களங்கம் வரும் விதமாக நாங்கள் எதையும் ஒருபோதும் செய்ய மாட்டோம்” என்று கூறியுள்ளார்.