உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சினிமாவில் எதுவும் நிரந்தரமில்லை! : நந்திதா

சினிமாவில் எதுவும் நிரந்தரமில்லை! : நந்திதா


'அட்டகத்தி' என்ற படத்தில் தமிழில் அறிமுகமானவர் கன்னட நடிகை நந்திதா. அதன்பிறகு 'எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி' என பல படங்களில் நடித்தவர், கடைசியாக 2024ம் ஆண்டு வைபவுக்கு ஜோடியாக 'ரணம்' என்ற படத்தில் நடித்தார். தற்போது தெலுங்கில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், ''சிறுவயதிலிருந்தே எதிர்காலத்தில் என்ன ஆக வேண்டும் என்று யார் கேட்டாலும், நடிகையாக வேண்டும் என்றுதான் நான் சொல்வேன். அந்த அளவுக்கு நான் சினிமா வெறி பிடித்தவள். அதன் காரணமாகவே நான் ஏற்று நடித்த அனைத்து கதாபாத்திரங்களிலும் முழுமையாக ஈடுபட்டு காட்டி நடித்து வந்துள்ளேன். மேலும் சினிமாவை பொறுத்தவரை எதுவுமே நிரந்தரமில்லை. அதனால் இரண்டு படங்கள் வெற்றி பெற்றதும் நான்தான் டாப் நடிகை என்று நினைத்து கொள்ளக்கூடாது. சினிமாவில் எப்போது என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.

இதை நான் கடந்து வந்த பாதை மூலம் கற்றுக் கொண்டேன். அதோடு நான் நடிக்க மறுத்த சில படங்கள் சூப்பர் ஹிட்டாகியுள்ளன. அந்தளவுக்கு பல கதைகளை சரியாக கணிக்க முடியவில்லை. என்றாலும் அதை நினைத்து நான் வருத்தப்பட்டதும் இல்லை. என்ன நடக்க வேண்டுமோ அது நடந்து கொண்டிருக்கிறது. அதனால் நடக்காத விஷயங்களை நினைத்து நான் ஒரு நாளும் பீல் பண்ணியது கிடையாது. அந்த அளவுக்கு இந்த சினிமா உலகம் எனக்கு ஒரு பெரிய பாடத்தை கற்றுக் கொடுத்து விட்டது. தற்போது பட வாய்ப்புகள் குறைந்திருந்தாலும் எதிர்காலத்தில் நானே எதிர்பார்க்காத வாய்ப்புகள் கூட கிடைக்கும். அதற்காக பொறுமையாக காத்திருக்கிறேன்'' என்று கூறியிருக்கிறார் நந்திதா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !