உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 2025... 10 மாதங்கள், 222 படங்கள் : வெற்றிப் படங்கள் 12 மட்டுமே…

2025... 10 மாதங்கள், 222 படங்கள் : வெற்றிப் படங்கள் 12 மட்டுமே…

2025ம் ஆண்டின் கடைசி கட்டத்திற்கு வந்துள்ளோம். இந்த ஆண்டு முடிவடைய இன்னும் 8 வெள்ளிக்கிழமைகள் மட்டுமே உள்ளன. இதுவரை கடந்து போன வெள்ளிக்கிழமைகள், மற்ற நாட்கள், பண்டிகை நாட்களில் 222 படங்கள் வரை வெளியாகி உள்ளன. வரும் வாரங்களில் சுமார் 50 படங்கள் வரை வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி வந்தால் தமிழ் சினிமாவின் இத்தனை வருட வரலாற்றில் ஒரே ஆண்டில் அதிகப் படங்கள் வெளியான ஆண்டு என 2025 புதிய சாதனையைப் படைக்கும்.

இந்த ஆண்டில் இதுவரையில் வெளியான 222 படங்களில் லாபம் தந்த படங்கள் என்று பார்த்தால் 12 படங்கள்தான் இருக்கும். வெற்றி சதவீதம் என்று பார்த்தால் வெறும் 5 சதவீதம்தான். இப்படி ஒரு மோசனமான சூழல் இதற்கு முந்தைய ஆண்டுகளில் கூட இருந்ததில்லை. இந்த வருடம் எதிர்பார்க்கப்பட்ட சில படங்கள் தோல்வியைத் தழுவி திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்தன.

வசூல் ரீதியாக அதிகம் வசூலித்த படங்கள் கூட லாபம் தராத நிலையில், குறைந்த அளவில் வசூலித்தாலும் நிறைந்த லாபத்தைக் கொடுத்த சில படங்களும் இந்த ஆண்டில் வெளிவந்துள்ளன. கோலிவுட் வட்டாரங்களில் நாம் விசாரித்த வரையில் ஓரளவிற்கு லாபம், மிதமான லாபம், நிறைய லாபம் தந்த படங்கள் எவையென்பதைப் பற்றிப் பார்ப்போம்.

டிராகன்
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், லியோன் ஜேம்ஸ் இசையமைப்பில், பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர் மற்றும் பலர் நடிப்பில் பிப்ரவரி 21ம் தேதி வெளிவந்த படம். ஒரு காதல் கதையாக வெளிவந்த இந்தப் படம் இளம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து பெரிய வரவேற்பை பெற்றது. படத்தின் பட்ஜெட் சுமார் 35 கோடி முதல் 40 கோடி என்கிறார்கள். இப்படம் 150 கோடி வரை வசூலித்து நிறைய லாபம் தந்த படங்களில் முதலிடத்தில் உள்ளது. படத்தின் பட்ஜெட், இதர செலவு போக தியேட்டர் வசூலாக 100 கோடி நிகர வசூல் வந்திருக்கும். ஜிஎஸ்டி, இதர வரிகள் போக படத்தை வாங்கியவர்களுக்கும், திரையிட்டவர்களுக்கும் நல்ல லாபத்தைக் கொடுத்த படம். அது தவிர சாட்டிலைட் உரிமை, ஓடிடி உரிமை ஆகியவை தயாரிப்பாளருக்கு பெரும் லாபத்தைக் கொடுத்திருக்கும் என்பது உறுதி.

டூரிஸ்ட் பேமிலி
அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில், ஷான் ரோல்டன் இசையமைப்பில், சசிகுமார், சிம்ரன் மற்றும் பலர் நடிப்பில் ஏப்ரல் 29ம் தேதி வெளியான படம். இந்தப் படத்திற்கு இப்படி ஒரு வரவேற்பு கிடைக்கும் என படக்குழுவினர் கூட எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பை இந்த ஆண்டில் பெற்ற ஒரே படம். இலங்கையிலிருந்து தமிழகம் வந்த ஒரு அகதிக் குடும்பத்தைப் பற்றியக் கதை. சுமார் 10 கோடிக்கும் குறைவான பட்ஜெட்டில் தயாரான இந்தப் படம் 90 கோடி வரை வசூலித்தது. பெரிய அளவில் விளம்பரச் செலவில்லாமல் ரசிகர்களின் வாய் வழி கருத்தால் அதிகம் பேரை தியேட்டர்கள் பக்கம் வரவழைத்த படம். சாட்டிலைட், ஓடிடி உரிமை ஆகியவை மூலமும் தயாரிப்பாளர்களுக்குத் தனி லாபம். டேபிள் பிராபிட் என்பது அதிலேயே வந்திருக்கும்.

மதகஜ ராஜா
சுந்தர் சி இயக்கத்தில், விஜய் ஆண்டனி இசையமைப்பில், விஷால், வரலட்சுமி, அஞ்சலி, சந்தானம் மற்றும் பலர் நடிப்பில் ஜனவரி 12ம் தேதி வெளியான படம். இப்படம் வெளியீட்டுக்குத் தயாராகி 12 ஆண்டுகளாக பல்வேறு சிக்கல்கள் காரணமாக வெளியாகாமல் இருந்தது. எப்படியோ அனைத்து சிக்கல்களையும் முடித்து படத்தை பொங்கலை முன்னிட்டுத் திரையிட்டார்கள். 12 வருடங்கள் கிடப்பில் இருந்த ஒரு படம் இன்றைய ரசிகர்களை ரசிக்க வைத்து படத்தை வெற்றி பெற வைத்தது தமிழ் சினிமாவின் ஆச்சரியங்களில் ஒன்று. சுமார் 15 கோடி பட்ஜெட்டில் தயாரான இந்தப் படம் 60 கோடிக்கும் கூடுதலாக வசூலித்து லாபத்தைத் தந்தது. சில சிக்கல்கள் காரணமாக இந்தப் படம் இன்னும் ஓடிடி தளங்களில் வெளியாகவில்லை.

குட் பேட் அக்லி
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், அஜித், த்ரிஷா மற்றும் பலர் நடிப்பில் ஏப்ரல் 10ம் தேதி வெளியான படம். அஜித் ரசிகர்களை மட்டும் திருப்திப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் ஒரு 'டான்' கதையாக வெளிவந்த படம் இது. அஜித் நடித்து இதே ஆண்டில் இதற்கு முன்பு வெளியான 'விடாமுயற்சி' ரசிகர்களை எதிர்பார்த்த அளவிற்கு திருப்திப்படுத்தவில்லை. ஆனால், இந்தப் படத்தில் ஹீரோயிசம் அதிகமாக இருந்ததால் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது. சுமார் 250 கோடி பட்ஜெட்டில் தயாரான படம். தமிழகத்தில் மட்டும் 100 கோடி வசூலைக் கடந்து லாபம் கொடுத்தாகச் சொல்கிறார்கள். இதர மாநிலங்களின் வசூல், ஒட்டு மொத்த அளவில் படம் நஷ்டம் என்பதே பாக்ஸ் ஆபீஸ் தகவல்.

தலைவன் தலைவி
பாண்டிராஜ் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையில், விஜய் சேதுபதி, நித்யா மேனன் மற்றும் பலர் நப்பில் ஜூலை 25ம் தேதி வெளியான படம். கணவன், மனைவிக்கு இடையேயான சண்டைதான் படத்தின் மையக்கரு. கொஞ்சம் சுவாரசியமாகச் சொன்னதாலும், விஜய் சேதுபதி, நித்யாவின் நடிப்பாலும் இந்தப் படம் ரசிகர்களைக் கவர்ந்தது. சுமார் 30 கோடி பட்ஜெட்டில் தயாரான இந்தப் படம் 100 கோடி வசூலைக் கடந்தது என தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. தியேட்டர் வசூலும் லாபத்தைக் கொடுத்தது. படத்தின் சாட்டிலைட், ஓடிடி ஆகியவையும் நல்ல விலைக்கு விற்கப்பட்டு தயாரிப்பாளருக்கு குறிப்பிடத்தக்க லாபத்தைக் கொடுத்தது.

குடும்பஸ்தன்
ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், வைசாக் இசையமைப்பில், மணிகண்டன், சான்வே மேக்னா, குரு சோமசுந்தரம் மற்றும் பலர் நடிப்பில் ஜனவரி 24ம் தேதி வெளியான படம். காதல் திருமணம் செய்து கொண்ட ஒரு தம்பதி வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்னைகள்தான் படத்தின் கதை. கலகலப்பாகவும் நகர்ந்த படம் என்பதால் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது. சுமார் 10 கோடி பட்ஜெட்டில் தயாரான இந்தப் படம் 40 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறைந்த பட்ஜெட்டில் நிறைவான வசூலைத் தந்த இந்த வருடத்தின் ஆரம்ப காலப் படங்களில் இதுவும் ஒன்று. கூடுதல் வருவாயை சாட்டிலைட் உரிமை, ஓடிடி உரிமை பெற்றுத் தந்தன.

மாமன்
பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில், ஹேஷம் அப்துல் வகாப் இசையமைப்பில், சூரி, ராஜ்கிரண், ஐஸ்வர்ய லெட்சுமி, சுவாசிகா மற்றும் பலர் நடிப்பில் மே 16ம் தேதி வெளியான படம். ஒரு தாய்மாமனுக்கும், அவனது அக்கா மகனுக்கும் இடையே உள்ள பாசப் போராட்டம்தான் கதை. குடும்பக் கதை என்பதாலும், கொஞ்சம் சென்டிமென்ட், கொஞ்சம் கலகலப்பு என்பதாலும் படம் குறிப்பிடத்தக்க வரவேற்பைப் பெற்றது. சுமார் 15 கோடி ரூபாய் செலவில் தயாரானதாக சொல்லப்பட்ட படம் 40 கோடிக்கும் கூடுதலாக வசூலித்தது. படத்தின் சாட்டிலைட், ஓடிடி உரிமை மூலமே படத்திற்கு நல்ல வருவாய் கிடைத்தது.

கூலி
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடிப்பில் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியான படம். தமிழ்த் திரையுலகத்தில் முதன் முதலில் 1000 கோடி வசூல் சாதனை புரியப் போகும் படம் என்ற சாதனையை இந்தப் படம் நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது நடக்கவில்லை. 600 கோடிக்கும் அதிகமாக இப்படம் வசூலித்தது என்பது தகவல். படத்தின் பட்ஜெட் சுமார் 400 கோடி வரை இருக்கலாம். முதல் நாள் வசூலாக 151 கோடி வசூலித்து, தமிழ் சினிமாவில் புதிய சாதனையைப் படைத்த படம். இப்படத்தின் லாபம் குறித்தத் தகவல்கள் அதிகமாக வெளியாகவில்லை. குறைவான லாபத்தைக் கொடுத்திருக்கலாம் என்று மட்டுமே வெளியில் சொல்கிறார்கள்.

மதராஸி
ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், சிவகார்த்திகேயன், ருக்மிணி வசந்த் மற்றும் பலர் நடிப்பில் செப்டம்பர் 5ம் தேதி வெளியான படம். இப்படம் 100 கோடி வசூலைக் கடந்ததாக அறிவித்திருந்தார்கள். ஆனால், அவ்வளவு வசூல் இந்தப் படத்திற்கு போதாது என்பதுதான் நிலவரமாக இருந்துள்ளது. படத்தின் பட்ஜெட்டைப் பற்றி விசாரித்தால் 150 கோடி என்கிறார்கள். தமிழக வினியோக உரிமை 40 கோடிக்கு விற்கப்பட்டதாகத் தகவல். வசூலித்த தொகை 60 கோடிக்கும் கூடுதல். ஒரு சில ஏரியாக்களில் லாபம் கிடைத்திருக்க வாய்ப்புண்டு. சாட்டிலைட், ஓடிடி உரிமை நல்ல விலைக்கு விற்கப்பட்டது. படத்தின் பட்ஜெட் குறைவாக இருந்திருந்தால் இந்தப் படம் நிறைவான லாபத்தைக் கொடுத்திருக்கும் என்கிறார்கள்.

பைசன்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நிவாஸ் கே பிரசன்னா இசையமைப்பில், துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன் மற்றும் பலர் நடிப்பில் அக்டோபர் 17ம் தேதி வெளியான படம். கிராமத்தில் இருக்கும் ஒரு கபடி வீரர் ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு எப்படி வெற்றி பெறுகிறார் என்பதுதான் படத்தின் கதை. கிராமத்து மண் வாசனையுடன், ஒரு லட்சிய விளையாட்டு வீரனின் கதை என்பதால் ரசிகர்களைக் கவர்ந்தது. தமிழக வினியோக உரிமையாக 15 கோடிக்கு விற்கப்பட்ட படம் 40 கோடி வசூலைக் கடந்து லாபத்தைக் கொடுத்துள்ளது.

டியூட்
கீர்த்திஸ்வரன் இயக்கத்தில், சாய் அபயங்கர் இசையமைப்பில், பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு மற்றும் பலர் நடிப்பில் அக்டோபர் 17ம் தேதி வெளியான படம். காதல் கதைதான் என்றாலும் கொஞ்சம் சர்ச்சையை ஏற்படுத்திய படம். வழக்கம் போல இளம் ரசிகர்களின் ஆதரவால் இந்த வருடத்தின் துவக்கத்தில் வந்த 'டிராகன்' படத்தை அடுத்து இந்தப் படமும் பிரதீப் ரங்கநாதனின் வெற்றிப் பட்டியலில் சேர்ந்தது. சுமார் 35 கோடி பட்ஜெட்டில் உருவான படம் 120 கோடி வரை வசூலித்திருப்பதாகத் தகவல்.

காந்தாரா சாப்டர் 1
ரிஷப் ஷெட்டி இயக்கம் நடிப்பில் அக்டோபர் 2ம் தேதி வெளியான டப்பிங் படம் 'காந்தாரா சாப்டர் 1'. உலகம் முழுவதும் 800 கோடி வசூலைக் கடந்து சாதனை புரிந்த படம். தமிழகத்தில் இப்படம் சுமார் 40 கோடிக்கும் அதிகமாக விற்கப்பட்டதாகச் சொன்னார்கள். 60 கோடிக்கும் அதிகமாக இப்படம் வசூலித்துக் கொடுத்துள்ளது. படத்தின் விலை இன்னும் குறைவாக இருந்திருந்தால் லாபம் அதிகரித்திருக்கும். ஒரு டப்பிங் படம் இந்த அளவிற்கு விற்கப்பட்டது ஆச்சரியம்தான். 'காந்தாரா' படத்தின் வசூல் தந்த நம்பிக்கையில் இந்தப் படத்தை அவ்வளவு விலைக்கு விற்றிருக்கிறார்கள். இந்த வருடம் இதுவரையில் வெளிவந்த டப்பிப் படங்களில் அதிக வசூலைக் குவித்த படம் இதுதான்.

2025 அக்டோபர் 31ம் தேதி வரை வெளியான 222 படங்களில் வசூல் ரீதியாக வரவேற்பைப் பெற்ற மேற்குறிப்பட்ட 12 படங்கள் தவிர, சில சிறிய பட்ஜெட் படங்கள் சில லட்சங்கள் லாபத்தைக் கொடுத்த படங்களாக இருந்துள்ளன. அவற்றில் சில படங்கள் சாட்டிலைட், ஓடிடி உரிமையால் மட்டும் போட்ட முதலீட்டை எடுத்துள்ளன.

ஆனால், ஆரம்பத்தில் நாம் குறிப்பிட்டது போல 5 சதவீத வெற்றி என்பது மிகமிகக் குறைவு. ஒரே நாளில் அதிக படங்கள் வெளியீடு, சரியான இடைவெளியில் படங்களை வெளியிடாதது என பல காரணங்கள் திரைப்படங்களின் வசூலை பாதிக்கிறது. ஒவ்வொரு முறையும் அது பற்றி பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். ஆனால், சரியான முடிவுகளை எடுக்க வேண்டிய திரைப்பட சங்கங்கள் கூடிப் பேசி பிரச்சனைகளைத் தீர்த்தால் தமிழ் சினிமாவின் வெற்றி சதவீதம் இன்னும் வீறுநடை போடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !